இலங்கை ஜனாதிபதியின் உத்தரவால், ஆடிப்போன தமிழர்கள்.. இதுதான் நல்லாட்சியா..?

பிரித்தானியாவிற்கான ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலக பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான அதிகாரி பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை உடனடியாக அந்த பதவியில் மீண்டும் அமர்ந்துமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளார்.

பிரித்தானியாவிலுள்ள ஸ்ரீலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு முன்னால் ஸ்ரீலங்காவின் சுதந்திர தினத்தன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட புலம்பெயர் தமிழர்களின் கழுத்தை அறுப்பதாக சைகை மூலம் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ அச்சுறுத்தியிருந்தார்.

இது தொடர்பான காணொளி சமூக வலைத்தளங்களிலும் இணையத்தளங்களிலும் வெளியானதை அடுத்து அவரை உடனடியாக பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் அழுத்தங்கள் தீவிரமடைந்ததுடன், அவரை உடனடியாக கைதுசெய்து விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என லண்டனிலுள்ள காவல்துறை நிலையங்களிலும் முறைப்பாடுகளும் பதிவுசெய்யப்பட்டன.

அதேவேளை பிரிகேடியர் பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை உடனடியாக நாடு கடத்த வேண்டும் என்றும் தமிழருக்கான பிரித்தானியாவின் அனைத்து கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் குழுவினர் பிரித்தானிய வெளிவிவாகர அமைச்சர் பொரிஸ் ஜோன்சனிடமும் கோரிக்கை விடுத்திருந்தன.

இந்த நிலையில் நேற்றைய தினம் அவசர அறிவித்தல் ஒன்றை விடுத்த ஸ்ரீலங்கா வெளிவிவகார அமைச்சு, பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை பிரித்தானியாவிற்கான ஸ்ரீலங்காவின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அதிகாரி பதவியில் இருந்து பணிநீக்கம் செய்யப்படுவதாக அறிவித்திருந்தது.

அதேவேளை பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவின் நடவடிக்கைகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சும் இராணுவமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் கூறியிருந்தது.

இதனையடுத்து பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோ பணிநீக்கம் செய்யப்பட்டது தொடர்பில் இராணுவ தளபதி லெப்ரினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தொடர்புகொண்டு நிலைமைகளை தெளிவுபடுத்தியதாகவும் இதனை அடுத்தே உடனடியாக பிரிகேடியர் பிரியங்க பெர்ணாண்டோவை மீண்டும் பணியில் அமர்த்துமாறு ஸ்ரீலங்கா ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக இராணுவம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சிற்கு நேரடியாக உத்தரவொன்றை பிறப்பித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி கொழும்பிலுள்ள ஊடகங்களுக்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

-athirvu.com

TAGS: