கண்டியில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக சிங்கள பௌத்தர்களால் கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைத் தாக்குதலானது ‘மதம் சார்ந்த தாக்குதல் அல்ல. நீண்ட கால யுத்தத்தால் பாதிக்கப்பட்ட- இரண்டு கிளர்ச்சிகளை எதிர்கொண்ட ஒரு சமூகம் சந்தித்த மிருகத்தனமான சம்பவங்களின் மற்றொரு வெளிப்பாடாக உள்ளது என்று முன்னாள் ஐ. நா மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
‘சிறிலங்காவின் புதிய அரசாங்கமானது மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் என்பதில் நான் மிகப்பெரும் நம்பிக்கையைக் கொண்டிருந்தேன். இந்த உறுதிமொழிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்றுவதாக வாக்குறுதி வழங்கியிருந்ததுடன் இது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தனது நாட்டில் அமுல்படுத்துவதாக சிறிலங்கா அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகளின் உறுப்பு நாடுகளிடம் உறுதியளித்திருந்தது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானத்தை நிறைவேற்றக்கூடிய ஜனநாயக நிறுவகங்கள் மற்றும் சுயாதீன நீதிச்சேவையை சிறிலங்கா கொண்டுள்ளது. ஆனால் நீதி மற்றும் சீர்செய்தலுடன் தொடர்புபட்ட இத்தீர்மானத்தை சிறிலங்கா அரசாங்கம் முழுமையாக நிறைவேற்றவில்லை’ என தென்னாபிரிக்க உயர் நீதிமன்றின் நீதிபதி நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட கடப்பாடுகள் நிறைவேற்றப்படாத வரை இலங்கையர்கள் ஒருபோதும் நம்பிக்கையை எட்டமாட்டார்கள் என நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டினார்.
சிறிலங்காவில் இதுவரை எடுக்கப்பட்டுள்ள நகர்வுகள் அனைத்தும் வரவேற்கத்தக்கவை. எனினும் இவை முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. நாட்டில் நிலையான சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை எட்டுவதற்காக வெளிப்படையான மற்றும் பகிரங்கமான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதன் ஊடாக மோதல்கள் ஏற்பட்டதற்கான மூலப் பிரச்சினைகள் கண்டறியப்பட்டு தீர்க்கப்பட வேண்டும் என நவநீதம் பிள்ளை விளக்கியுள்ளார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் சிறிலங்கா தொடர்பில் தற்போது எவ்வாறான நகர்வுகள் முன்னெடுக்கப்படுகின்றன என்பது தொடர்பாக நான் அறிந்திருக்கவில்லை. எனினும், சிறிலங்கா அரசாங்கமானது தனது நாட்டில் இடம்பெற்ற பல்வேறு மோசமான மீறல்களில் ஈடுபட்டவர்களை இனங்கண்டு அவர்களை நீதியின் முன்நிறுத்துவதற்கும் அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கும் தவறியுள்ளதாக நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
‘குற்றவாளிகள் தண்டிக்கப்படாவிட்டால், நாட்டில் வாழும் ஏனையோர் சட்டத்தைத் தமது கைகளில் எடுப்பதற்கான உந்தப்படுவார்கள் என்பதை நாம் அறிவோம். இன்று, கண்டியில் பாதிக்கப்பட்ட ஒரு சிறுபான்மையினத்தவரை சட்டம் பாதுகாக்கவில்லை. நாளை, இதே நிலை பெரும்பான்மை மக்களுக்கு ஏற்படலாம்’ என நவநீதம் பிள்ளை சுட்டிக்காட்டினார்.
‘மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்கு சிறிலங்கா இணைஅனுசரணை வழங்கிய போது, இந்த நாட்டின் எதிர்கால நிலைத்தன்மை மற்றும் வளர்ச்சியில் சிறந்த ஆர்வமானது போர்க் குற்றங்களுக்கான நீதி மற்றும் பொறுப்புக்கூறலிலேயே தங்கியுள்ளது என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்’ என சிரியாவில் பாடசாலைகள் அழிக்கப்பட்டமை தொடர்பாக இடம்பெற்ற ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் 37வது கூட்டத்தொடரில் கலந்து கொண்டு உரையாற்றிய போது நவநீதம் பிள்ளை தெரிவித்திருந்தார்.
‘நாட்டில் சட்ட ஆட்சி நிலவுகின்றதே அன்றி இராணுவ ஆட்சி அல்ல என்கின்ற உறுதியான செய்தி அனுப்பப்படுவது மிகவும் அவசியமானதாகும்’ என இவர் குறிப்பிட்டார்.
நீதி மற்றும் நல்லாட்சி தொடர்பில் மக்கள் கொண்டுள்ள தீர்க்கமுடியாத தாகத்தை தான் எப்போதும் பாராட்டுவதாகவும் நவநீதம் பிள்ளை தெரிவித்தார். ‘நூரன்பேர்க் கொள்கை வகுப்பு நிறுவகத்தின் ஆலோசகர் சபையின் தலைவர், மரண தண்டனைக்கு எதிரான அனைத்துலக ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலிற்கான ஆபிரிக்கக் குழுவின் உறுப்பினர் என்ற வகையிலும் ஆபிரிக்காவின் அனைத்து பகுதியிலுமுள்ள நீதிபதிகளுடன் பணியாற்றியுள்ளவர் என்ற வகையிலும், நீதிக்கான கோரிக்கைகள் மற்றும் தவறுகளிலிருந்து மீளெழுவதைப் பாதுகாப்பதற்கான கோரிக்கைகள் போன்றன யுத்தத்திற்குப் பின்னர் மக்களால் மறக்கப்படவில்லை.’ என நவநீதம் பிள்ளை தெரிவித்தார்.
-puthinappalakai.net