கண்டியில் முப்படைகளும் குவிப்பு – திரும்பிய திசையெங்கும் கவசவாகனங்கள்

கண்டி மாவட்டத்தில் முப்படைகளையும் சேர்ந்த 3000இற்கும் அதிகமானோர் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்து தெரிவித்தார்.

“சிறிலங்கா இராணுவத்தினர் 2500 பேரும், கடற்படையினர் 600 பேரும், விமானப்படையினர் 30 பேரும், பொதுமக்களின் பாதுகாப்புக்கான பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவசர தேவைகளுக்கு உதவத் தயார் நிலையில் மேலும் படையினர் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

படையினர் பாதுகாப்புக்கு நிறுது்தப்பட்ட பின்னர் வன்முறைகள் தணிந்துள்ளன. சட்டத்தை மீறுகின்ற எவர் மீதும் நாங்கள் கடுமையான நடவடிக்கையை எடுப்போம்.

எந்தச் சூழ்நிலையையும் எதிர்கொள்வதற்குத் தேவையான ஆளணி எம்மிடம் உள்ளது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, நேற்று கண்டிக்குப் பயணம் மேற்கொண்டிருந்த சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வன்முறைகள் இடம்பெற்ற திகண, கலஹா, கட்டுகஸ்தோட்ட, மெனிக்கின்ன, அம்பத்தென்ன, அக்குறணை, பூஜாபிட்டிய உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்று நிலைமைகளை அவதானித்தார்.

அத்துடன், கண்டியில் உள்ள மத்திய படைகளின் தலைமையகத்தில், இராணுவ அதிகாரிகளுடன், பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக கலந்துரையாடியுள்ளார்.

இதையடுத்து, பள்ளிவாசல்களின் மௌலவிமாரைச் சந்தித்துப் பேசிய சிறிலங்கா இராணுவத் தளபதி, முஸ்லிம்கள் வாழும் பகுதிகளிலுள்ள பள்ளிவாசல்கள், வீடுகளுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்கப்படும். எல்லா பொதுமக்களினதும் பாதுகாப்பை சிறிலங்கா படையினர் உறுதிப்படுத்துவர்.

கூடிய விரைவில் வழமை நிலையை ஏற்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் பாதுகாப்பு முழுமையாக உறுதிப்படுத்தப்படும் வரை சிறிலங்கா இராணுவத்தினர் விலக்கிக் கொள்ளப்படமாட்டார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, கண்டி மாவட்டத்தில் பிரதான வீதிகளெங்கும், சிறிலங்கா இராணுவத்தின் கவசவாகனங்களும், துருப்புக்காவிகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

பெரும் எண்ணிக்கையான படையினர் வீதிகள், முக்கிய இடங்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இராணுவ வாகனங்களின் ரோந்து நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைகளுக்கு அனுப்புவதற்காக வெள்ளை நிறப்பூச்சு அடிக்கப்பட்ட துருப்புக்காவிகளும் கண்டி வீதிகளில் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளன.

-puthinappalakai.net

TAGS: