கூட்டமைப்பின் தேர்தல் இலக்கு!

இரண்டு மாதங்களுக்கும் மேலாக நீடித்து வந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான பிரசார நடவடிக்கைகள் இன்று (புதன்கிழமை) நள்ளிரவோடு முடிவுக்கு வருகின்றன. அதன் பின்னரான 55 மணித்தியால இடைவெளி என்பது, வாக்களிப்புக்கு முந்தையை பகுப்பாய்வுக் காலம்.

அதன்போது வாக்காளர்கள், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக்குழுக்களின் தேர்தல் விஞ்ஞாபனங்கள், கடந்த கால அரசியல் நடவடிக்கைகள், வழங்கிய வாக்குறுதிகளுக்கான அர்ப்பணிப்பு, நடைமுறை அரசியலை வெற்றிகொள்வதற்கான சமயோசிதம் மற்றும் தகுதியான வேட்பாளர்கள் உள்ளிட்ட விடயங்களைக் கருத்தில் கொண்டு வாக்களிக்க முடியும்.

ஆனால், இந்த விடயங்கள் பெரும்பாலும் கட்சிகளின் ஆதரவாளர்களுக்குப் பொருந்துவதில்லை. கட்சிக்கும், தலைமைக்குமான அவர்களின் விசுவாசம் என்பது எதையும் சிந்திக்கவும் அனுமதிப்பதில்லை. இந்தநிலை, தெற்கில் மாத்திரமல்ல, வடக்கிலும் படவிப் படர்ந்திருக்கின்றது. அதுபோல, தேர்தல்க் காலங்களை எப்போதுமே உணர்ச்சி வசப்பட்ட நிலையில் பேணுவதற்கே, பெரும்பாலான கட்சிகள் விரும்புகின்றன. பிரசாரக் கூட்டங்களில் பெரும் குரலெடுத்து ஆற்றப்படும் உரைகளில் விடயதானங்களைத் தாண்டி, உணர்ச்சியூட்டல்களே அதிகம் இடம்பெறுகின்றன. அந்த உணர்ச்சியூட்டல்கள் கூட்டங்களில் ஆரவாரங்களை உண்டு பண்ணும்; சமூக ஊடகங்களில் பெருமளவுக்கு பகிரப்படும். ஊடகங்களில் தலைப்புச் செய்திகளாகும்.

எனினும், சாதாரண வாக்காளர்களிடம் தேர்தல் காலமொன்று எவ்வாறான தாக்கத்தைச் செலுத்துகின்றது என்பதுதான் இறுதி வெற்றிகளைத் தீர்மானிக்கின்றது. பல நேரங்களில் ஆரவாரங்களையும் அடிதடிகளையும் கண்டு இரசிக்கும் மனம், வாக்களிக்கும்போது, அவற்றைக் கருத்தில் கொள்வதில்லை. தமிழ்த் தேசிய அரசியலில் இதுவே பெரும்பாலும் நிகழ்ந்தும் இருக்கின்றது.

கட்சிகளுக்குத் தொண்டர்கள், ஆதரவாளர்களைக் கொண்ட வாக்கு வங்கி பிரதானமானது. அந்த வாக்கு வங்கியின் மேல் நின்றுதான், சாதாரண வாக்காளர்களைத் தங்கள் பக்கம் சாய்ப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். அதுதான், இலகுவான வெற்றிகளைப் பதிவு செய்யவும் உதவும். ஆனால், வாக்கு வங்கியற்ற நிலையில், தேர்தல் அரசியலை வெற்றி கொள்வது என்பது, பெரும் முனைப்புகள் சரியான தருணத்தில் ஒன்றிணையும் போதுதான் நிகழ முடியும். அப்படியான சந்தர்ப்பங்கள் வெகு சிலவே உலகம் பூராகவும் நிகழ்ந்திருக்கின்றன.

இம்முறை, இந்த உள்ளூராட்சித் தேர்தல் என்பது கிராமங்கள்- நகரங்களின் தூய்மை, அழகு, அபிவிருத்தி என்கிற விடயங்களைத் தாண்டி, கட்சிசார் அதிகாரப் போட்டியாகவே மாறியிருக்கின்றது. குறிப்பாக, வாக்கு வங்கியைத் தக்க வைப்பது சார்ந்த போட்டி. தெற்கில், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரியாத வாக்குகளோடு ரணில் முன்னணி வகிக்க, சுதந்திரக் கட்சியின் வாக்கு வங்கிக்கான போட்டியில் மைத்திரியும் மஹிந்தவும் மோதிக் கொண்டிருக்கின்றார்கள். அதில், மஹிந்தவுக்கான வாய்ப்புகள் அதிகம் என்பது மைத்திரியை ஆட்டம் காணச் செய்திருக்கின்றது.

வடக்கு, கிழக்கிலோ, ‘ஏக ஆணை’க்கு நெருக்கமான நிலையைத் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான முயற்சிகளில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சம்பந்தனும் ஈடுபட்டிருக்கின்றார்கள்.

வடக்கு, கிழக்கில், 2004ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் தொடக்கம், வீட்டுச் சின்னத்தினூடு தமிழ் மக்களின் பெரும் ஆணை பெற்றுவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு, இந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலை வெற்றி கொள்வதில் பெரிய பிரச்சினைகள் இல்லை. எனினும், வெற்றிக்கு அப்பால் கூட்டமைப்புக்கு உள்ள சவால் என்பது வாக்களிப்பு வீதம் மற்றும் அதிருப்தி வாக்குகளின் அளவு தொடர்பிலானது. அந்த இரண்டு விடயங்களிலேயே கூட்டமைப்பின் முக்கியஸ்தர்கள் அதிக கரிசனை கொண்டிருக்கின்றார்கள்.

வாக்களிப்பு வீதத்தின் வீழ்ச்சியும், அதிருப்தி வாக்குகளின் அதிகரிப்பும் கூட்டமைப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறும். ஏனெனில், கூட்டமைப்புக்கு மாற்றான அணி அல்லது கூட்டு என்பது தோல்விப் பயத்தின் காரணத்திலேயே இன்றுவரை நிகழாமல் போயிருக்கின்றது.

கூட்டமைப்புக்குள் இருந்து கொண்டே கூட்டமைப்புக்கு எதிராகச் செயற்படும் முதலமைச்சர் விக்னேஸ்வரனால், இன்னமும் கூட்டமைப்புக்கு மாற்றான அணியில் வெளிப்படையாக இணைய முடியவில்லை. அதற்கு, கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் அவரின் அறிக்கையைப் புறந்தள்ளி மக்கள் கூட்டமைப்புக்கு அளித்த வெற்றியும் முக்கிய காரணமாகும். அவ்வாறான நிலையில், கூட்டமைப்பு மீதான அதிருப்தி வாக்குகளாக இன்னோர் அணிக்குக் கணிசமாக கிடைக்குமானால், மாற்று அணியொன்றுக்கு முதலமைச்சர் தலைமை வகிப்பது தொடர்பில் அவரின் ஆலோசகர்களினால் இன்னும் இன்னும் அழுத்தங்கள் வழங்கப்படலாம். அது, அடுத்து வரப்போகும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டமைப்புக்கு எதிரான பலமான மாற்று அணியொன்றை உருவாக்கவும் உதவலாம்.

தனது 85ஆவது பிறந்த தினத்தை நேற்றுமுன்தினம் கடந்த சம்பந்தன், வயது மூப்பின் காரணமாக எழும் அனைத்துச் சிக்கல்களையும் தாங்கிக் கொண்டு, இரண்டு மூன்று மணித்தியாலங்கள் நீளும் பிரசாரக் கூட்டங்களில் காத்திருந்து, இறுதி உரை ஆற்றுகின்றார். இந்த உள்ளூராட்சித் தேர்தலில் பிரதான பிரசாரக் கூட்டங்கள் ஒன்றிரண்டில் மாத்திரம் சம்பந்தன் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஒவ்வொரு நாளும் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கின்றார். தான் கலந்து கொள்ள முடியாத கூட்டங்களை நோக்கி, சுமந்திரனை முன்னிறுத்துகின்றார். கடந்த சில நாட்களாக வடக்கு, கிழக்கில் அதிகளவு பயணம் செய்து, அதிக கூட்டங்களில் பேசியவராக சுமந்திரனே இருப்பார்.

கூட்டமைப்புக்குள்ளேயே சுமந்திரனோடு முரண்படுவதாகக் காட்டிக் கொள்ளும் பலரும், அவரின் உரையைப் பிரசாரக் கூட்டங்களில் பிரதானப்படுத்த நினைக்கின்றார்கள். அதுதான், அதிருப்தி மனநிலையிலுள்ள மக்களை நோக்கி, தெளிவூட்டல்களைச் செய்யமுடியும் என்றும் நம்புகின்றார்கள்.

புதிய அரசமைப்பின் இடைக்கால அறிக்கைக்கான ஒரு வகையிலான அங்கிகாரத்தை சம்பந்தனும் சுமந்திரனும் இந்தத் தேர்தலினூடாகத் தமிழ் மக்களிடம் கோரி நிற்கின்றார்கள். அவ்வாறான நிலையில், கூட்டமைப்பின் எந்தத் தலைவர்களுக்கும் இந்தத் தேர்தல் குறித்து இல்லாத கரிசனை, அவர்கள் இருவருக்கும் இருப்பதுவும் இயல்புதான்.

கிழக்கு மாகாணத்திலுள்ள தமிழ்க் கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்வது குறித்து கூட்டமைப்புக்கு எந்தத் தயக்கமும் இல்லை. கூட்டமைப்பின் கூட்டங்களில் எதிர்பார்க்கப்பட்ட அளவைக் காட்டிலும் மக்கள் திரள்கின்றார்கள். கிழக்கில், கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளுக்கிடையில் பகிரப்பட்ட ஆசனங்களின் அளவு சார்ந்ததுதான் சிறிய அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. அதுவும், கடந்த சில வாரங்களில் பெரியளவில் வெளியே வரவில்லை.

ஆனால் வடக்கில், குறிப்பாக யாழ். மாநகர சபையை வெற்றி கொள்வது சார்ந்து கூட்டமைப்பு குறிப்பிட்டளவு சிக்கல்களை எதிர்கொள்ளவே செய்கின்றது. அது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி உள்ளிட்ட எதிரணியினரால் மாத்திரமல்ல, தமிழரசுக் கட்சிக்குள் இருக்கின்ற மேயர் வேட்பாளர் தெரிவின் சிக்கலினாலும் எழுந்திருக்கின்றது.

கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னிருந்து, வடக்கு மாகாண சபை உறுப்பினராக இருந்த இம்மானுவேல் ஆர்னோல்டை யாழ்.மேயராக முன்னிறுத்துவது தொடர்பில் சுமந்திரன் தரப்பு ஈடுபட்டிருந்தது. அதற்கு, சம்பந்தனின் ஒத்துழைப்பும் இருக்கவே செய்தது. ஆனால், தமிழரசுக் கட்சியின் சிவஞானம் தரப்பு, மாவை சேனாதிராஜாவினூடு வழங்கிய சிக்கல்களே, மேயர் வேட்பாளர் ஆர்னோல்ட்தான் என்று அறிவித்த பின்னரும், ‘ஆம், இல்லை’ என்கிற குளறுபடிகளை ஏற்படுத்த வைத்தது.

இவ்வாறான நிலை, யாழ். மாநகர சபையில் கூட்டமைப்புக்கு வெற்றியைத் தேடித் தந்தாலும், அதிருப்தி வாக்குகளின் அளவை அதிகரிக்கும் பட்சத்தில், அதை ஒரு குறியீடாக முன்வைத்து, எதிர்வரும் காலங்களில் கூட்டமைப்புக்கு மாற்றான அணி பலப்படும் சூழல் உருவாகலாம் என்பது கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களின் பயம்.

வடக்கு, கிழக்கில் ஏனையை கிராமங்களையும் நகரங்களையும் வெற்றி கொள்வது எவ்வளவு முக்கியமோ, அதேளவுக்கு சிக்கல்கள் இன்றி, அதிருப்தி வாக்குகள் வேறுகட்சிகளுக்கு விழாமல் யாழ். மாநகர சபை, நல்லூர் நகர சபை ஆகியவற்றைக் கைப்பற்றுவதும் கூட்டமைப்புக்கு அவசியமானது. அதன்போக்கிலேயே கூட்டமைப்பு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

‘கூட்டமைப்பு ஒற்றையாட்சிக்கு இணங்கிவிட்டது மற்றும் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக கூட்டமைப்பின் (சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த) பாராளுமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் தலா இரண்டு கோடி ரூபாய் இலஞ்சம் பெற்றுவிட்டனர்’ என்கிற குற்றச்சாட்டுகளுக்கு இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு பதிலளிக்க வேண்டியேற்பட்டிருக்கின்றது.

அத்தோடு, புதுக்குடியிருப்பு பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட மக்களை, விசேட அதிரடிப்படை சோதனையிட்ட விடயம் தமிழ் மக்களிடம் கடும் எரிச்சலைத் தோற்றுவித்திருக்கின்றது. இவற்றையெல்லாம் எதிர்கொண்டு நின்று, தமிழ் மக்களைச் சிந்தாமல் சிதறாமல் தம்முடனேயே வைத்துக் கொள்வது என்பது, அவ்வளவு இலகுவான காரியமல்ல. அதனை, சாதிப்பதுதான் கூட்டமைப்பின் இன்றைய இலக்கு. அது நிகழ்ந்துவிட்டால், அடுத்த தேர்தல்கள் அவ்வளவு சிக்கலாக இருக்காது.

(புருஜோத்தமன் தங்கமயில்)

(தமிழ்மிரர் பத்திரிகையில் (பெப்ரவரி 07, 2018) வெளியான கட்டுரை. நன்றி அறிவித்தலோடு மீளப்பதிகின்றோம்: ஆசிரியர் குழு semparuthi.com

TAGS: