கண்டி கலவரம் தொடர்பாக இலங்கை அரசு இதுவரை 81 பேரை கைது செய்துள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் பெளத்த இயக்கத்தின் இளம் தலைவரும் ஒருவர்.
அண்மைய கண்டி கலவரத்திற்கு காரணமானவர் என பெளத்த கடும்போக்கு இயக்கமான `மஹசான் பாலாகயா’-வின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கேவை சந்தேகிக்கும் போலீஸ், வியாழக்கிழமை காலை அவரை கைது செய்துவிட்டதாக கூறி உள்ளது.
இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரச்சாரத்தை முன்னெடுக்கும் சில பெளத்த துறவிகளுடன் இணைந்து அமித் வீரசிங்கே செயல்பட்டுவருகிறார். திங்கட்கிழமை திகானாவில் கலவரம் வெடிப்பதற்கு முன்பாக நடந்த ஒரு பேரணியின் வீடியோ காட்சிகளை ஆய்வு செய்ததில், அந்த பேரணியை அமித்தான் தலைமை தாங்கி இருக்கிறார்.
பிபிசியிடம் பேசிய காவல்துறையின் செய்தி தொடர்பாளர் ருவன் குணசேகரா, அவருடன் சேர்த்து 9 பேரை தீவிரவாத கண்காணிப்பு பிரிவு கைது செய்துள்ளதாக கூறினார்.
கலவரத்தில் ஈடுப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 71 பேரை, காவல் துறையின் பல்வேறு பிரிவுகள் கைது செய்துள்ளன.
இந்த கலவரங்களில் 2 பேர் இறந்துள்ளதாக கூறிய போலீஸ், அதில் ஒருவர் சிங்களர், மற்றொருவர் முஸ்லிம் என்றது.
எரிந்த வீட்டிலிருந்து 24 வயதுடைய முஸ்லீம் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. கையெறி குண்டு ஒன்றை வெடிக்க வைத்தபோது, அந்த சிங்களர் இறந்துள்ளார் என்கிறார் காவல்துறை செய்தி தொடர்பாளர்.
மேலும் அவர், பதினொரு பேர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்கள் என்று தெரிவித்தார்.
காலை பத்து மணிக்கு கண்டியில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டதால், அங்கு நிலவி வந்த இறுக்கம் தளர்ந்தது.
ஆனால், முன் எச்சரிக்கை நடவடிக்கையாக மீண்டும் இன்று மாலை முதல், நாளை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு போடப்படும் என்று போலீஸ் தெரிவித்தது. -BBC_Tamil