கச்சதீவு திருவிழாவிலும் புகுந்தது சிங்களம் – இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி

கச்சதீவு புதிய அந்தோனியார் ஆலயத் திருவிழாவில் இம்முறை சிங்கள மொழியிலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளதாக சிறிலங்கா கடற்படையின் பேச்சாளர் கொமடோர் தினேஸ் பண்டார தெரிவித்துள்ளார்.

“இந்திய- சிறிலங்கா யாத்திரிகள் ஒன்று கூடுகின்ற கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா எதிர்வரும் 23ஆம் நாள் நடைபெறவுள்ளது.

இந்தமுறை திருவிழாவில் இந்தியாவில் இருந்து 5000 பேரும், சிறிலங்காவில் இருந்து 8000 பேரும் பங்கேற்பர் என்று எதிர்பார்க்கப்படுகின்றனர்.

இந்தியாவில் இருந்து வரும் யாத்திரிகள், அனைத்துலக கடல் எல்லையில் இருந்து சிறிலங்கா கடற்படையின் பாதுகாப்புடன் அழைத்து வரப்படுவர்.

கச்சதீவு திருவிழாவில் முதல் தடவையாக, தமிழ் மொழியுடன், சிங்களத்திலும் திருப்பலி ஆராதனை நடத்தப்படவுள்ளது.

காலி மறைமாவட்ட ஆயர் ரேமன்ட் விக்கிரமசிங்க ஆண்டகை சிங்களத்தில் ஆராதனையை நிகழ்த்துவார்.

கச்சதீவு திருவிழாவில், ஏனைய பகுதிகளைச் சேர்ந்த மக்களையும் பங்கேற்க ஊக்குவிக்கும் வகையிலேயே சிங்கள மொழியிலும் ஆராதனையை நடத்த முடிவு செய்யப்பட்டள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்கள் இரண்டு நாட்கள் தங்குவதற்கான வசதிகளையும், உணவு வசதிகளையும் சிறிலங்கா கடற்படையினர் ஏற்படுத்திக் கொடுக்கவுள்ளனர்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: