யுத்த காலத்தில் மாத்திரமின்றி, அதற்கு முன்னரும் பின்னரும் காணாமற்போனவர்கள் தொடர்பிலும் கண்டறிய முடியும்: சாலிய பீரீஸ்

புதிதாக அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோர் தொடர்பான அலுவலகத்தின் ஊடாக எத்தகைய காலத்திலும் இடம்பெற்ற நபர்கள் காணாமற்போனமை தொடர்பான விடயங்களை கண்டறிய முடியும் என்று அலுவலகத்தின் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி சாலிய பீரீஸ் தெரிவித்துள்ளார்.

வடக்கு- கிழக்கு மாத்திரமன்றி நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் இடம்பெற்ற காணாமற்போனோர் தொடர்பாக இந்த அலுவலகத்தின் ஊடாக விடயங்களை கண்டறிய முடியும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சாலிய பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளதாவது, “மோதல் நிலவிய காலத்தில் மாத்திரமன்றி அதற்கு முன்னரும் பின்பும் இடம்பெற்ற காணமற்போனமை மற்றும் எத்தகைய காணாமற்போன சம்பவங்களிற்கும் இந்த அலுவலகம் நடவடிக்கை மேற்கொள்ளும்.

இந்த அலுவலகத்தின் ஊடாக தண்டனை விதிக்கப்படமாட்டாது. கண்டறியப்படும் தகவல்கள் சிவில் வழக்கு அல்லது குற்றச்செயல் தொடர்பான வழக்கிற்கு சாட்சியமாக பயன்படுத்த முடியாது.” என்றுள்ளார்.

அத்தோடு, சர்வதேசத்தின் தேவைக்கு அமைவாக இந்த அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டை அவர் நிராகரித்துள்ளார்.

காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் உள்ளடங்கலாக 7 உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டனர். இவர்களின் பதவிக்காலம் 3 வருடங்களாகும். காணாமற்போனோர் அலுவலகத்தை அமைப்பதற்கான சட்டமூலம் 2016 ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. 2018ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் இதற்காக 130 கோடி ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

-puthinamnews.com

TAGS: