ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறது கூட்டமைப்பு

சிறிலங்காவில் நல்லிணக்கம்,பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை முன்னேற்றுவது தொடர்பான  தீர்மானம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையை வரவேற்பதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று நடந்த இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தை அடுத்து, வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில், “ கொழும்பில் கூடிய இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவானது சிறிலங்காவில் நல்லிணக்கம் பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தும் பிரேரணை தொடர்பில் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் அவர்களின் அறிக்கையை வரவேற்கின்றது.

தேசியப் பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணும் முகமாகவும் நிலையான சமாதானத்தை ஏற்படுத்தும் முகமாகவும் சிறிலங்கா அரசாங்கமானது சர்வதேசத்திற்கு வழங்கிய உத்தரவாதங்களை கடுமையாகப் பின்பற்ற வேண்டுமென நாம் வலியுறுத்தி நிற்கின்றோம்.

மேலும், இந்த உத்தரவாதங்களிலிருந்து விலகக் கூடாது எனவும் இந்நாட்டு மக்களுக்கும் சர்வதேச சமூகத்திற்கும் சிறிலங்கா அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றவேண்டுமெனவும் நாம் அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

ஐ. நா மனித உரிமை ஆணையாளரின் முன்மொழிவுகளை முழுமையாக வரவேற்கின்ற அதேவேளை, சிறிலங்கா அரசாங்கத்துடன் பயனுறுதிமிக்க நெருங்கிய அவதானிப்பையும் செலுத்துமாறு அங்கத்துவ நாடுகளிடம் நாங்கள் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குதல், பொதுமக்களின் காணிகள் விடுவிப்பு, காணாமல் ஆக்கப்பட்டோரின் பிரச்சினைகள், அரசியல் கைதிகளின் விடுதலை போன்ற விடயங்கள் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியும் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வந்துள்ளன.

ஆனால், இவ்விடயங்கள் தொடர்பில் மந்தகதியான அரசாங்கத்தின் நடவடிக்கைகள் தமிழ் மக்கள் மத்தியில் அந்த நடவடிக்கைகளில் காணப்படும் நம்பகத்தன்மை குறித்து பாரிய கரிசனையைத் தோற்றுவித்துள்ளது.

மேற்குறித்த விடயங்கள் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை ஆணையாளரின் முன்மொழிவுகள் தொடர்பிலும் சிறிலங்கா அரசாங்கமானது பொறுப்புக்கூறலுடன் நடந்து கொள்வதனை உறுதி செய்யுமாறு அனைத்துலக சமூகத்திடம் நாம் மிக வினயமாகக் கேட்டுக் கொள்ளுகின்றோம்.

அத்தோடு இணை அனுசரணை வழங்கிய ஐ.நா.மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்தினை துரித நடவடிக்கைகளை எடுத்து எவ்வித தாமதங்களுமின்றி முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு நாம் சிறிலங்கா அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.

ஐ.நா.மனித உரிமைப் பேரவை ஆணையாளருக்கு எமது நன்றிகளைத் தெரிவிக்கின்ற அதேவேளை இந்த முன்மொழிவுகளுக்கு சிறிலங்கா அரசாங்கம் தான் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில் முக்கியத்துவம் கொடுத்து நடைமுறைப்படுத்துவதனை ஐ.நா.மனித உரிமை ஆணையாளரின் பணியகம், அனைத்துலக அமைப்புக்கள் மற்றும் ஏனைய உறுப்பு நாடுகள் உறுதி செய்ய வேண்டுமென அதிகமாகப் பாதிக்கப்பட்ட தமிழ்மக்களின் சார்பில் நாம் வேண்டுகோள் விடுக்கின்றோம்.” என்று கூறப்பட்டுள்ளது.

-puthinappalakai.net

TAGS: