“தண்டனை விதிக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை மன்னிப்பில் விடுவிப்பதில் ஆட்சேபனை எதுவும் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.”
– இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்தக் கட்சியின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
கிளிநொச்சியைச் சேர்ந்த அரசியல் கைதியான சச்சிதானந்தம் ஆனந்தசுதாகரின் விடுதலை தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் கடந்த திங்கட்கிழமை மாலை அலைபேசியில் பேசினேன். ஆனந்தசுதாகரின் விடயத்தைப் பேச எடுத்ததுமே இது தொடர்பில் தனக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பிலும் பொதுவாகப் பேசினார்.
தண்டனை பெற்ற அரசியல் கைதிகளை மன்னிப்பில் விடுவிப்பதற்கு ஆட்சேபனை இல்லை என்றும் ஜனாதிபதி மைத்திரி தெரிவித்தார். அவ்வாறு விடுவிக்கக்கூடிய கைதிகள் ஒவ்வொருவர் தொடர்பிலும் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கேட்டுள்ளேன். இன்னும் அந்த அறிக்கை கிடைக்கவில்லை எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தண்டனை பெற்றுள்ள அரசியல் கைதிகள் ஒவ்வொருவர் தொடர்பிலும், தீர்ப்பு வழங்கிய மேல் நீதிமன்ற நீதிபதியின் அறிக்கை, சட்டமா அதிபரின் அறிக்கை, நீதி அமைச்சரின் அறிக்கை என்பவற்றையே ஜனாதிபதி கோரியிருக்கின்றார். முன்னாள் நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அதைத் தாமதப்படுத்தி வந்தார். புதிய நீதி அமைச்சருக்கு இந்த விடயத்தை கூறி அதனைத் துரிதப்படுத்துமாறு கேட்டுள்ளோம்” – என்றார்.
2015ஆம் ஆண்டு தடுப்பில் உள்ளவர்களின் பெயர் விவரங்களை வெளியிடவேண்டும் என்று ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கப்பட்டபோதும், இது தொடர்பில் நீதி அமைச்சின் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி மைத்திரி தெரிவித்திருந்தார். இதுவரையில் அந்த விவரங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-tamilcnn.lk