இலங்கையில் நடப்பதும், நடக்கவிருப்பதும்…! – 4 முக்கிய கேள்வி பதில்கள்

இலங்கையில் கண்டி மாகாணத்தின் மத்திய பகுதி ஒன்றில், பெரும்பான்மை சிங்கள பெளத்த மக்களுக்கும், சிறுபான்மை முஸ்லிம் மக்களுக்கும் இடையே எற்பட்ட மோதலை அடுத்து, மார்ச் மாதம் 6-ஆம் தேதி, அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டது.

இதனை அங்குள்ள எதிர்கட்சிகள் கடுமையாக எதிர்த்துள்ளன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவும், கலவரத்தை சரியான முறையில் கையாள தவறிவிட்டனர் என்று எதிர்கட்சிகள் கடுமையாக தாக்கி உள்ளன.

இலங்கைக்கு அவசரநிலை ஒன்றும் புதிதல்ல. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும், 1971- 2011 ஆகிய ஆண்டுகளுக்கு இடையிலான காலக்கட்டத்தில், பெரும்பான்மையான சமயங்களில் அங்கு அவசர நிலை இருந்துள்ளது.

2011 ஆம் ஆண்டுதான் அவசர நிலை தளர்த்தப்பட்டது. அதன்பின், இப்போதுதான் முதல்முறையாக அங்கு அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பு, தனி நாடு கேட்டு இலங்கையில் போராடி வந்தது. இதற்கு எதிரான உள்நாட்டு போர் வெடித்தது. 1983 – ஆம் ஆண்டுக்கு பின்பான அவசர நிலைக்கு இதுதான் காரணம்.

என்ன நடந்தது?

மார்ச் 4 ஆம் தேதி இலங்கையில் கலவரம் வெடித்தது. இதன் தொடர்ச்சியாக பல மசூதிகள், வீடுகள் அடித்து நொறுக்கப்பட்டன். இந்த கலவரத்தில் இருவர் இறந்தனர். இதன் காரணமாக அங்கு மார்ச் 6- ஆம் தேதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா பத்து நாட்களுக்கு அவசர நிலையை பிறப்பித்தார்.

இலங்கை, கண்டியில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் மற்றும் அவர்களின் கடைகள், வீடுகள் பெரும்பான்மை சிங்கள பெளத்த சமூகத்தால் தாக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது.

மோதல் தொடர்வதை அடுத்து, அந்தப் பகுதியில் மார்ச் 7 (புதன்கிழமை) மீண்டும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது. அதுமட்டுமல்லாமல், சமூக ஊடகங்களும், வாட்ஸ் ஆப் சேவையும் முடக்கப்பட்டுள்ளன.

எதனால் இது ஏற்பட்டது?

சிங்கள பௌத்தர் ஒருவர் கடந்த வாரம் மரணமடைந்தார். முஸ்லீம்களால் தாக்கப்பட்டு அவர் இறந்தார் என்று கூறப்பட்டதை அடுத்து கண்டியில் மார்ச் 4ம் தேதி கலவரம் வெடித்தது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முஸ்லீம்களையும், அவர்களது வீடுகள், கடைகளையும் சிங்கள பெளத்தர்கள் தாக்கினர்.

கண்டியின் சில பகுதிகளில் அமைதியற்ற சூழல் நிலவுவதால், அங்குள்ள அனைத்து அரசாங்க பள்ளிகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதிகளவில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வாட்ஸ் ஆப், ட்வீட்டர், வைபர் உள்ளிட்ட சமூக ஊடகங்களை கண்காணிக்க இலங்கையின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை அரசு வலியுறுத்தி உள்ளது.

இலங்கை மக்கள் தொகையில் முஸ்லீம்களின் பங்கு பத்து சதவீதம். அந்த தீவு நாட்டில் பெரும்பான்மை சிங்களர்களின் மக்கள் தொகை 2.1 கோடி.

எதிர் வினை என்ன?

இங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சே, இது `அரசியல் சதி’ என்பதை மறுக்கிறார். அவர், “ஆளும் ஐக்கிய தேசிய கட்சியின் திறன் இன்மையைதான் இது காட்டுகிறது” என்கிறார். மேலும், “இவ்வரசாங்கம் தங்கள் கடமையிலிருந்து தவறிவிட்டது” என்றும் கூறி உள்ளார்.

அதுபோல, எதிர்கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனாவின் தலைவர் அனுரா குமார திசநாயகெ: “இந்த அரசாங்கம் மக்களின் முக்கிய பிரச்சனையை கையாள தவறிவிட்டது. மக்களின் கவனத்தை திசை திருப்ப அரசுக்கு கிடைத்த ஒரு வரம் இந்த போராட்டங்கள்” என்றுள்ளார்.

சமூக ஊடகங்கள் மீது விதிக்கப்பட்ட தடையை நியாயப்படுத்தி உள்ளது இலங்கை அரசு. “மதக்கலவரங்கள் பரவுவதை தடுக்க இந்த தடை அத்தியாவசியமானது” என்றுள்ளது.

அபிவிருத்தி கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகாரங்கள் துறைக்கான அமைச்சர் ஹர்ஷா டி சில்வா, “ஃபேஸ்புக்கில் வெறுப்பு பேச்சுகள் அளவுகடந்து சென்றுள்ளது. மக்களை காக்க அரசு விரைவாக செயல்படுவது அவசியம்” என்றுள்ளார்.

இலங்கையின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமும் கண்டி மாகாணத்தில் இணைய சேவையை வரைமுறைப்படுத்துமாரு தொலைப்பேசி சேவை அளிப்பவர்களை கோரி உள்ளது.

இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர்களான சனத் ஜயசூரிய, குமார் சங்கக்கார மற்றும் மஹில ஜயவர்த்தன ஆகியோர் மக்கள் அமைதியாக இருக்க வேண்டும் என்று கோரியிருக்கிறார்கள்.

தனது அடுத்த தலைமுறை உள்நாட்டுப் போருக்குள் தள்ளப்படுவதை தான் விரும்பவில்லை என்று மஹில ஜயவர்த்தன கூறியுள்ளார்.

அதேநேரம், அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இலங்கைக்கு பயணிப்பதை தவிர்க்கும்படி தமது நாட்டு மக்களுக்கு ஆலோசனை வழங்கி உள்ளது.

அடுத்து என்ன?

இந்த அவசர நிலை பத்துநாள் வரை தொடரும். அதன் பின் ஜனாதிபதி இதை நீடிக்கலாமா என்று முடிவெடுப்பார் என்று சமூக அதிகாரமளித்தல் துறை அமைச்சர் திசநாயகே கூறி உள்ளார்.

மேலும் அவர், அதற்கு நாடாளுமன்றத்தின்  ஒப்புதல் அவசியம் என்றுள்ளார். -BBC_Tamil

TAGS: