ஐக்கிய நாடுகளால் இலங்கை மீது அமெரிக்காவின் அனுசரணையுடன் கொண்டுவரப்பட்ட தீர்மானம் 2014 மார்ச் மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி 2015 செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகளின் பொது பேரவை தீர்மானம் தொடர்பான அறிக்கை வெளிவந்தது. இந்த தீர்மானத்தில் முக்கியமான கூறு 30/1.
அதில், இலங்கையில் நடந்து முடிந்த போரின் போது நடைபெற்ற அனைத்து மனித உரிமைகள் மீறலுக்கும் பொறுப்பு ஏற்கப்பட வேண்டும். நல்லிணக்கம் கட்டி எழுப்பபடவேண்டும் என்பவற்றை கட்டாயம் இலங்கை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது நிலைமாற்றதுக்கான நீதி வழங்கப்படவேண்டும் என்று இதில் வலியுறுத்த பட்டுள்ளது.
இவற்றை செய்வோம் என இலங்கையும் இணங்கி இந்த பொறிமுறையின் பங்காளிகளாக இந்த தீர்மானத்தை ஏற்று கொண்டுள்ளது.
சிறிய முன்னேற்றமே
இருப்பினும் இரண்டு ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் மிகவும் சிறிய முனேற்றத்தையே இலங்கை அரசாங்கத்திடம் காணக்கூடியதாக உள்ளது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு 2017-இல் மார்ச் மாதத்தில் நீதிக்கான நிலைமாற்ற பொறிமுறையை முன்னெடுப்பதற்கு இன்னும் இரண்டு வருட கால அவகாசாம் வேண்டுமென இலங்கை அரசாங்கம் ஐக்கியநாடுகள் சபையில் கோரியது.
அதை தொடர்ந்து ஐநா உறுப்பு நாடுகள் அந்த கால அவகாசத்தையும் இலங்கைக்கு வழங்கியது.
2015க்கு முன் இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்பட்ட தீர்மானங்களை முந்தைய அரசு எப்போதும் எதிர்த்தே வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக இலங்கை அரசு நடைமுறைப்படுத்திய சில நவடிக்கைகள், ஜனவரி 2016இல் பதினோரு உறுப்பினர்களை உள்ளடக்கிய குழு (Consultation Task Force- CTF ) நிறுவப்பட்டது.
நாடு முழுவதும் பாதிக்கப்பட்ட மக்களுடன் நீதிக்கான நிலைமாற்ற காலத்திற்கான நீதியை பெற்று கொள்வது சம்மந்தமான ஆய்வுக் கலந்துரையாடல்கள் நடந்தன.
இந்த கலந்துரையாடலுக்கான குழு தை மாதம் 2016ஆம் ஆண்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது. ஆறாம் மாதம் 30ஆம் மாதம் திகதி இக்கலந்துரையாடல் ஆரம்பித்தது.
இதற்காக 92பேரை உள்ளடக்கிய பிரதேச செயல்குழுக்கள்( Zonal Task Force ) அமைத்து இதனூடாக இந்த கலந்துரையாடல்கள் நடந்தன.
இந்த கலந்துரையாடலின் அறிக்கை வெளிவருமுன் 11 ஆம் திகதி ஜூலை மாதம் 2016ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டோருக்கான சட்ட மூலம் நாடாளுமன்றத்தால் கொண்டு வரப்பட்டது.
இந்த செயல்குழுவின் அறிக்கை 7ஆம் திகதி தை மாதம் 2017 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது.
அதன் பின் ஆறாம் மாத அளவில் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் அமைப்பதற்கு ஊழியர் தேர்வு விண்ணப்பம் அனுப்ப அரசியல் சாசன கவுன்சில் மூலம் வேண்டுகோள் விடுக்கபட்டது. பலரும் விண்ணப்பித்திருந்தார்கள்.
இருந்தபோதும் எழு பேர் அடங்கிய இந்த அலுவலகத்தின் தலைவர் அரசியல் சாசன கவுன்சில் கோரியதால் கிடைக்கபெற்ற விண்ணப்பங்களில் இருந்து தெரிவு செய்யப்பட்டு இப்போதுதான் ஐ நா அமர்வு ஆரம்பிக்கப்பட்டபின் நியமிக்கபட்டு உள்ளார்.
இது ஐ நா மனித உரிமை சபைக்கும் சர்வதேச நாடுகளுக்கும் நாங்கள் எங்களுடைய வீட்டுப் பாடத்தை செய்து வருகிறோம் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே என்பது எல்லோருக்கும் தெரியும்.
2018 ஐநா மனித உரிமைகள் பேரவை கூட்டம்
இந்த வருடம் 2018 மார்ச் மாதத்தில் நடைபெறும் ஐ.நா மனித உரிமைகள் சபையின் அமர்வு தொடங்கி விட்ட நிலையில், இலங்கை அரசு என்னவகையான முன்னேற்றத்தை சர்வதேச சமூகத்துக்கு கட்டப்போகின்றதோ என்ற கேள்வி ஒருபுறம் இருக்க, இலங்கையில் உள்ள மனித உரிமை அமைப்புக்களும் சிவில் சமூகமும், மனித உரிமை ஆர்வலர்களும் எவ்வாறான நடவடிக்கைகளை மனித உரிமைகள் சபையில் முன்னெடுக்க போகின்றார்கள் என்பதை உற்று கவனிப்பது அவசியம்.
கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8 முதல் அதாவது ஜனாதிபதி தேர்தலின் முன் இலங்கையில் உள்ள அனைத்து மனித உரிமை அமைப்புக்களும், ஆர்வலர்களும், சிவில் அமைப்புக்களும் ஒன்றாகவே ஒற்றுமையாகவே இலங்கைக்கு உள்ளேயும் வெளியேயும் முக்கியமாக மனித உரிமை சபையிலும் இலங்கை அரசுக்கு எதிரான செயற்பாடுகளை மேற்கொண்டு வந்தனர்.
இவை போரால் பாதிக்கபட்ட மக்களுக்கான நீதி கோருதல், சட்டத்தின் ஆட்சி, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழித்தல், தண்டனை விலக்களிப்பதை ஒழித்தல், இனவாதத்தையும். வெறுப்பு பேச்சையும் ஒழித்தல் போன்ற கோசங்களை ஒருமித்தே எழுப்பி வந்தனர் என்பதை ஞாபகத்தில் கொள்வது அவசியம்.
ஆனால், ஜனாதிபதி தேர்தலின் பின் இலங்கைக்குள்ளும் ஐநாவிலும் சில சிவில் அமைப்புக்கள் அமெரிக்காவினால் கொண்டு வரப்பட்ட தீர்மானம் பயனற்றது என்றும், அந்த தீர்மானத்தில் இன ஒழிப்பு என்ற வாக்கியம் இல்லாததால் இது இலங்கையில் உள்ள பாதிப்பட்ட மக்களுக்கு எந்த தீர்வையும் பெற்று தராது என்றும், இந்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கும் படியும் ஐ நாவில் பிரசாரம் செய்தது.
அதேவேளையில் இன்னும் பல சிவில் மனித உரிமை அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் (இவர்கள் 1989 இல் இருந்து காணமல் ஆக்கப்படுவதற்கெதிராக இலங்கையில் உள்ள சிறுபான்மை இனத்தவருக்கு அதிகாரம் பகிர்ந்தளிக்கப்படவேண்டும் என்றும் தொடர்ந்தும் ஐ நாவில் குரல் கொடுப்பவர்களையும் உள்ளடக்கும்) சர்வதேச அமைப்புக்கள், புலம்பெயர் அமைப்புக்கள் பல இந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு பிரசாரம் செய்தன.
இருவேறு பிரசாரங்கள்
அதன் பலனாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்தும் எதிர்ப்பை காட்டிய அதே குழுவினர் ஐ நாவிலும் இலங்கைக்குள்ளும் இந்த தீர்மானத்தால் பலனில்லை என்று இன்று வரை பிரசாரம் செய்து வருகின்றனர்.
அதே நேரம் தங்களுக்கு இலங்கை பிரச்சனை சர்வேதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு கொண்டு செல்லப்பட வேண்டும் என்ற கோஷத்தை எழுப்பி வருகின்றனர். இந்த நிகழ்ச்சிநிரலின் அடிப்படையில் அவர்கள் தொடர்ந்தும் தங்களுடைய செயல்வாதத்தை முன்வைத்து வருகின்றனர்.
இங்கே ஒன்றை ஞாபகத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச குற்றவியல் நீதி மன்றத்தின் முன் இலங்கை நிறுத்தப்பட வேண்டுமெனில் ஜெனிவாவில் உள்ள மனித உரிமைகள் சபைக்கு வந்து பிரசாரம் செய்வது தேவையற்றது.
மாறாக அமெரிக்காவில் இருக்கும் பாதுகாப்புச்சபைக்கு சென்று அங்கே இருக்கும் வெட்டு (வீட்டோ) அதிகாரம் பெற்ற உறுப்பு நாடுகளிடம் சிபாரிசு செய்து அவர்களின் ஆதரவை பெற வேண்டும்.
ஒரு உறுப்பு நாடு இவர்களின் கோரிக்கையை நிராகரித்தால் கூட, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இலங்கை அரசை கொண்டு செல்ல முடியாது என்பது ஐநாவின் பொறிமுறையும், வரையறையுமாகும்.
நீதி பெற்று கொடுப்பதில் அசமந்த போக்கு
இதுவொரு புறம் இருக்க, நிலைமாற்றத்துக்கான நீதியினை பெற்றுக் கொடுப்பதில் இலங்கை அரசாங்கம் காட்டும் அசமந்த போக்கு மக்களின் எதிர்பார்ப்பை மழுங்கடிக்கச் செய்கின்றது.
ஏற்கனவே கூறியது போன்று வலய செயற்குழுவின் அறிக்கையும் அதில் கூறப்பட்டுள்ள சிபாரிசுகளின் அடிப்படையில் தான் காணாமல் ஆக்கபட்டோருக்கான சட்ட மூலம் உருவாக்கபட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நடக்கவில்லை. அறிக்கை வருமுன்னே சட்டமூலம் உருவாகி விட்டது.
அதைத் தொடர்ந்து இன்னும் காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் ஐ நா சபை கூடும் வரை அமைக்கப்படவில்லை.
இந்த அலுவலகம் அமைத்தல் நீதிக்கான நிலைமாற்ற பொறிமுறையின் ஓர் அங்கம் மட்டுமே என்பதை நாம் கவனத்தில் கொள்ளுதல் அவசியம்.
இப்போது பாதிக்கபட்ட மக்களில் சிலர் இந்த அலுவலகம் தேவை இல்லை என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். காரணம் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருந்து காத்திருந்து ஏமாந்து கொண்டே இருக்கின்றனர் என்பதுதான் வேதனைக்குரிய உண்மை.
இதை உறுதிப்படுத்தும் முகமாக அண்மையில் கிளிநொச்சியில் நடந்த 366 வது நாள் போரட்டத்தில் OMPதேவை இல்லை என்ற பதாகையை காணமுடிந்தது.
2018யிலும் இரு வகை பிரசாரங்கள்
இந்நிலையில், இவ்வருடம் நடக்கப் போகும் மனித உரிமைகள் அமர்வில் இலங்கை விடயமாக இரண்டு குழுக்கள் ஜெனிவாவில் முக்கியமாக இரண்டு நிலைபாடுகளுடன் பிரசாரத்தை செய்யும் நிலை காணபடுகிறது.
ஒரு குழு சர்வதேச சமூகத்திடம் இலங்கை தீர்மானத்தின் 30/1 இல் கூறியபடி இணங்கிய தன் கடமையை செய்து மக்களுக்கு நீதியை பெற்று கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் பிரயோகிக்கும்.
அதேவேளை மற்றைய குழு காணாமல் ஆக்கபட்டோருக்கான அலுவலகம் அமைத்தலோ அல்லது நீதிக்கான நிலைமற்றத்தின் பொறிமுறையை இலங்கை அரசு நடைமுறைப்படுத்தாது என்ற பிரசாரத்தையும் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒன்றித்து செயல்பட வேண்டிய அவசியம்
எது எப்படி இருப்பினும் தற்போதைய அரசாங்கம் இலங்கையில் உள்ள பிராதான பெரும்பான்மை கட்சிகளின் கூட்டணியாகும்,
இவ்வாறு இருக்கும் சந்தர்பத்தை நாம் சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். 2020 தேர்தலில் இதில் ஏதாவது ஒரு கட்சி எதிர்க்கட்சியானால் அதன் பிந்தைய நிலைமை மோசமானதாக ஆகலாம்.
ஆகவே, நாம் நமக்குள் வேறுபாடுகள் இருந்தாலும் சில புள்ளிகளில் ஒன்றிணைந்து இலங்கைக்கு அரசுக்கு சர்வதேச சமூகத்தின் உதவியுடன் உள்நாட்டில் வாழும் மக்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் முழு அழுத்தம் கொடுப்பதன் மூலம், அவர்கள் இணக்கியதற்கு அமைவாக நீதிக்கான நிலைமாற்று பொறிமுறையின் மூன்றில் ஒருபங்கையாவது இலங்கை அரசு நிறைவேற்ற பாடுபட வேண்டும்.
அது பாதிக்கபட்ட மக்களுக்கு ஓரளவேனும் நீதியை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கலாம்.
அதை விடுத்து முற்றாக அரசின் சகல செயல்பாடுகளையும் எதிர்த்து கொண்டு சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கையை நிறுத்துவதுதான் போரால் பாதிக்கபட்ட மக்களுக்கு தீர்வை, நீதியை பெற்று தரும் என்று நம்பினால் அது மண்ணில் தைலம் வடிப்பதற்கு சமனாகும். -BBC_Tamil