‘காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோருக்கு நிதியுதவி வழங்கப்படும்’

“காணாமலாக்கப்பட்டோர், இராணுவ முகாம்கள், காடுகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளதாக, அவர்களின் உறவினர்கள் என்னிடம் கூறியதுக்கமைய, நான் அவர்களை தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே அவர்களின் பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால், அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்” என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (05) தெரிவித்துள்ளார்.

யாழ்.மாநகர சபை மைதானத்தில் இன்று (05) இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“வடக்கிலுள்ள அனைவரையும் சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது. நான் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் இங்கு வந்து பொதுவான கட்சிச் சின்னத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தேன். அதன் போது இங்குள்ள மக்களும் அரசியல் தலைவர்களும் முழுமையான ஆதரவை எனக்கு வழங்கியிருந்தனர்.

வடக்கு, தெற்கு என்ற பேதமில்லாது, எனக்கு ஆதரவை வழங்கிய கட்சிகள் மற்றும் மக்களுக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன, மத ரீதியில் பிரிவினை இல்லாது அனைவரும் ஒன்றாக இணைந்து பயணிக்க வேண்டும். என் மீது கொண்ட நம்பிக்கை அடிப்படையில், எனக்கு வாக்களித்தமைக்காக நானும் பல மாற்றங்களை மக்களுக்காக ஏற்படுத்தி வருகின்றேன்.

யுத்தம் முடிவடைந்த பின்னரும் பலர் காணாமல் போயிருந்தனர். உண்மையை எழுதும் ஊடகவியலாளர்களும் காணாமல் போயிருந்ததுடன், கொலையும் செய்யப்பட்டிருந்தனர். மேலும் நாட்டை விட்டும் பலர் தப்பிச் சென்றிருந்தனர். இதனால் எமது நாடு மீது, முழு உலகமுமே கோபப்பட்டது. நாங்கள் தனிமைப்படுத்தப்பட்டோம்.

இவ்வாறான நிலையில், உலக தலைவர்களைச் சந்தித்தேன். மேலும் ஐ.நா செயலாளர் நாயகத்தையும் சந்தித்து, மனித உரிமைகள் மற்றும் சுதந்திரம் பாதுகாக்கப்படவேண்டுமென்றும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும் கோரியிருந்தேன். இதன் பின்னர் கடந்த 3 வருடத்தில் காணாமல் போனவர் என்று யாருமே இல்லை. அரசியல் கொலைகளும் இல்லை. யாரும் நாட்டை விட்டு தப்பியோடவும் இல்லை.

இதேவேளை, இந்த நாட்டில் வாழும் அனைத்து இன மக்களும் சகோதரர்கள் போன்று பயமில்லாது, வாழ வேண்டும், என்றொரு கனவு எனக்கு உள்ளது.

மீள்குடியேற்றத்துக்காக, கடந்த 2017 ஆம் ஆண்டு வடபகுதிக்கு அனுப்பிய பணத்தில் நூற்றுக்கு அறுபது வீதமான பணம் செலவழிக்கப்படாமல் மீண்டும் அரசாங்கத்திடம் திரும்பிச் சென்றிருக்கின்றது. நாங்கள் அந்தப் பணத்தை வீடு கட்டுவதுக்காக கொடுத்திருந்தோம். பணம் திரும்பிச் செல்வதுக்கு அரசியல் கட்சிகளுக்கிடையில் இருக்கக் கூடிய ஒற்றுமையீனமே காரணம். இதனால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தான் பாதிப்பு. தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகள் பிரிந்து வாக்கு கேட்கின்றார்கள். ஆனால் தேர்தல் முடிந்த பின்னர் எல்லோரும் ஒன்றுபட்ட நாட்டுக்காக நாட்டு மக்களுக்கான சேவை செய்ய வேண்டும்.

அதனால் ஐனாதிபதியாக நான் உங்களுக்கு பணியாற்ற வேண்டும். அவ்வாறு சேவையாற்றக் கூடிய பாலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.

ஏழை மக்களுக்கு, உதவி செய்வதுக்கான பணத்தைத் தான் அரசியல்வாதிகள் சிலர் களவு செய்கின்றார்கள். மஹிந்த ராஜபக்ஷ காலத்தில் எவ்வளவு பணம் களவாடப்பட்டது என்று உங்களுக்கு தெரியும்.

மத்திய வங்கியில் கொள்ளையடித்த சிலர், எங்களது அரசாங்கத்திலும் இருப்பதாக அறிக்கைகளில் கூறப்பட்டிருக்கின்றது. எனக்கு முன்னைய அரசாங்கம், இன்றைய அரசாங்கம் என்று வேறுபாடில்லை. யார் தவறு செய்தாலும் அவர்கள் எல்லோருக்கும் ஒரே விதமாகவே தண்டனை வழங்குவேன். எந்தக் கட்சிக்காரர்கள், நண்பர்கள், சொந்தக்காரர்கள் என்று நான் பார்க்கவே மாட்டேன்.

இதேபோன்று, ஸ்ரீலங்கா மற்றும் மிகின்லங்கா விமான சேவைகள் போன்றவற்றில் கோடிக்கணக்கில் களவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தக் களவுகளை தேடிப்பார்க்க புதிய ஆணைக்குழுவை அமைத்திருக்கின்றேன். அதிலிருந்து யார், யார் கள்வர்கள் என்று தெட்டத் தெளிவாக எங்களுக்குத் தெரியும். இவையெல்லாவற்றுக்கும் நாம் பயப்படவேண்டியதில்லை.

காங்கேசன்துறை- பருத்தித்துறை வீதியை விடுவித்துள்ளோம். மேலும் இங்கு படையினரிடமுள்ள காணிகளில் 75 வீதமான காணிகளை மக்களிடம் கையளித்து விட்டோம். ஏனைய காணிகளையும் விரைவாக விடுவிப்போம்.

இதேவேளை வடக்கைச் சேர்ந்த பலர், காணாமல் போனோர் பற்றி கூறி வருகின்றனர். அவர்களது உறவினர்கள் என்னை சந்தித்துக் கலந்துரையாடிருக்கின்றனர். இதன்போது இராணுவமுகாம் மற்றும் காடுகளில் மறைத்து வைத்திருப்பதாக என்னிடம் கூறியதுக்கமைய, நானும் தேடிப்பார்த்தேன். ஆனால் அவர்கள் எங்கும் இல்லை. எனவே பெற்றோருக்கு நிதி உதவி வழங்க வேண்டுமாக இருந்தால் அதனையும் அரசாங்கம் என்ற வகையில் நிச்சயமாகச் செய்வோம்.

யுத்தத்தால் வடக்கில் காணாமல் போனது போன்று தெற்கிலும் தமிழ் சிங்கள முஸ்லிம் மக்கள் பலர் காணாமல் போயிருக்கின்றனர். எனவே அரசாங்கம் என்ற வகையில் என்னால் செய்யக் கூடிய அனைத்தையும் நியாயமான முறையில் செய்வேன்” என தெரிவித்தார்.

-tamilmirror.lk

TAGS: