கைரி: “வெற்றி பெற முடியாதவர்” எனத் தாம் கருதப்பட்டால் அதனை எதிர்க்கப் போவதில்லை

அடுத்த பொதுத் தேர்தலில் தாம் வெற்றி பெற முடியாத வேட்பாளர் எனக் கருதப்பட்டு தம்மை வேட்பாளராக நிறுத்துவதில்லை என தலைமைத்துவம் முடிவு செய்தால் அதனை எதிர்க்கப் போவதில்லை என அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறியிருக்கிறார்.

வேட்பாளர்களை முடிவு செய்வது அம்னோ தலைவர் நஜிப் அப்துல் ரசாக்கின் விருப்புரிமை என்றும் அம்னோ, பிஎன் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெறக் கூடிய வேட்பாளர்களை இறுதி முடிவு செய்வது அவர் என்றும் கைரி குறிப்பிட்டார்.

“நான் வெற்றி பெறக் கூடிய வேட்பாளர் இல்லை என அம்னோ த,லைவர் முடிவு செய்தால் நான் அந்த முடிவை ஏற்றுக் கொள்வேன்”, என நேற்றிரவு கோத்தாபாருவில் நிகழ்ச்சி ஒன்றில் கைரி கூறினார்.

கட்சியின் வெற்றியை உறுதி செய்வதே மிக முக்கியம் என்றார் அவர்.

அந்த விவகாரம் மீது கட்சித் தலைமைத்துவம் எடுக்கும் எல்லா முடிவுகளையும் ஏற்றுக் கொள்ளுமாறும் அவர் கட்சி உறுப்பினர்களையும் தலைவர்களையும் கேட்டுக் கொண்டார்.

“தேர்தலில் வேட்பாளராகத் தாங்கள் தேர்வு செய்யப்படாததால் மற்ற வேட்பாளர்களை கீழறுப்புச் செய்ய விரும்பும் உறுப்பினர்கள் பற்றி இளைஞர் இயக்கம், தலைமைத்துவத்துக்குத் தகவல் கொடுக்கும்.”

வேட்பாளராகத் தெரிவு செய்யப்படாதவர்கள் கட்சித் தலைமைத்துவம் நிர்ணயித்துள்ள சில  நிபந்தனைகளை தாங்கள் பூர்த்தி செய்யவில்லை என்பதை உணர வேண்டும் என்றும் கைரி சொன்னார்.

“ஒருவர் கட்சியில் பிரபலமானவரா இல்லையா என்பதோ அதிகம் படித்தவரா இல்லையா என்பதோ முக்கியமல்ல. பிஎன் வெற்றி பெறுவதை உறுதி செய்வதே முக்கியமாகும்.”

பெர்னாமா