இலங்கையாழ்ப்பாணத்தில் இருந்து தியத்தலாவ என்ற இடம் நோக்கி சென்ற ஒரு பேருந்தில் ஏற்பட்ட வெடிப்பில் 12 அரசாங்க படையினர் உட்பட 19 பேர் காயமடைந்ததாக ராணுவம் அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களில் 7 ராணுவத்தினரும் 5 விமானப்படையினரும் அடங்குவர். இரு படையினரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
பண்டாரவளை என்ற இடத்துக்கு வந்த போது, குண்டு வெடிப்பதற்கு முன்னதாக இந்த பேருந்து தியத்தலாவ செல்லும் பயணிகளை வேறு ஒரு தனியார் பேருந்துக்கு மாற்றியதாக ராணுவத்தின் சார்பிலான பேச்சாளர் பிரிகேடிய சுமித் அத்தப்பத்து செய்தியாளர்களிடம் கூறினார்.
இதற்கிடையே இந்த பேருந்தில் ஏற்பட்ட வெடிப்புக்கு கையெறி குண்டு ஒன்று வெடித்ததே காரணம் என்று இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஒரு பயணியின் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைக்குண்டு வெடித்ததே இதற்கு காரணம் என்று ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்ததாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் சாகல ரட்நாயக்காவும் தெரிவித்துள்ளார்.
ராணுவத்தால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று இந்த சம்பவத்தில் பயங்கரவாத தொடர்பு இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளது.
போர் நடந்து முடிந்த வடபகுதியில் இருந்து விடுமுறையில் வரும் படையினர் இந்த வழியாக பேருந்தில் தமது சொந்த ஊர்களுக்கு செல்வது வழக்கம். -BBC_Tamil