“தென்னிலங்கையில் தமிழ் மக்களுக்கு எதிரான கருத்துக்களைக் கூறி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வாக்குப் பெற்றார். தனது கருத்துக்கள் இனங்களுக்குள் விரிசலை ஏற்படுத்தக் கூடாதென நினைத்தோ என்னவோ, மஹிந்த ராஜபக்ஷ மகனான நாமல் ராஜபக்ஷவிடம் கூறி இவ்வாறான கருத்துக்களை தமிழ் மக்கள் மத்தியில் தெரிவிக்கின்றனர் போல் தோன்றுகின்றது. எதுவாக இருந்தாலும், நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்லதொரு முடிவினை எடுக்க முடியும்” என்று நம்புவதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களுடன் இணைந்து செயற்பட விரும்புவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தனது டுவிட்டரில் பதிவேற்றியமை தொடர்பாக நேற்று சனிக்கிழமை முதலமைச்சரிடம் கேட்ட போதே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.
முதலமைச்சர் மேலும் கூறியுள்ளதாவது, “மஹிந்த ராஜபக்ஷ இன ரீதியான கருத்துக்களை கூற தகப்பனார் வாக்குப் பெற்றுள்ளார். மகனைக்கொண்டு இவ்வாறு கூறுமாறு தெரிவித்துள்ளார். இனவாதப் பேச்சினால், இனத்திற்குள் விரிசல் ஏற்படக்கூடாதென்பதற்காகவே என நான் நம்புகின்றேன். எனினும், நாமல் ராஜபக்ஷவுடன் பேசி நல்லதொரு முடிவினை எடுக்கலாம் என்றும் யூகிக்க முடியும்.
அதேவேளை, கொள்கைகளின் அடிப்படையில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். தமிழ் மக்களின் விடுதலைக்காக என்ன கொள்கைகளை வைத்திருக்கின்றோமோ, அந்தக் கொள்கைகளின் அடிப்படையில் ஒற்றுமை இருந்து எமது பிரதிநிதிகள் ஒன்றிணைய வேண்டும்.
தெற்கில் ஏற்பட்டுள்ள குழப்பநிலைகள் வித்தியாசமானவை. வெளிநாடுகளின் உள்ளீடுகள் இருப்பதாக தெரியவருகின்றது. சர்வதேசங்கள் அரசாங்கத்தினை பிளவுபடாவிடமார்கள் என்ற தோற்றப்பாடு காணப்படுகின்றது. இருந்தபோதிலும், தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தும் நீடிக்குமென நம்புகின்றேன்.
கூடிய அளவு தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முனையலாம். இல்லாவிடின், அவற்றினை ஒதுக்கி வைப்பதற்கும் முனையலாம். இரு கட்சிகளுக்கும் இடையில் வேற்றுமை இருப்பதனால், எவ்வாறான நிலை ஏற்படுமென தற்போது கூறமுடியாதுள்ளது.
9 மாகாணங்களிலும், இணைப்பாட்டிசி, சமஸ்டியை ஏன் உருவாக்கக் கூடாதென 13வது திருத்தச் சட்டத்தினை வடகிழக்கு மாகாணங்களுக்கு கொண்டு வருகின்ற போது, ஜே.ஆர்.ஜெயவர்த்தன முழு நாட்டிற்கும் ஏற்புடையதாகச் செய்தார்.
அதேபோன்று, ஒரு சமஸ்டி அரசியல் யாப்பினை 9 மாகாணங்களுக்கும் கொண்டு வருவதுடன், வடகிழக்கு மாகாணங்கள் இணைந்து, எவ்வாறான நடவடிக்கைகளை முன்னெடுக்கலாம். இந்த விடயத்தில் சிங்கள கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டினை எடுக்கின்றார்கள் என்பதனைப் பொறுத்து, நிரந்தரமான தீர்வினை எட்ட முடியும் என நினைக்கின்றேன்.” என்றுள்ளார்.
-4tamilmedia.com