தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினை மற்றும் அடிப்படைப் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டு தமிழ்க் கட்சிகள் ஒரு பொதுக் கொள்கையில் அடிப்படையில் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமும் சட்டத்தரணியுமான என்.ஸ்ரீகாந்தாபகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அதன் போக்கில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ். நகரப் பகுதியில் உள்ள யூ.எஸ். விருந்தினர் விடுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே என்.ஸ்ரீகாந்தா இவ்வாறு பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போதைய சூநழ்நிலையில், புதிய தேர்தல் முறைமையின் கீழ் விஸ்திரமான நிர்வாகத்தினை எவ்வாறு ஏற்படுத்தப் போகின்றோம் என்பது தான் தற்போதைய கேள்வியாக இருக்கின்றது. சகல உள்ளுராட்சி சபைகளின் ஸ்திர தன்மையினை அறிந்து சகல தமிழ் கட்சிகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
அந்த ஒத்துழைப்பினை தேவைப்படும் பட்சத்தில் வழங்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராக இருக்கின்றது. அனைவரும் பொறுப்புணர்வுடன் செயற்பட்டால், தமிழ் மக்கள் வாழும் பிரதேச உள்ளுராட்சி சபைகளில் விஸ்திரமான நிர்வாகத்தினை உறுதிப்படுத்த முடியும்.
தமிழ் மக்களின் தேசிய இனப்பிரச்சினைக்கும், அடிப்படை அரசியல் பிரச்சினைக்கும், நீதியும், நிரந்தரமுமான எமது பயணம் எந்தவிதத்திலும் தடைப்பட்டு விடாமல், உறுதியுடனும், உத்வேகத்துடனும் முன்னெடுப்பதற்கு ஏதுவாக தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் புரிந்துணர்வுடன், பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில், இணைந்து செயற்பட வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சி என்ற அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் இந்த வேண்டுகோளை விடுக்கின்றோம்.
அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையில் வேறுபாடுகள் கிடையாது. இலங்கைக்குள் நீதியான அரசியல் தீர்வினை ஏற்படுத்துவதாக இருந்தால், எமது தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களில் பூரண சுயாட்சி வேண்டுமென்ற கோரிக்கை தொடர்பில் தமிழ்த் தேசியக் கட்சிகள் மத்தியில் அடிப்படையில் வேறுபாடுகள் கிடையாது.
இந்த சுயாட்சி சமஸ்டி முறையின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட வேண்டுமென்பதில் வேறுபாடு கிடையாது. பொது கொள்கைத் திட்டத்தின் அடிப்படையில் விரைவாக அரசியல் தீர்வு ஒன்றினை வென்றெடுப்பதற்கு ஏதுவாக ஒன்றுபட்டுச் செயலாற்ற வேண்டும். கடந்த காலங்களில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருந்த போதிலும், ஒன்றுபட்டு செயலாற்றிய பல்வேறு சந்தர்ப்பங்கள் உள்ளன.
1990ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இருந்து பல முரண்பாடுகள் மோதல்கள் இருந்த போதிலும், ஒன்றாக குரல் கொடுத்து வந்துள்ளோம். தமிழ் மக்கள் எம்மிடம் எதிர்பார்க்கும் கடமையின் அடிப்படையில், மிக விரைவில், பொது கொள்கைத் திட்டத்தினை அந்த திட்டத்தின் அடிப்படையில், தென்னிலங்கைக்கும், அரசாங்கத்திற்கும் ஒன்றாக அழுத்தம் கொடுப்பதற்கு உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டு என்பதே.
தென்னிலங்கையில் ஸ்திரமற்ற அரசியல் சூழ்நிலை நிலவுகின்றது. எது எப்போது நடக்குமென திட்டவட்டமாக ஆருடம் கூற முடியாத நிலமை காணப்படுகின்றது. எது எப்படி இருந்தாலும், ஏற்கனவே, முன்னெடுக்கப்பட்ட அரசியல் தீர்வு விடயங்கள் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டு என்பதே எமது எதிர்பார்ப்பு.
அரசியல் தீர்வு முன்னெடுப்பு தொடர்பில், தமிழ் மக்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே சந்தேகம் இருந்து வந்தது. சந்தேகம் இருந்தாலும் கூட, இந்தப் பொறிமுறைகளுக்கு ஊடாக செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் காரணத்தினால், ஒரே நாட்டிற்குள் அரசியல் தீர்வுக்கு தயாராக இருக்கின்றோம் என்று கூறி வந்திருக்கின்ற நிலையில், இந்த அரசியல் தீர்வு முயற்சியை ஒரு போதும் புறந்தள்ள முடியாது என்ற அரசியல் யதார்த்தத்தின் காரணமாகவும், இந்த முயற்சிகளில் தொடர்ந்தும் ஈடுபட வேண்டிய தேவையும், கட்டாயமும் இருக்கின்றது.
ஆகவே, இந்த முயற்சிகளை கூட்டாக எதிர்கொள்வதற்கும், அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களின் குரல் ஒன்றாக ஒலிப்பதற்கும் ஏதுவாக தமிழ்த் தேசியக் கட்சிகள் பொது வேலைத்திட்டத்திற்குள் செயற்படுவதை விடுத்து உடனடியாக சிநத்திக்க வேண்டும். ஒன்றாக செயற்பட முன்வர வேண்டுமென்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.
எமது மக்களின் அடிப்படைப் பிரச்சினைக்கு நாங்கள் அனைவரும் ஒரே குரலில் பேச வேண்டும். ஒரே கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். அவ்வாறு செயற்பட்டால் மாத்திரமே நாம் எதிர்பார்க்கும் அரசியல் தீர்வு விடயத்தில் உரிய நேரத்தில் எடுக்க முடியும். தமிழ் கட்சிகள் பிரிந்து நின்ற காரணத்தினால், பேரினவாத கட்சிகள் தமிழ் மக்கள் மத்தியில் ஊடுருவி தமது வாக்குகளை பெற்றுக்கொள்ள முனைந்துள்ளார்கள். அதனால், இன்று உள்ளுராட்சி சபைகளில் நிர்வாகத்தினை ஏற்படுத்துவதற்கு தடையாக இருந்து வருகின்றது.
அனைவரும் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் ஒன்றிணைந்து மக்களுக்காக ஒரே குரல் எழுப்ப வேண்டுமே தவிர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்குள் ஒன்றிணையுமாறு அழைப்பு விடுக்கவில்லை.” என்றுள்ளார்.
-puthinamnews.com