எமது நாட்டுப் பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளினால் தீர்வைப் பெற முடியும்: எம்.ஏ.சுமந்திரன்

“எமது நாட்டில் தோற்றம் பெற்றுள்ள மற்றும் தோற்றம் பெற்று முடிந்த பல பிரச்சினைகளுக்கு வெளிநாட்டு நீதிபதிகளால் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும்” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

“வெளிநாட்டு நீதிபதிகளை உள்நாட்டுக்குக் கொண்டு வருவது தொடர்பில் சிலர் மாற்றுக் கருத்துகளை தெரிவிக்கின்றனர். எமது நாட்டைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளில் நீதிபதிகளாக கடமையாற்றுகின்றனர். நாம் எதிர்மறையாகச் சிந்திக்கின்றபோது, நடுநிலைக் கருத்துகளைப் பெற வேண்டும். ஒரு விடயத்தில் என்ன நன்மை உள்ளது என்பதன் அடிப்படையில் ஆராய்ந்தே நாம் செயற்பட வேண்டும். இதற்கமையவே, வெளிநாட்டு நீதிபதி விடயத்திலும் செயற்பட வேண்டும்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்ற நிலையியல் கட்டளைச் சட்டம், ஒழுக்கக்கோவை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பேசும் போதே எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “இந்த அரசாங்கத்தில் தற்போது நிலையற்ற நிலை காணப்படுகின்ற இத்தருணத்தில், நிலையான சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். நிலையற்ற தன்மையால் தான் நெகிழ்வுத் தன்மை காணப்படுகின்றது. இச்சந்தர்ப்பத்தில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை நிறைவேற்றக் கூடிய சிறந்த சந்தர்ப்பமாக இதை நான் கருதுகின்றேன்.

எவ்வாறானதொரு அரசாங்கம் நிறுவப்பட வேண்டும் என்பது கூட தெரியாமல் உள்ளது. பழைய நிலையியற் கட்டளைச் சட்டத்தை நினைத்துக் கூட பார்க்க முடியாது. பிரித்தானிய பாராளுமன்றக் கலாசாரத்தையே நாம் பின்பற்றி வருகின்றோம். இவ்வாறானதொரு நிலைமையில், நிலையியற் கட்டளைச் சட்டத்தை மீள் பரிசீலனை செய்து மாற்றங்கள் கொண்டுவர வேண்டும். நடத்தைக் கோவை கூட மாற்றம் பெற்றுள்ளன. மேலும், உறுப்பினர்களின் சுதந்திரத்தைப் பாதிக்காத வகையில், நடத்தைக் கோவை அமைய வேண்டும். நிலையியற் கட்டளைச் சட்டம் மிகச் சிறந்தது. இதை முன்னிறுத்தி பாராளுமன்ற வழிநடத்தப்படும் என நம்புகிறேன்”என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: