மக்கள் நம்பிக்கையிழந்து விட்ட பின்னரே, சிறிலங்கா அரசாங்கம் காணாமல் போனோர் பணியகத்தை உருவாக்கியுள்ளது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் பணியகத்துக்கான உறுப்பினர்கள் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவினால், நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள அவர்,
“நீண்ட தாமதத்துக்குப் பின்னர் காணாமல் போனோர் பணியகத்துக்கு ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதை வரவேற்கின்றோம்.
ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னரே இந்த நியமனங்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.
நீண்ட இழுபறியால் மக்களுக்கு இதன் மீதான நம்பிக்கை தகர்ந்து விட்டது. மக்கள் நம்பிக்கை இழந்த பின்னர் இந்தப் பணியகம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதற்கு நியமிக்கப்பட்டுள்ள ஆணையாளர், உறுப்பினர்கள் சுதந்திரமானவர்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயற்பட வேண்டும். அவர்கள் அரசின் அங்கம் அல்ல.
ஆணையாளர்கள் துரிதமாக பணியகத்தைச் செயற்படுத்த வேண்டும்.
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பணியகத்தை ஆரம்பிக்க வேண்டும். விசாரணைக்குத் தேவையான வெளிநாட்டு தொழில்நுட்ப உதவிகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
-puthinappalakai.net