சிறிலங்காவில் மனித உரிமை மீறல்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும் – அமெரிக்கா

சிறிலங்கா உள்ளிட்ட நாடுகளில் மனித உரிமைகள் மீறப்படுவதை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் இணைந்து பணியாற்ற முன்வர வேண்டும் என்று ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் மேரி கத்தரின் பீ தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடரில் நேற்று உரையாற்றிய அவர், ஈரான் போன்ற மனித உரிமைகளை மீறும் நாடுகளை ஒரு விதமாகவும், இஸ்ரேல் விடயத்தில் பாரபட்சமாகவும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை நடந்து கொள்கிறது என்று குற்றம்சாட்டினார்.

“ஏனைய உறுப்பு நாடுகளில் இருந்து இஸ்ரேலை வேறுபட்ட முறையில் கையாளுவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

சிறிலங்கா, வடகொரியா, ஈரான், மியான்மார், தென்சூடான், சிரியா போன்ற நாடுகளில் மனித உரிமை மீறல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக ஐ.நா மனித உரிமைகள் பேரவை பணியாற்ற வேண்டும்.

சிறிலங்கா விடயம் போன்று,  ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்பு நாடுகள் வலுவான தீர்மானங்களை நிறைவேற்ற ஒன்றாக முன்வரும் என்று அமெரிக்கா நம்புகிறது.

சிறிலங்கா விடயத்தில் அவ்வாறு ஒன்றுபட்டிருந்ததால், முன்னேற்றங்களைச் செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் உறுதியளித்தது” என்றும் அவர் கூறியுள்ளார்.

-puthinappalakai.net

TAGS: