நியூயோர்க்கில் ஐ.நா, அமெரிக்க உயர் அதிகாரிகளுடன் சுமந்திரன் பேச்சு

அமெரிக்காவுக்குச் சென்றுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், உலகத் தமிழர் பேரவையி்னருடன் இணைந்து, ஐ.நா மற்றும் அமெரிக்க அதிகாரிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தி வருகிறார்.

சிறிலங்கா தொடர்பான விவாதம் நாளை ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இடம்பெறவுள்ள நிலையில், இந்தச் சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஜெனிவா வாக்குறுதிகளை நிறைவேற்ற சிறிலங்கா அரசாங்கம் போதிய நடவடிக்கைகளை எடுக்காத நிலையில், மாற்றுவழிகளை ஆராயுமாறு உறுப்பு நாடுகளைப் பரிந்துரைக்கப் போவதாக ஐ.நா மனித உரிமை ஆணையாளர் செயிட் ராட் அல் ஹுசேன் தெரிவித்திருந்தார்.

இதற்கமைய, மாற்று வழிமுறைகளில் சிறிலங்காவைப் பொறுப்புக்கூறவைப்பதற்கு அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருவதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர். எம்.ஏ.சுமந்திரன் அமெரிக்கா சென்றுள்ளார்.

அவர், உலகத் தமிழர் பேரவையின் தலைவர் அருட்தந்தை இம்மானுவல் அடிகளார், பிரித்தானிய தமிழர் பேரவையின் தலைவர் சுரேன் சுரேந்திர உள்ளிட்டவர்களுடன் இணைந்து,  நியூயோர்க்கில், அரசியல் விவகாரங்களுக்கான ஐ.நா உதவிச்செயலர் ஜெப்ரி பெல்ட்மன் மற்றும், அரசியல் விவகாரத் திணைக்களத்தின் பணிப்பாளர் மேரி ஜமாசிட்டா ஆகியோரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

அதேவேளை, நியூயோர்க்கில் உள்ள ஐ.நாவுக்கான அமெரிக்க தூதரகத்தில், அமெரிக்காவின்  ஐ.நாவுக்கான  பதில் துணைத் தூதுவர் கெல்லி கியூரி அம்மையாரையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

நாளை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை அமர்வில், சிறிலங்காவுக்கு அழுத்தங்களைக் கொடுக்கும் நகர்கவுளை முன்னெடுப்பது பற்றி இந்தச் சந்திப்புகளின் போது பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

-puthinappalakai.net

TAGS: