ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது

போருக்குப் பின்பான ஈழத் தமிழர்களின் எதிர்காலம் சர்வதேசத்தின் கைகளில் உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. விடுதலைப் புலிகள் இருந்த காலத்தில் இனப்பிரச்சினைக்கு உயர்ந்த பட்ச தீர்வுத் திட்டங்களை முன்வைத்த இலங்கை ஆட்சியாளர்களும் சிங்களத் தரப்புக்களும் இப்போது இனப்பிரச்சினை என ஒன்று இல்லை என்கிறார்கள். இன்னும் சிலர் விடுதலைப் புலிகள் இல்லாத போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு என எதையும் முன்வைக்கத் தேவையில்லை என வெளிப்படையாகவே கூறி வருகின்றனர்.

ஆக, ஈழத் தமிழ் மக்கள் ஆயுத பலத்துடன் இருந்த போது இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நினைப்பு இலங்கை ஆட்சியாளர்களிடம் இருந்தது. ஆனால் 2009ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்ட பின்னர் தமிழ் மக்கள் என்றால் – அவர்கள் சிறுபான்மை இனம் என்பது மட்டுமல்லாமல்; அவர்களை அனைத்து விடயங்களில் இருந்தும் ஓரங்கட்டுதல் என்ற விடயத்தை மிகவும் நுட்பமாகத் திட்டமிட்டு அரங்கேற்றுகின்ற நடவடிக்கையி லும் பேரினவாத சக்திகள் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் ஈழத் தமிழ் மக்களின் விடயத்தில் சர்வதேச சமூகம் தலையிட்டு கடுமையான அழுத்தங்களை இலங்கை அரசு மீது பிரயோகித்தால் அன்றி இனப்பிரச்சினைக் கான தீர்வு என்பதையோ உரிமை மற்றும் அதிகாரம் என்பதையோ தமிழ் மக்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் பெற்றுக் கொள்ள முடியாது என்பதே உண்மை. ஆகையால் சர்வதேச சமூகத்தின் தலையீடு இன்றி இலங்கையின் ஆட்சியாளர்கள் எவ ரும் தமிழினத்துக்கு உரிமை தரமாட்டார்கள் என்ற உண்மையை உலகம் முழுவதும் வாழும் தமிழ் மக்கள் சர்வதேச சமூகத்திடம் எடுத்துக் கூற வேண்டும்.

அதேநேரம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையிலும் தமிழ் மக்களின் அவலத்தை எடுத்துக் கூறும் பொருட்டு பேரவையில் பங்கேற்கும் உறுப்புரிமை நாடுகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து இலங்கை ஆட்சியாளர்களின் போக்கையும் தமிழினம் பட்ட துன்பம் போக எதிர்காலத்தில் படப்போகின்ற துயரங்களையும் எடுத்துரைத்து அவர்களின் ஆதரவைப் பெறுவதும் கட்டாயமானதாகும்.

இதனை புலம்பெயர் தமிழ் மக்கள் ஓரளவு செய்து வருகின்றனராயினும் ஈழத் தமிழினத்தின் அரசியல் பிரதிநிதிகளும் புத்திஜீவிகளும் ஏனைய பொது அமைப்புக்களும் ஒன்றிணைந்து ஒரு சரியான பொறிமுறையின் கீழ் மேற் குறிப்பிட்ட விடயத்தை அமுல்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சியை ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூடும் போது செய்தல் என்றில்லாமல், தொடர்ச்சியாகச் செய்வதே பலன் தரும் என்பதால் இதுவிடயத்தில் காத்திரமான நடவடிக்கை தேவை.

-tamilcnn.lk

TAGS: