காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் போராட்டம் தீர்வுகளின்றி ஆண்டொன்று தாண்டியும் நீள்கிறது!

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சியில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் (பெப்ரவரி 20, செவ்வாய்க்கிழமை) ஒரு வருடத்தைப் பூர்த்தி செய்கின்றது.

இதனை முன்னிட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இன்றைய போராட்டத்தின்போது, தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செ.கஜேந்திரன், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மத தலைவர்கள், சிவில் அமைப்புக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளைத் தேடி கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (20) ஒரு வருடம் கடந்த நிலையில் 366 ஆவது நாளாகவும் தொடர்கிறது. அரசாங்கம் தமக்கு எந்த தீர்வையும் தராது என் ஜனாதிபதி வெளிப்படுத்தியுள்ள நிலையில், சர்வதேச விசாரணையே தமக்கான தீர்வாக அமையும் என போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.

-4tamilmedia.com

TAGS: