பினாங்கு மாநில அரசு பெருஞ்செலவில் சிசிடிவி கேமராக்களைப் பொருத்தியிருப்பதாக மசீச குற்றஞ்சாட்டியதற்கு எதிர்வினையாற்றிய மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் செள கொன் இயோ, கூட்டரசு அரசாங்கம் பொருத்திய கேமராக்கள் ஒவ்வொன்றுக்கும் ரிம157,800 செலவிடப்பட்டுள்ளதே, அது மாநில அரசு கொடுத்த விலையைவிட இரு மடங்காயிற்றே என்று பதிலடி கொடுத்துள்ளார்.
2015-இல் வீடமைப்பு, ஊராட்சி அமைச்சு பினாங்கு தீவில் ரிம5.049 மில்லியன் செலவில் 32 கேமராக்களைப் பொருத்தும் திட்டத்தை அமல்படுத்தியது என செள கூறினார்.
“அதன்படி பார்த்தால் ஒரு கேமரா விலை ரிம157,800 என்றாகிறது.
“சிசிடிவி திட்டத்துக்கு பினாங்கு மாநகர் மன்றம் (எம்பிபிபி) செலவிட்டதைவிட அமைச்சு அதிகம் செலவிட்டது ஏன் என்று அது விளக்க முன்வருமா?” என்றவர் வினவினார்.
எம்பிபிபி கேமிராக்கள் ஒவ்வொன்றின் விலை ரிம59,707 என்றும் அது கோலாலும்பூர் மாநகராட்சி மன்றம் கேமிராக்களுக்குச் செலவிட்ட தொகையைவிட ஐந்து மடங்கு அதிகம் என்றும் பினாங்கு மசீச கூறிக்கொண்டதற்கு பினாங்கு டிஏபி தலைவர் அவ்வாறு கூறினார்.