“வடக்கு மாகாணத்தில், 63,331 பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் உள்ளன. இவர்களுடைய வாழ்வாதாரம் வலுவிழந்து காணப்படுவதோடு,
பாலியல் துன்புறுத்தலுக்கு முகங்கொடுத்து வாழ்வியலை தொடரும் அவல நிலை காணப்படுகின்றது.” என்று வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
வடக்கு மாகாணத்தில் காணப்படுகின்ற பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் நிலைமை தொடர்பாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அனந்தி சசிதரன் மேலும் கூறியுள்ளதாவது, “வடக்கு மாகாணத்தின் சமூக சேவைகள் திணைக்களத்தின் புள்ளிவிபரத்தின் பிரகாரம், யாழ்ப்பாண மாவட்டத்தில் 36,318 குடும்பங்களும், கிளிநொச்சி மாவட்டத்தில் 8,435 குடும்பங்களும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 5,961 குடும்பங்களும், வவுனியா மாவட்டத்தில் 6,714 குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தில் 5,903 குடும்பங்களும் பெண்களை தலைமையாக கொண்டுள்ளன.
இந்த பெண் தலைமைத்துவக் குடும்பங்களில், போரில் கணவனை இழந்தோர், காணாமல் போனோர், போரின் பின்னர் ஏமாற்றப்பட்ட பெண்கள், கணவனால் கைவிடப்பட்டவர்கள் போன்றோர் உள்ளனர்.
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களே யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களாக தெரிவு செய்து அரச உதவிகளாயினும், தனிநபர் உதவிகளாயினும் சரி, வழங்கப்படுகின்றன. எனினும், உண்மையில் மன்னார், வவுனியா ஒரு பகுதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இருந்து மக்கள் இடம்பெயர்ந்து வன்னி பகுதியில் வசித்து பின்பு மீள குடியமர்ந்துள்ளனர். அவர்களும் யுத்த பாதிப்புக்குள்ளான நிரலிலேயே உள்வாங்கப்படுகின்றனர். அதனால் இந்த விடயத்தில் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தை தாண்டி பிற மாவட்டங்களையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
-puthinamnews.com