“இராணுவத்தை வடக்கில் வைத்துக்கொண்டும், அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டும் பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது நுண்ணறிவுள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் ‘சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்’ என்று ஆகிவிடும்.” என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
வாரத்துக்கொரு கேள்வி என்ற வழக்கத்தின் கீழ் முதலமைச்சரிடம் இவ்வாரம் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கேள்வியும் பதிலும் வருமாறு,
கேள்வி: சிலர் வடமாகாணத்தில் பொருளாதார விருத்தி முதலிடம் பெற வேண்டும் என்றும் அது நல்லிணக்கத்திற்கு வித்திடும் எனவும் கூறுகிறார்கள். வேறு சிலர் அரசியல் தீர்வுக்குப் பின்னரே பொருளாதார விருத்தி ஏற்பட வேண்டும் என்கின்றார்கள். உங்கள் கருத்து என்ன?
பதில்: பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்ற கருத்தை மாறிவரும் மத்திய அரசாங்கங்களே முன்வைத்து வருகின்றன. தமிழ் மக்களின் அரசியல்த் தேவைகளை முன்னெடுக்காமல் அவற்றிற்குத் தீர்வு காணாமல் அதற்குப் பதிலாகப் பெரும்பான்மை அரசாங்கங்கள் முன்வைக்கும் கருத்துத்தான் பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்பதாகும். மத்திய அரசாங்கங்களாலும் பெரும்பான்மையின மக்களாலும் முன்வைக்கும் சில கருத்துக்கள் பார்வைக்குச் சரியாகப் புலப்பட்டாலும் அவற்றுள் அடங்கியிருக்கும் கருத்தாழம் பலருக்குப் புரிவதில்லை.
உதாரணத்திற்கு “நாம் எல்லோரும் இலங்கையர்களே; எம்முள் வேற்றுமைகள் வேண்டாம். நாம் ஒரு தாய் மக்களே. இலங்கை மாதாவின் புத்திரர்களே”என்று சிலர் கூறும் போது அது சரியாகத்தான்படுகிறது. ஆனால் அதன் அர்த்தம் என்ன? “எம்முள் வேற்றுமைகள் வேண்டாம்” எனும்போதே சிறுபான்மையினர் பெரும்பான்மையினருள் அடக்கப்பட்டு விடுகின்றனர்; அகப்பட்டுக் கொள்கின்றனர். “ஒரு தாய் மக்கள்”எனும்போது எமது தாய் சிங்கள பௌத்தத்தாய் என்றாகி விடுகின்றாள். இதனை “எம்முடன் நீங்கள் சேராவிட்டால் உங்களை நாங்கள் எம்முடன் சேர்த்துக் கொள்ள மாட்டோம். அடித்துத் துன்புறுத்துவோம்” என்றும் பொருள் கோடலாம்.
ஆங்கிலேயர் எம்மை ஆண்ட காலத்திலும் இவ்வாறு நாம் கூறினோம். அதன் அர்த்தம் வேறு. ஆங்கிலம் அரச மொழியாக இருந்த போது யாவரும் சரி சமமாகவே வாழ்ந்தார்கள். இனங்களின் வேற்றுமைகள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அதாவது பெரும்பான்மையினர், சிறுபான்மையினர் என்ற பேதம் இருந்த போதும் ஆங்கிலம் தாயாகவும் ஆங்கிலேயர்கள் தந்தையாகவும் எம்மை வளர்த்து வந்தனர். பெரும்பான்மையினரும் சிறுபான்மையினரும் தகைமை அடிப்படையிலேயே அரச சேவைக்குள் ஏற்றுக்கொள்ளப்பட்டார்கள். பெரும்பான்மை என்றதால் கூடிய சலுகைகள் ஏதும் கிடைக்கவில்லை. சிங்களவர், தமிழர்கள் யாவரும் சமமாகவே நடாத்தப்பட்டார்கள். அந்த நிலையில் “நாம் எல்லோரும் இலங்கையர்களே” என்ற கூற்றில் அர்த்தம் இருந்தது. “ஒரு தாய் மக்கள்” என்ற போது சகோதரத்துவம் உணரப்பட்டது. அன்று நாங்கள் இலங்கையர் தான். அப்போது ஒரு தாய் மக்கள் என்று நாங்கள் உண்மையாக உணர்ந்திருந்தோம்.
எப்போது சிங்களம் முழு நாட்டின் மொழியாகி தமிழ் மக்கள் ஒரு படி அல்லது பல படிகள் குறைக்கப்பட்டார்களோ எமது தாயானவள் செவிலித்தாயாக மாறிவிட்டாள். அவளுக்கு சிங்கள பௌத்த மக்களே உண்மையான மக்கள். மற்றவர்கள் வேண்டாத மக்களாகி விட்டார்கள். இதே போலத்தான் பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்ற கருத்தும் உள்ளது. நாம் வடமாகாணத்திற்கு வேண்டிய பணத்தைத் தருகின்றோம். பொருளாதார விருத்தியை வழங்குகின்றோம்.அதனால் நல்லிணக்கம் பிறக்கட்டும். ஆனால் உங்களுக்கென தனியுரித்துக்கள் எவற்றையுங் கேட்காதீர்கள் என்பதே அதன் அர்த்தம். நாம் பணம் கொடுத்து உங்களை வாங்குவோம். நாங்கள் எதிர்பார்ப்பது போல நீங்கள் எங்களுடன் சுமூகமாக வாழ வேண்டும். அதுதான் நல்லிணக்கம். உங்களைப் பொருளாதார மட்டத்தில் நாம் ஏற்றிவிடுவோம். நீங்கள் நாம் சொல்வதைக் கேட்டுக்கொண்டு பேசாமல் இருக்க வேண்டும் என்பதே இவ்வாறு கூறுவதின் அர்த்தம். வறுமையில் வாடும் எம் மக்களுக்கு இவ்வாறான பொருளாதார ஏற்றமே முக்கியமானது. ஆகவே தமது தேவையின் நிமித்தம் இவ்வாறான பசப்பு வார்த்தைகளுக்கு அவர்கள் விழக் கூடும். ஆனால் இங்கு முன்னோக்கிய சிந்தனை அவசியம்.
இவ்வாறான கருத்து ஏற்பு ஜே.ஆர்.ஜயவர்த்தன காலத்திலும் நடைபெற்றது. கொழும்பில் தமிழ் மக்கள் அதனை உண்மை என ஏற்று நடந்து கொண்டார்கள். அதாவது திறந்த பொருளாதாரம் வந்ததும் நாம் எல்லோரும் சமமே. எமக்குப் பொருளாதார ரீதியாக சம உரித்துக்கள் தரப்பட்டுள்ளன. சம வாய்ப்புத் தரப்பட்டுள்ளன. நாம் ஒருதாய் மக்களே என்று பொருளாதார விருத்தியில் ஈடுபட்டார்கள் எம்மவர். ஆனால் நடந்தது என்ன? திறந்த பொருளாதாரம் தமிழ் வணிகர்களை, தமிழ்க் கடை முதலாளிகளை வருமான உச்சத்துக்கு ஏற்றியது.
உடனே நாம் ஒரு தாய் மக்கள் என்ற எண்ணத்தை மறந்து தமிழ் மக்கள் மீது “1983” கட்டவிழ்க்கப்பட்டது. கடைகள், வீடுகள் எரிக்கப்பட்டன. ஏற்கனவே யாழ் நூலகம் 1981ல் எரிக்கப்பட்டிருந்தது. “நாம் யாவரும் இலங்கையர்”“ஒரு தாய் மக்கள்” என்ற கூற்றுக்களுக்கு என்ன நடந்தது? எமது கட்டுப்பாட்டுக்குள் நீங்கள் இருக்கும் வரையில்த்தான் உங்களுக்கு ஒரு தாய்மக்கள் அந்தஸ்து. எங்கே எங்களை மிஞ்சி பொருளாதார விருத்தியில் ஈடுபடுகின்றீர்களோ உடனே உங்களைக் கீழிறக்கி விடுவோம். அதாவது ஒருதாய் மக்கள்தான் ஆனால் நீங்கள் எங்கள் தாயின் அன்பைப் பெற முயற்சிக்கக் கூடாது. உங்களுக்கு சம அந்தஸ்து கொடுக்க முடியாது. அடித்து நொறுக்கி விடுவோம் என்பதே அடிப்படைச் சித்தாந்தம். கண்டியில் முஸ்லீம் சகோதரர்களுக்கு நடந்ததும் இதுவேயாகும். அவர்கள் எல்லா விதத்திலும் முன்னேறுவதைக் கண்ட பெரும்பான்மையினருக்கு அது சகிக்கவில்லை. அடித்து, எரித்து, நொறுக்கி விட்டார்கள்.
இப்பொழுது உங்கள் கேள்விக்கு வருவோம். பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்று அரசாங்கம் கூறும் போது அதன் அர்த்தம் என்ன? தமிழ்ப் பேசும் மக்களான உங்களைக் காதலிக்க விரும்புகின்றது அரசாங்கம் என்று அர்த்தம்! அதற்கு விட்டுக் கொடுத்தால் பல பரிசுகளைத் தருவார்கள்; கேட்பதை எல்லாம் வாங்கித் தருவார்கள். ஆனால் உங்களிடம் இருப்பதையும் பறித்துக் கொள்வார்கள். கடைசியில் திருமணம் முடிக்க முடியாது என்று கைவிரித்து விடுவார்கள். எதைக் கூறுகின்றேன் என்றால் பொருளாதார விருத்தி கண்டு நாம் ஏமாந்தால் வடக்கைத் தமக்கு அடிபணியச் செய்து எமது வளங்களைச் சூறையாடி சிங்களக் குடியேற்றங்களை நடைமுறைப்படுத்தி கடைசியில் அரசியல் உரிமைகள் எவற்றையும் தராமல் விட்டுவிடுவார்கள். தரமுடியாது என்று கூறிவிடுவார்கள்.
அரசாங்கம் அதைச் செய்யக் கூப்பிடுகின்றார்கள், இதைச் செய்யக் கூப்பிடுகிறார்கள். ஏன் அதை ஏற்காது காலம் கடத்துகின்றீர்கள்? உங்களுக்கு எமது வட கிழக்கு பொருளாதாரத்தில் முன்னேறுவது பிடிக்கவில்லையா? தொடர்ந்து வந்த பெரும்பான்மை அரசாங்கங்கள் நேசக்கரம் நீட்டுக்கின்றன. ஏன் அதைப்பற்றிப் பிடிக்க பின் நிற்கின்றீர்கள்? என்றெல்லாம் எம்மவர் எங்களிடம் கேட்கின்றார்கள்.
நாம் அரசாங்கங்களுடன் சேர்ந்து பயணிக்க எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள் அல்ல. ஆனால் எம்மைக் கண்ணை மூடிக் காட்டுக்குள் அவர்கள் கொண்டுபோக நாம் இடம் கொடுக்க மாட்டோம். அதனால்த்தான் மத்தியின் எந்தச் செயற்பாடாக இருந்தாலும் மாகாணமும் அதில் பங்குதாரர் ஆக்கப்பட வேண்டும் என்று கூறி வருகின்றோம். ஆகியும் வருகின்றோம்.
பொருளாதார விருத்தியைத் தந்து எமது உரிமைகளை, உரித்துக்களைத் தராது விடுவது எம்மைப் பணத்திற்கு வாங்குவது போலாகும். வாங்கிய பின் எம்மால் வாய் திறக்க முடியாது. நாம் விலைக்கு வாங்கப்பட்டவர்கள் ஆகிவிடுவோம். இன்று எமது மக்கள் பிரதிநிதிகள் பலர் அந்த நிலையில்த்தான் இருக்கின்றார்கள்.
தென்னாபிரிக்காவில் நல்லிணக்க நடவடிக்கைகள் அரசியல் சிக்கல்கள் தீர்த்ததன் பின்னரே அந்த நாட்டு அரசாங்கத்தால் முடுக்கி விடப்பட்டிருந்தன. அதே போல் எமது உரித்துக்கள் தரப்பட்ட பின், எமது உரிமைகள் ஏற்கப்பட்ட பின், நாமும் மத்தியும் சம நிலையில் இருந்து எதையும் செய்யலாம்;. பொருளாதார விருத்தியால்இன்றைய காலகட்டத்தில் நல்லிணக்கம் கொண்டுவருவது என்பது கிணற்றுக்குள் விழுந்திருக்கும் ஒருவனுக்குவெளியில் இருப்பவன் சம உரிமை பற்றிப் பேசுவது போலாகும். அதில் அர்த்தம் இல்லை. முதலில் கிணற்றுள் விழுந்திருப்பவன் மேல் எடுக்கப்பட்டு சம தரையில் நிற்கும் போதுதான் அவனுடன் சம உரிமை பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் பேச வேண்டும்.
150000 இராணுவத்தினரை வடமாகாணத்தில் தரித்து வைத்துக்கொண்டு, சகல நிர்வாக, பொருளாதார, அரசியல் உரித்துக்களைத் தாமே தம் கையில் வைத்துக் கொண்டு, பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்று பேசுவது எம்மைத் தொடர்ந்து தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்க எடுக்கும் நடவடிக்கையேயாகும். அந்தப் பொறியினுள் அகப்பட்டுக் கொண்டோமானால் இன்னும் பத்து வருடங்களில் வடகிழக்கு மாகாணங்களில் சிங்கள ஆதிக்கம் மேலோங்கிவிடும். எம்முள் பலர் வெளிநாடுகள் சென்று விடுவார்கள். எமது தனித்துவம் தொலைந்து விடும். நேற்றுக்கூட முல்லைத்தீவில் இன்று நடைபெற்றுவருபவை எமக்குச் சுட்டிக்காட்டப்பட்டது. சுமார் 6000 ஏக்கர் காணிகளைக் கையேற்கப் பார்க்கின்றது அரசாங்கம். இதற்கு எமது ஆளுநர் உடந்தையாகவுள்ளார்.
ஆகவேதான் அரசியல் தீர்வுக்கு நாங்கள் முதலிடம் கொடுத்துள்ளோம். சில தினங்களுக்கு முன்னர் மத்திய அரசாங்கத்தின் அலுவலர் ஒருவர் என்னைக் காண வந்திருந்தார். பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த அவருக்கு வட மாகாணத்தின் சகல வளங்கள் பற்றியும் தெரிந்திருந்தது. இந்த இந்தசெயற்பாடுகளில் ஈடுபட்டீர்களானால் உங்கள் பொருட்களை ஏற்றுமதி செய்ய உதவியாய் இருக்கும். நாட்டுக்கு நல்ல ஆதாயம் கிடைக்கும். அவ்வாறு செய்வதற்கு நாம் இனாமாக 50 சதவீதச் செலவைத் தருகின்றோம் என்று கூறிச்சென்றுள்ளார். முழு நாட்டையும் முன்வைத்து வடமாகாணத்தால் நாட்டுக்கு என்ன நன்மை கிடைக்கும் என்று அவர் எண்ணுவதை நான் பிழையென்று கூறவில்லை.
நாம் ஏற்றுமதி செய்தால் மத்திக்கு அன்னிய செலாவணி கிடைக்கும்; நம்மவர்கள் பொருளாதார வளம் பெறுவார்கள். அதையும் மறக்கவில்லை. ஆனால் காலக்கிரமத்தில் நடக்கப்போவதென்ன? மத்தியை நம்பியே எமது வாழ்க்கைமுறை நடைமுறைப்படுத்தப்படும்.மரத்தைச் சுற்றிய கொடியாகி விடுவோம் நாங்கள். எவ்வாறு 1977ம் ஆண்டில் ஜே.ஆர் கொண்டுவந்த திறந்த பொருளாதாரம் தமிழ் மக்களுக்கு பயன் அளித்து அவர்கள் பொருளாதார உச்ச நிலையில் 1983ம் ஆண்டு முதற் பகுதியில் திகழ்ந்தார்களோ அதே போன்று வட மாகாணமும் பொருளாதார விருத்தி பெற இவை யாவும் இடமளிக்கும். ஆனால் உரிமைகள் அற்ற நாம் வடமாகாணத்தில் 1983 ஜூலை மாதத்தை மீண்டும் ஒரு முறை அனுபவிக்க மாட்டோம் என்பதில் என்ன நிச்சயம்? படையினர் தொடர்ந்து இருப்பர். தெற்கத்தைய முதலீடுகள் எக்கச்சக்கமாய் அப்போது இங்கு வந்திருக்கும். எமக்கென அரசியல் அதிகாரங்கள் இருந்தால் எம்மால் 1983ம் ஆண்டின் கறுப்பு ஜூலை மீண்டும் எம்மீது கட்டவிழ்க்கப்படுவதைத் தடுக்கலாம். சிங்களவருடன் மிக அன்னியோன்னியமாய் ஒட்டி வாழ்ந்து வந்துள்ள கண்டிய முஸ்லீம்களுக்கு இந்தக் கதியென்றால் எமது நிலை என்னவாக இருக்கும்?
ஆகவே இராணுவத்தை இங்கு வைத்துக்கொண்டு அதிகாரங்களைத் தம்வசம் வைத்துக்கொண்டு பொருளாதார விருத்தி பற்றியும் நல்லிணக்கம் பற்றியும் அரசாங்கம் பிரஸ்தாபிக்கும் போது முன்னறிவு உள்ள தமிழர்கள் யாவரும் அதன் அர்த்தத்தைச் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் சத்திரசிகிச்சை வெற்றி, ஆனால் நோயாளி இறந்துவிட்டார்” என்று ஆகிவிடும்.
இன்னொன்றும் கூற வேண்டும். பொருளாதார விருத்தியும் நல்லிணக்கமும் என்று கூறித்திரியும் எமது அரசியல் வாதிகள் பலர் சுயநலத்துக்காகவே அதனை விரும்புகின்றார்கள். தமிழர்களுக்கு உரிமைகள் கிடைக்குதோ இல்லையோ அவர்களுக்குப் பை நிறையப் பணம் கிடைக்கும். அரசாங்கம் கை நிறையக் கொடுக்கக் காத்து நிற்கின்றது. பைகளை நிரப்பிக்கொண்டு எம்மவர்கள் போய்விடுவார்கள். அதற்குத் தெட்சணையாய் பௌத்த மதத் தலங்களை அமைக்கவிடுவார்கள். தென்னவர் இங்கு காலூண்ட இடமளிப்பார்கள். தெற்கத்தையவர்களை வட மாகாணத்தில் பதவிகளில் ஏற இடமளிப்பார்கள். மொத்தத்தில் தமிழ் மக்களின் தனித்துவத்தைத் தமது பையை நிரப்பி தென்னவர்களுக்கு விற்று விடுவார்கள்.
எனவேதான் அரசியல் தீர்வு முதலில் வரவேண்டும் என்று ஆசைப்படுகின்றோம். அதற்காக நாம் மத்தியைப் புறக்கணிக்கவில்லை. செய்வதைச் செய்யுங்கள் ஆனால் எங்களையும் பங்குதாரர்கள் ஆக்கிச் செய்யுங்கள் என்றே கூறி வருகின்றோம். அப்போது அவர்களின் செயல்களை நாம் உன்னிப்பாகக் கவனித்து உரிய நடவடிக்கைகள் வேண்டும்போது எடுக்கலாம்.
-4tamilmedia.com