இலங்கை: ”தமிழர் இலக்கு வைக்கப்பட்டது போல முஸ்லிம்கள் மீது இலக்கு”

இலங்கையில் 1983ஆம் ஆண்டு தமிழர்கள் இலக்கு வைத்து தாக்கப்பட்டதுபோல, கண்டி மாவட்டத்தில் இப்போது முஸ்லிம்களின் பொருளாதாரத்தை இலக்கு வைத்து சிங்கள இனவாதக் குழுக்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக இலங்கையின் முக்கிய முஸ்லிம் கட்சியான சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிபிசியிடம் கூறியுள்ளார்.

இவர் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பிபிசியுடன் பேசயபோது, இதன் மூலம் இலங்கையில் முஸ்லிம்களின் பொருளாதாரத்துக்கு கணிசமான பாதிப்பை இந்த வன்செயல்கள் ஏற்படுத்தியுள்ளன என்று கவலை வெளியிட்டார்.

தற்போது, வன்செயல்களால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து, பிரதேச செயலர்கள் மட்டத்தில் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டு, மதிப்பீடு செய்யப்படுவதாக கூறிய அமைச்சர் ஹக்கீம், முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் அனைத்துக்குமான இழப்பீட்டை அரசாங்கமே வழங்க வேண்டும் என்றும் பிபிசியிடம் தெரிவித்தார்.

நாளை கண்டி மாவட்டத்துக்கு வரவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் இதனை வலியுறுத்தப்போவதாக அவர் குறிப்பிட்டார்.

பெரியதும், சிறியதுமாக 30 பள்ளிவாசல்கள் வரை அங்கு சேதமாக்கப்பட்டுள்ளதாக கூறிய அமைச்சர், அங்காடி வளாகங்களில் கூட முஸ்லிம்களின் கடைகள் தனித்தனியாக பிரிக்கப்பட்டு தாக்குதல்கள் கன கச்சிதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறினார்.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட சில சிங்கள இனவாதக் குழுக்களே இந்த வன்செயல்களுக்கு காரணம் என்றும், ஊரடங்கு தளர்த்தப்பட்ட பட்டப்பகல் வேளையில் கூட அவர்கள் தாக்குதலை நடத்தியுள்ளதாகவும் அமைச்சர் ரவூப் ஹக்கீம் கூறினார்.

முஸ்லிம்களின் வணிகங்களும், வீடுகளும் வழிபாட்டிடங்களுமாக கோடிக்கணக்கான சொத்துக்கள் நிர்மூலமாக்கப்பட்டுள்ளதாக கூறுகின்ற ரவூப் ஹக்கீம், 1983ஆண்டில் தமிழர்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இன வன்முறைகளைப் போன்று இவையும் வெகுவாக திட்டமிட்டே நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

கண்டி மாவட்டத்தில் இனவன்செயல்களால் தமது இருப்பிடங்களை விட்டு வெளியேறி, உறவினர்களின் வீடுகள் மற்றும் பொது இடங்களில் பாதுகாப்பாக தங்கியிருக்கும் மக்கள், இயற்கை உபாதை போன்ற விசயங்களுக்காக தமது இருப்பிடங்களுக்கு சென்று திரும்புவதாகவும், அவர்கள் இன்னமும் பதற்றத்துடனும் அச்சத்துடனுமே இருப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

அம்பத்தென்ன, அக்குறண, 8ஆம் கட்டையடி, பூஜாப்பிட்டிய, அலவத்துகொட ஆகிய இடங்களில் இன்னமும் பதற்றம் தொடர்வதாகவும், அங்கு சுமார் 2000 போலிஸார் பாதுகாப்புக்கு போடப்பட்டுள்ளதாகவும், தானும் அங்கேயே இருப்பதாகவும் அவர் கூறினார்.

இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருத்த அடி

இந்த வன்செயல்களால் இலங்கையின் பொருளாதாரத்துக்கு பெருத்த அடி விழுந்துள்ளதாக இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறியுள்ளார்.

அதேவேளை, கண்டி வன்செயல்கள் மற்றும் அவசரநிலைப் பிரகடனம் ஆகியவற்றை தொடர்ந்து இலங்கைக்கு வரவிருந்த பல வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தமது பயணத்தை ரத்துச் செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இரு முக்கிய சுற்றுலா நிறுவனங்களின் தகவல்களின்படி மட்டும் 80 பேர் இவ்வாறு பயணங்களை ரத்து செய்துள்ளதாகவும் அவை கூறியுள்ளனர்.

கலவரங்களை அரசாங்கம் அடக்கத் தவறியது குறித்து அரசியல் கட்சிகள் மாத்திரமல்லாது பல பொது அமைப்புக்களும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றன. இலங்கை பல்கலைக்கழகங்களின் ஆசிரியர்களுக்கான சம்மேளனமும் இதை கண்டித்துள்ளது.

அதேவேளை இலங்கையின் மத்திய பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த வன்முறைகளுக்கு வடக்கு கிழக்கு மாகாணங்களில் உள்ள முஸ்லிம்கள் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியுள்ளார்கள் குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் இன்று முஸ்லிம்கள் பூரணமான கடையடைப்பில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே கண்டி வன்செயல்களுக்கு காரணமான முக்கிய சந்தேக நபர் உட்பட 81 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலிஸார் கூறியுள்ளனர்.

கண்டி வன்செயல்களில் இதுவரை இருவர் பலியானதுடன், 11 வரை காயம் அடைந்ததாக போலிஸார் கூறியுள்ளனர். பல்லேகல்ல பகுதியில் ஒரு இளைஞர் பலியானதுடன், பூஜாப்பிட்டிய பகுதியில் கலவரக்காரர்கள் மத்தியில் ஒரு கைக்குண்டு வெடித்து அவர்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், ஏனைய சிலர் காயமடைந்துள்ளனர். -BBC_Tamil

TAGS: