“தாமதிக்கும் தந்திரத்தை இலங்கை அரசு கடைப்பிடித்து சர்வதேச சமூகத்துக்கு வழங்கிய வாக்குறுதிகளைத் தட்டிக்கழிக்கின்றது.”
– இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் தெரிவித்தார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய நாடுகள் இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
ஐ.நா. மனித உரிமைகள் சபையின் 37ஆவது கூட்டத்தொடர் இடம்பெற்று வருகின்றது. இலங்கை விவகாரம் தொடர்பில் பக்க மாநாடுகளும் நடைபெறுகின்றன.
‘இலங்கையில் இடம்பெற்ற படுகொலைகளுக்கான பொறுப்புக்கூறலிலிருந்து சர்வதேச சமூகம் எவ்வாறு தோற்றுப்போனது?’ எனும் தொனிப்பொருளில் அமைந்த பக்க நிகழ்வு 25ஆம் இலக்க அறையில் இடம்பெற்றது. நாடு கடந்த தமிழீழ அரசு இந்த அமர்வை ஏற்பாடுசெய்திருந்தது.
இந்த அமர்வில், இலங்கையின் நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளை கண்காணிக்கும் சர்வதேச நிபுணர் குழுவின் ஒருங்கிணைப்பாளரும் கம்போடிய கலப்பு நீதிமன்ற சட்டவாளருமாகிய ரிச்சாட் ரோஜஸும் கலந்துகொண்டிருந்தார்.
இதில் அமெரிக்காவின் முன்னாள் போர்க்குற்ற நிபுணர் ஸ்ரீபன் ராப் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு கூறினார்.
-tamilcnn.lk