இலங்கையில் கண்டி மாவட்டத்துக்கு வெளியே இரு இடங்களில் முஸ்லிம்களின் சொத்துக்கள் மீது தாக்குதல்கள் நடந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் புத்தளம் மாவட்டத்தில் உள்ள ஆனமடுவ என்னும் இடத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான ஹோட்டல் ஒன்று இனந்தெரியாத நபர்களால் இன்று அதிகாலை எரிக்கப்பட்டுள்ளது.
ஹோட்டலுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளதாக அங்கு சென்றுவந்த செய்தியாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்ற போதிலும், பகுப்பாய்வுகள் நடப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அங்கு தற்போது போலிஸார் பாதுகாவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர்.
இதற்கிடையே, களுத்துறை மாவட்டத்தில் தர்கா நகர் என்னும் இடத்தில் முஸ்லிம்களின் ஒரு வீட்டின் மீது குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
தர்கா நகரின் எல்லைப் பகுதியில் உள்ள வீடு ஒன்றே இவ்வாறு தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக பேருவளை பிரதேச சபையின் முன்னாள் துணைத்தலைவரான எம்.எச்.எம். குசைன் மத் கூறினார். தர்கா நகர் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் பகுதியாகும்.
2014 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இதே தர்கா நகர் தாக்கப்பட்டதில் இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் பலர் காயமடைந்ததும் பெருத்த சொத்துச் சேதம் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
கண்டி தாக்குதலை அடுத்து வதந்திகள் பரவாமல் இருக்கும்நோக்கில் தடை செய்யப்பட்ட சமூக வலைத்தளங்கள் இன்னமும் இலங்கையில் செயற்பாட்டுக்கு வரவில்லை. நிலமை இன்னமும் தெளிவாகும் வரை அவற்றின் மீதான தடை தொடர் என்று அரசாங்க வட்டாரங்கள் கூறுகின்றன. -BBC_Tamil