உண்மை, நீதி மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல், இலங்கையில் நல்லிணக்கமோ அல்லது நிரந்தரமான சமாதானமோ சாத்தியமானதில்லை என்று வடக்கு மாகாண சபை தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை நடைமுறைப்படுத்த அழுத்தங்கள் கொடுக்குமாறு கோரி வடக்கு மாகாண சபையில் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டது. அதிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 117வது அமர்வு நேற்று கைதடியில் அமைந்துள்ள பேரவைச் செலயகத்தில் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் தலைமையில் ஆரம்பமாகியது. அதன்போது, இனப்படுகொலைக்கான நீதியை சர்வதேசம் வேண்டி நிற்கும் இந்த நேரத்தில் இந்த தீர்மானத்தினை சபையில் நிறைவேற்றி, அழுத்தங்களை கொடுத்து இலங்கையில் நிரந்தரமான அரசியல் தீர்வும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு சர்வதேச நீதியும் கிடைப்பதற்கு ஆவணம் செய்ய வேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தீர்மானமொன்றை முன்மொழிந்தார்.
அதில், “
*இலங்கையில் சர்வதேச நீதிப் பொறிமுறையினை முன் முற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்திடம் கோரப்படுகின்றது.
*2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளின் போது, இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக் கூறுதல், மனித உரிமைகள் போன்றவற்றினை ஊக்கப்படுத்தல் என்ற தொனிப்பொருளிலான தீர்மானத்தினை இணை அணுசரணையாளராகவும், அதனை விசாரிப்பதற்கான சர்வதேச நீதிபதிகள், வழக்குத் தொடுநர்கள், விசாரணையாளர்கள் அடங்கலான, பக்கச்சார்பற்ற சட்டநெறிப் பொறிமுறை ஒன்றிணை ஏற்படுத்தல்.
*தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக எந்தவித அர்த்தமுள்ள நடவடிக்கையினையும் இலங்கை அரசாங்கம் எடுக்கத் தவறியுள்ளதுடன், ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட முதல்நிலை உறுப்பினர்கள் இந்த தீர்மானத்தினை நடைமுறைப்படுத்தப் போவதில்லை என தெளிவாகவும், ஆணித்தனமாகவும் வெளிப்படுத்தியுள்ளார்கள்.
*சமத்துவமான அரசியல் தீர்வினைக் கண்டுகொள்வதற்குரிய எந்தவொரு மனப்பூர்வமான நடவடிக்கையினை மேற்கொள்வதற்கு தவறியிருப்பது மட்டுமன்றி சிங்கள அரசின் ஒடுக்குமுறை மனப்போக்கினை எடுத்துக்காட்டும் வகையில், இன மதத்தின் சம அந்தஸ்தை சீர்குலைக்கும் செயற்பாடும், கவனத்திற் கொள்ள வேண்டும்.
*வடக்கு மாகாண சபையானது பின்வரும் தீர்மானங்களை முன்னெடுத்துள்ளது. இலங்கையானது தான் ஏற்றக்கொண்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்த தவறியுள்ளதுடன், மற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை ஆணையாளருக்கு ஜனவரி 25 ஆம் திகதி வருடாந்த அறிக்கையின் முடிவுகளை பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்க முடிவுகளை ஊக்குவிக்கும் திருப்புமுனை தீர்மானத்தினை மேற்கொள்ளும்படி உயர்ஸ்தானிகர் தூண்டுகின்றார். மற்றும் பொறுப்புக்கூறல் வளர்ச்சிக்கு துணை நிற்கக்கூடியவையான உலகளாவியல விசாரணை அதிகாரத்தினைப் பிரயோகித்தல் உள்ளிட்ட வேறு வழிவகைகளை ஆராய உறுப்பினர் நாடுகளையும் அழைக்கின்றது என்பதனையும் கருத்தில் எடுத்துள்ள இச்சபையானது,
*இந்தப் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபையின் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தலைமையிலான சர்வதேச சட்ட நெறிப்பொறிமுறைக்கு ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகளின் உறுப்பினர் நாடுகளைக் கேட்டுக்கொள்கின்றது.
*உண்மை மற்றும் சமத்துவமான அரசியல் தீர்வு இல்லாமல் இலங்கையில் நல்லிணக்கமோ அல்லது, நிரந்தரமான சமாதானமோ சாத்தியமற்றது என இச்சபை நம்புகின்றது.
*2015 செப்ரெம்பரிலான இலங்கை மீதான OHCHR இன் விசாரணை அறிக்கையில் (OISL) பரிந்துரைக்கப்பட்டிருப்பது போல், றோம் நியதிச் சட்டத்தை அங்கீகரிக்க இலங்கையை வற்புறுத்தும்படி ஐ.நா.வையும் சர்வதேச சமூகத்தையும் இந்தச் சபை கோருகிறது.
*தமிழ் மக்கள் இலங்கையில் இணைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களில் தமது மரபு வழி தாயகத்தை கொண்டிருக்கும் ஒரு மக்கள் இனம் என்பதையும், அவர்கள் சுயநிர்ணய உரிமை கொண்டவர்கள் என்பதையும் கண்டுணர்ந்திருக்கும் இந்த சபையானது, ஒரு அரசியல் தீர்வுக்கான இணக்க நடுவராக செயற்படும்படி சர்வதேச சமூகத்தைக் குறிப்பாக அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன் மற்றும் இந்தியாவைக் கேட்டுக் கொண்டுள்ளது.” என்ற விடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
எம்.கே.சிவாஜிலிங்கம் முன்மொழிந்த இந்தத் தீர்மானத்தை வடக்கு மாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் சின்னத்துரை தவராசா வழிமொழிந்தார். இறுதியாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் அவையில் உறுப்பினர்களின் கருத்துக்களை கேட்ட போது, உறுப்பினர்களின் ஒப்புதலுடன், இத் தீர்மானத்தினை ஏகமனதாக நிறைவேற்றியுள்ளதாகவும், அதன் பிரதிகளை ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைச் செயலகத்திற்கு அனுப்பி வைக்கப்படுமென்றும் சபையில் அறிவித்தார்.
-4tamilmedia.com