இலங்கை: போரில் காணாமல் போனவர்களை கண்டறிய அதிகாரிகள் நியமனம்

இலங்கையில் 2009 இல் முடிவுக்கு வந்த உள்நாட்டுப் போரின் போது காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான ஆணையர்களை இலங்கை ஜனாதிபதி நியமித்துள்ளார்.

இதற்கான தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணியான சாலிய பீரிஸ் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள அரசாங்க தகவல் திணைக்களம், மேலும் 7 பேரை அதன் ஏனைய உறுப்பினர்களாகவும் அறிவித்துள்ளது.

இந்த உறுப்பினர்களில் இருவர் சிறுபான்மை தமிழர்களாவர். இவர்கள் அனைவரும் 3 வருட காலத்துக்கு பதவியில் இருப்பார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

போரின் போது காணாமல் போன ஆயிரக்கணக்கான தமிழர்களை கண்டறிய இலங்கை அரசாங்கம் எந்தவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என்று காணமல் போனவர்களின் உறவினர்கள் கூறிவருகின்றனர்.

காணாமல் போன தமது உறவுகளை கண்டறிய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி, அவர்கள் ஒருவருடகாலமாக தொடர் உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

.நா கண்டனம்:

அதேவேளை, இலங்கை போர் குற்றங்கள் குறித்து ஆராய்ந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இந்த விடயங்களில் இலங்கை அரசாங்கம் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறிவருகிறது.

ஐ.நா  மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தலைவரின் இந்த வருடத்துக்கான அறிக்கை சில தினங்களுக்கு முன்னதாக வெளிவந்தபோதும் கூட அது குறித்து அதில் கவனம் செலுத்தப்பட்டிருந்தது.

‘சில வருடங்களுக்கு முன்னதாக காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகம் அமைக்கப்பட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்தாலும், அதற்கான ஆணையர்களை அது நியமிக்கவில்லை’ என்று ஐநா மனித உரிமைகள் ஆணையர் கவலை வெளியிட்டிருந்தார்.

அந்த நிலையிலேயே தற்போது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடர் நடந்த சூழலில் இலங்கை அரசாங்கம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

1.3 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கீடு

2009இல் போர் முடிவுக்கு வந்தபோதிலும், அதில் காணாமல் போனவர்களை கண்டறிவதற்கான அலுவலகத்துக்கான சட்டம் 2016ஆம் ஆண்டிலேயே நிறைவேற்றப்பட்டது. ஆனால், தற்போதுதான் இரு வருடங்கள் கடந்த பின்னர் அதற்கான அலுவலகர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த அலுவலகத்துக்காக 2018ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1.3 பில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

அரசியலமைப்பு சபையால் வெளிப்படையான போட்டி அடிப்படையில் இதன் உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டு, ஜனாதிபதிக்கு பிரேரிக்கப்பட்டதாகவும், அவர் அதற்கான உத்தரவை பிறப்பித்ததாகவும் தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இது ஏமாற்றமான அறிவிப்பு என்கின்றனர் காணாமல் போனவர்களின் உறவினர்கள்

ஏமாற்றமான அறிவிப்பு

ஆனால், இந்த அறிவிப்பு தமக்கு ஏமாற்றத்தை தருவதாக காணாமல்போனவர்களின் உறவினர்களின் அமைப்பு கூறியுள்ளது.

அந்த அமைப்பின் சார்பில் பேசிய லீலா தேவி ஆனந்தராஜா, இந்த விசயத்தில் உறவினர்களை காணாமல் போகக் கொடுத்தவர்களின் கருத்துக்கள் எதுவும் உள்வாங்கப்படவில்லை என்று கூறினார்.

உறுப்பினர்களாக இராணுவ அதிகாரிகள்

அந்த அலுவலகத்துக்கான ஆணையர்களில் இருவர் முன்னாள் இராணுவ அதிகாரிகள் என்று தாம் அறிந்ததாக கூறிய அவர், இராணுவத்தில் இருந்தவர்கள் அங்கம் வகிக்கும் ஒரு அமைப்பால் தமக்கு நீதியை பெற்றுத்தர முடியாது என்றும் இது தமது இராணுவத்தை பாதுகாப்பதற்காக அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கை என்றும் குறிப்பிட்டார்.

இந்த அமைப்பில் பணியாற்றி தமக்கு நீதியை பெற்றுத்தருவதற்காக தம்மால் சிலரது பெயர்கள் பிரேரிக்கப்பட்டதாக கூறிய லீலா தேவி, அவர்கள் எவருக்கும் இந்த அமைப்பில் இடம்தரப்படவில்லை என்றும் குறிப்பிட்டார்.

இந்த விசயத்தில் அரசாங்கம் மிகவும் மெத்தனமாக நடப்பதாக கூறும் கொழும்பில் உள்ள பெயர் குறிப்பிடாத வெளிநாட்டுப் பத்திரிகையாளர் ஒருவர், அலுவலகம் அமைக்கப்பட்டு இவ்வளவு காலம் தாமதித்து அலுவலகர்கள் நியமிக்கப்படுவதே அதற்கு உதாரணம் என்றார். -BBC_Tamil

TAGS: