சிங்கள இனம்: உலகின் குற்றச்சாட்டை எதிர்கொள்ளுமா?

இந்தியாவுக்கு பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட வேளையில், காந்தியைப் பார்த்து, கேள்வி ஒன்றைக் கேட்டார் பிரித்தானியர் ஒருவர்.

“எம்மவர்களால் (பிரித்தானியரால்) உங்கள் நாட்டின் அனைத்துச் சொத்துகளும் சூறையாடப்பட்டு விட்டன. இனி எப்படி, ஒன்றுமே இல்லாத உங்கள் நாட்டைக் கட்டி எழுப்பப் போகின்றீர்கள்” என்பதே அந்த வினா ஆகும்.

“எமது நாட்டின், பௌதீக வளங்களை நீங்கள் சூறையாடி இருக்கலாம். ஆனால், எமது நாட்டு மக்கள், எங்கு தடுக்கி விழுந்தாலும், எம்மைத் தாங்கிப் பிடிக்க, ஏராளமான மனித நேயமுள்ள மனிதர்கள், வாழும் தேசம் நம் பாரத தேசம்” எனப் பதிலடி வழங்கினார் காந்தி.

ஆனால், இலங்கை தேசத்தில் வாழும் சிறுபான்மை மக்கள், மனிதநேயம் என்றால் என்ன என்பதை, வெற்றுக் காகிதத் தாளில் எழுதியே பார்க்க முடியும். மாறுபட்ட கருத்துகளையும் வேறுபட்ட சமயக் கருத்துகளையும் மாண்புடன் ஏற்றுக் கொள்வதே, உயர்வான மானிடப் பண்பாகும்.

இலங்கையில் ஒற்றையாட்சி 

சுத்திரத்தக்குப் பின்னர், நமது நாட்டை ஆட்சிசெய்த ஆட்சியாளர்கள், ஒற்றை இனத்துக்கு, ஒற்றை மதத்துக்கு, ஒற்றை மொழிக்குத் தொடர்ந்து, அதிமுன்னுரிமை வழங்கிய காரணத்தால், நாட்டில் ஒற்றுமை நீங்கி, வேற்றுமை வியாபித்து, உருப்படாமல் போய் விட்டது. ‘வேற்றுமையிலும் ஒற்றுமை’ என்ற உயர் கருத்து, வேருடன் பிடுங்கப்பட்டு விட்டது.

“ஒரு சிலரின் இழிவான செயல்கள் காரணமாக, முழு உலகிலும் வாழும் சிங்கள இனம், குற்றச்சாட்டை எதிர்நோக்கி இருக்கின்றது” என, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்து உள்ளார். வெல்லம்பிட்டி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வு ஒன்றில், கலந்து கொண்டு பேசும் போதே பிரதமர், இவ்வாறாகத் தெரிவித்திருந்தார்.

“அண்மையில் இடம்பெற்ற கலவரச் சம்பவங்கள் ஊடாக, உலகின் ஏனைய நாடுகளுடன், இலங்கையை ஒப்பிட்டுப் பார்க்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. அது மாத்திரமல்ல, தெற்காசியாவில் வாழும் ஏனைய பௌத்த மக்களுக்கும் இனவிரோத, மதவிரோதச் செயற்பாடுகள் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது” எனப் பிரதமர், மேலும் தெரிவித்து உள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிராக, கண்டியில் மூண்ட இனவன்முறை, ஆரம்பித்து, கலகக்காரர்கள் தங்களது இலக்கை அடையும் முன்பே, அது உலகின் கவனத்தை உடனடியாக ஈர்த்து விட்டது. இந்தக் காலப்பகுதியில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை மாநாட்டு அமர்வுகள், நடைபெற்றுக் கொண்டு இருந்தபோது, அங்கும் கலவர அதிர்வுகள் எதிரொலித்தன.

அரபு நாடுகள், இடம்ெபற்ற வக்கிர வன்முறைகளை உன்னிப்பாக அவதானித்துக் கொண்டிருந்தன. தொடர்ந்து சர்வதேச நாடுகள், சர்வதேச அமைப்புகள் எனச் சர்வதேச சமூகமும் இன வன்முறைக்கு எதிராகக் குரல் கொடுத்தது. இவ்வாறாக அடுத்தடுத்து வந்த கடும் அழுத்தங்களால், அரசாங்கம் ஆடிப்போய் விட்டது.

பெரும் எடுப்பில், 2009இல் நடைபெற்ற இறுதி யுத்தத்தில் கூட, தணிக்கை செய்யப்படாத சமூக ஊடகங்கள் உடனடியாகத் தடை செய்யப்பட்டன. வன்முறை மேலும் பரவுவதைத் தடை செய்யும் பொருட்டே, சமூக ஊடகங்களைத் தடை செய்வதற்கான காரணம் எனச் சொல்லப்பட்டது.

ஆனால், நெல்லுக்கு இறைத்த நீர் புல்லுக்கும் செல்வது போல, இதன் மூலமாகப் பாதிக்கப்பட்ட மக்களது இழப்புகள், சேத விவரங்கள் வௌிப்படுத்தப்படுவதும் கூடவே தடை செய்யப்பட்டது எனலாம்.

உண்மையில் பிரதமர் கூறுவது போல, ஒரு சிலரின் நடவடிக்கை என, இதை எடை போடலாமா? அல்லது தீவில் தொடரும், சிறுபான்மை மக்களுக்கு எதிரான, வக்கிர உணர்வின் வெளிப்பாடு எனக் கருதலாமா?
இலங்கையில் 1958, 1977, 1983 என வெவ்வேறு காலகட்டங்களிலும் தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளும் கலவரங்களும், இவ்வாறான சிறு குழுவினரால்த்தான் அக்காலத்திலும் கட்டவிழ்த்து விடப்பட்டதா?

எத்தனை மனித உயிர்கள், முள்ளிவாய்க்கால் வேள்வித் தீயில் பொசுங்கின; பலிகொடுக்கப்பட்டன. ஜப்பானியர்களுக்கு ஹிரோஷிமா போல, ஈழத் தமிழர்களுக்கு முள்ளிவாய்க்கால் உள்ளது. அங்கு, வார்த்தைகளில் வடிக்க முடியாத வக்கிரங்கள் நடந்தேறின. அதன் நீட்சி இன்றும் தொடர்கின்றது. ஆனால், அந்தக் கொடூரங்கள், அந்த நேரத்தில் சர்வதேசத்தின் இதயங்களைப் பலமாகத் தட்டவில்லை; செவியைத் ஊடறுத்துச் செல்லவில்லை.

அவ்வாறாகச் செல்ல, அன்றைய ஆட்சியாளர்கள் அனுமதிக்கவில்லை. நாட்டின் ஒருமைப்பாட்டையும் அமைதியையும் குழப்பும், பயங்கரவாதிகள் மட்டுமே படுகொலை செய்யப்படுகின்றார்கள் என்ற ஒற்றை வாசகம், அந்தக் கொடூரங்களுக்குத் துணை நின்றன.

ஆனால் இன்று, உலகப் பொது மன்றத்தில் கண்டிச் சம்பவங்கள் உடனடியாகத் தெரிந்துவிட்டதால் ஆட்சியாளர்கள் அல்லல்படுகின்றனர்.

சுற்றுலாப் பயனிகள் அதிகம் சென்றுவரும் இடம் கண்டி என்பதால், கலவர சம்பவங்களால் முழு நாட்டினுடைய சுற்றுலாத்துறையும் சுருண்ட விடும் அபாயமும் உள்ளது. ஆதலால், நாட்டின் வருமானம் வங்குரோத்து நிலையை அடையும் என்பதாலும், ஆட்சியாளர்கள் அங்கலாய்க்கின்றனர்.

சுற்றுலாப் பயனிகளின் வருகை குறைவதால், தமது வருமானம் பாதிக்கப்படுவதாகவும் வாழ்க்கையைக் கொண்டு நடாத்த முடியாமல் தாம் திணறுவதாகவும் பல முச்சக்கர வண்டிச் சாரதிகள் தன்னிடம் கூறியதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்து உள்ளார்.

தமிழர் பிரதேசங்களை நோக்கி, தென்பகுதி சிங்கள மீனவர்களது தொடர்ச்சியான வருகையாலும் அவர்களது அத்துமீறிய செயற்பாடுகளாலும் தமது வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்படுவதாக, தமிழ் மீனவர்கள் மற்றும் அவர்களது அமைப்புகள் தொடர்ச்சியாகக் குரல் கொடுத்து வருகின்றனர்.

தமது பகுதிகளில் உள்ள அரச அலுவலகங்களில், சிங்கள இளைஞர்கள் யுவதிகளுக்குத் தொடர்ச்சியாக அரச நியமனங்கள் வழங்கப்பட்டு வருவதாகவும் தாங்கள் வேண்டுமென்றே புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தமிழ் மக்கள் வேதனையிலும் விரக்தியில் உள்ளனர்.

ஆனால், இவை ஒன்றுமே ஆட்சியாளர்களுக்கு அந்த வேளைகளில் அலாரம் அடிக்கவில்லை. ஆனால் இன்று, தம்மவர்கள் பாதிக்கப்படும் போது, துடிக்கிறார்கள். ஆகவே, இதுவே இலங்கைத் தீவின் இனப்பாகுபாட்டுக்குச் சின்ன உதாரணம் ஆகும்.

கண்டிக் கலவரங்களை அடுத்து, தீவில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒரு வித பய உணர்வுடனேயே காலத்தை ஓட்டினர். அடுத்து எங்கும், என்னவும் நடக்கலாம் என்ற நிலை காணப்பட்டது.

இதையடுத்து, புத்தளம், ஆனமடு போன்ற பிரதேசங்களிலும் வன்முறைகள் மூண்டன. தீவின் எந்தப் பகுதியிலும், செல்வந்தர்களாக வாழும் முஸ்லிம்கள், ஆண்டிகள் ஆக்கப்படக் கூடிய வாய்ப்புகள் உருவாகி இருந்தன.

ஆகவே, காலங்காலமாகச் சிறு குழுவினர் செய்த காரியம் எனப் பெரும் பொறுப்புள்ள ஆட்சியாளர்கள், சிறுபிள்ளைத்தனமாகத் தொடர்ந்து கூறி வருவதால், சிறுபான்மை இனம் சின்னாபின்னமாக போய் விட்டது.
அடுத்து, அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பிரதமர் செவ்வி வழங்கியிருந்தார். அதில், வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பான வினாவுக்குப் பதில் அளிக்கையில், “வடக்கில் தமிழர்கள் பெரும்பான்மையா, எனத் தனக்குத் தெரியாது” என்று பதில் வழங்கி உள்ளார். அத்துடன், “கிழக்கில் தமிழர்கள் பெரும்பான்மை இல்லை” எனவும் கூறியிருந்தார்.

கிழக்கில், தமிழர்கள் இயற்கையாக சிறுபான்மை ஆகவில்லை. தொடர்ந்து, ஆட்சி பீடம் ஏறிய சிங்கள ஆட்சியாளர்களின் ஆக்ரோசமான ஆக்கிரமிப்பே, கிழக்கில் தமிழர்களின் பெரும்பான்மையை இழக்கச் செய்தது.

தமிழ் மக்கள் கிழக்கில் சிறுபான்மையாக, நன்கு திட்டமிட்டு ஆக்கப்பட்டார்கள். தொடர்ந்து, வடக்கு மாகாணத்திலும் அவர்களைச் சிறுபான்மை ஆக்கும் நடவடிக்கைகளை, ஆக்கத்திறனுடன் ஆரம்பித்தும் உள்ளனர்.

நாற்பது வருடங்கள் தொடர்ந்து நாடாளுமன்றத்தை அலங்கரிக்கும், பல தடவைகள் பல அமைச்சுப் பொறுப்புகளை  வகித்தும் பல தடவைகள் பிரதமராகப் பதவிவகித்தும் தற்போதும் பிரதம மந்திரியாகப் பணியாற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின், பிரதான பங்காளியான ஐ.தே.கவின் தலைவரும், அரசியல் அனுபவத்தில் முதிர்ந்தவருமான ரணில் விக்கிரமசிங்கவுக்குத் தோன்றிய சந்தேகம் பாரதூரமானது.

பிறிதொரு விதத்தில், தமிழ் மக்களைக் கீழ்தரமாக எண்ணும் எண்ணத்தின் வௌிப்படையாகவும் ஏன் தமிழ் மக்கள் எண்ணக் கூடாது.

இனப்பிரச்சினைக்கான அடிப்படைக் காரணங்கள், அதன் பரிணாம வளர்ச்சி, தற்போதைய நிலை, என யாவற்றையும்  பிரதமர் நன்கு அறிந்திருக்க வேண்டும்; அறிந்துள்ளார்.ஆனாலும், இவை போன்ற தொடர்பற்றதும் பொறுப்பற்றதுமான பதில்கள், தமிழ் மக்களை அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளாக்குகின்றன.

இவர்கள், ஏன் இவ்வாறாகப் பேசுகின்றனர்? இவர்கள் மாறவே மாட்டார்களா? எனத் தமிழ் மக்கள் சலித்துக் கொள்கின்றனர்.

அன்று, தமது வாழ்வதற்கான உரிமைப் பிரச்சினையை, ஆட்சியாளர்களில் நம்பிக்கை இழந்து, ஐ. நா சபைக்கு தமிழ் மக்கள் கொண்டு சென்றார்கள்.

இன்று, முஸ்லிம் மக்களும் தமது வாழ்வதற்கான உரிமைப் பிரச்சினையை, ஆட்சியாளர்களில் நம்பிக்கை இழந்து, ஐ.நா சபைக்குக் கொண்டு சென்றுள்ளனர். இதுபோலவே, இரு கரங்களும் இறுக்கமாக இணையட்டும்; விடிவு பிறக்கட்டும்.

(காரை துர்க்கா)

-tamilmirror.lk

TAGS: