கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமை குறித்து- விழாவில் பங்கேற்ற தமிழ்நாடு மற்றும் இலங்கை பக்தர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
நேற்றுமுன்தினம் மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பித்த கச்சதீவு புனித ஆலயத்தின் இரண்டு நாள் திருவிழா நேற்று நிறைவடைந்தது.
இந்த திருவிழாவில், தமிழ்நாட்டில் இருந்து சுமார் 2000 பேரும், இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 4000 பேரும், கலந்து கொண்டனர்.
வழக்கமாக இந்த திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கையைச். சேர்ந்த தமிழ் பக்தர்களே கலந்து கொள்வர்.
ஆனால் இம்முறை இரண்டாவது நாள் திருவிழாவில் அதிகளவில் சிங்கள பக்தர்கள் கலந்து கொண்டனர். அத்துடன் முதல் முறையாக சிங்களத்திலும் ஆராதனை நடத்தப்பட்டது.
இந்தத் திருவிழாவுக்காக தமிழ்நாட்டில் இருந்து தேக்கு மரத்தினால் செய்யப்பட்ட புதிய சிலுவை வடிவிலான கொடிமரம் மீனவர்களால் கொண்டு செல்லப்பட்டது.
கச்சதீவு திருவிழாவின் போது சிங்களத்தில் ஆராதனை நடத்தப்பட்டமையானது, எதிர்காலத்தில் இங்கு தமிழ்மொழியிலான ஆராதனைகள் புறக்கணிக்கப்படுவதற்கு வழிவகுக்கும் என்று இலங்கை இந்திய தமிழ் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நெடுந்தீவைச் சேர்ந்த ஸ்ரெல்லா இதுகுறித்து கருத்து வெளியிடுகையில், “ சிறிலங்கா அரசாங்கம் எமது மரபு ரீதியான உரிமைகளில் படிப்படியாக தொடர்ந்து தலையீடு செய்து வருகிறது.
கச்சதீவு தமிழர்களின் ஆதிக்கத்தில் இருந்து வரும் பகுதி. அங்கு காலம் காலமாக தமிழிலேயே ஆராதனைகள் நடத்தப்பட்டு வந்தன. சிறிலங்கா அரசாங்கம் தேவையின்றி அங்கு சிங்களத்தில் ஆராதனையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இது எதிர்காலத்தில் தமிழில் ஆராதனை நடத்தப்படாமல் போகுமே என்ற அச்சத்தை எமக்குள் ஏற்படுத்தியுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பின்னரான எமது கடந்த கால அனுபவங்கள் இவ்வாறு அச்சம் கொள்ள வைக்கிறது.” என்று கூறியுள்ளார்.
-puthinappalakai.net