தமிழ் அரசியல் கைதிகள் பலர் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளதாக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
பிரதமரின் அழைப்பின் பேரில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எப்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரனும், அதன் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தனும் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை இன்று திங்கட்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இதன்போதே பிரதமர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளதாக சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாகப் பேசியபோது, அவர்களின் விடுதலை தொடர்பில் ஏற்கனவே சிறைச்சாலைகள் அமைச்சரால் ஒரு அறிக்கை தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அது உடனடியாக பிரதமரிடம் கையளிக்கப்படும் என்றும் அதன் பிரகாரம் தற்பொழுது சிறையில் உள்ள பலருக்கு விடுதலை வழங்கப்படும் என்றும் ஏனையோர் ஒருகுறுகிய புனர்வாழ்விற்குப் பின்னர் விடுவிக்கப்படுவர் என்றும் எமக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டிருக்கின்றது.
403 நாட்களுக்கும் மேலாக வடக்கு–கிழக்கு மாகாணங்களில் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் போராட்டங்களை நடத்தி வருவதையும் இவற்றை அரசாங்கம் கண்டுகொள்ளாமல் இருப்பது மனவருத்தத்தைத் தரக்கூடிய செயல் என்பதுடன், இதுவொரு அரசாங்கத்தின் பொறுப்பின்மையை வெளிப்படுத்துகின்றது என்பதையும் சுட்டிக்காட்டியுள்ளோம். இவற்றுக்கு இனிமேலும் காலம் தாழ்த்தாமல் உடனடியாக தீர்வு காணப்பட வேண்டும் என்பதையும் வலியுறுத்தியுள்ளோம்.
காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகம் திறக்கப்பட்டு ஒரு ஆண்டு ஆகியும் அதற்கான உத்தியோகத்தர்களை நியமித்து ஒருமாதம் ஆகியும் பணிகள் எதுவும் ஆரம்பிக்கப்படவில்லை என்பதுடன் மக்கள் அந்த அலுவலகத்தின் மீது நம்பிக்கை இழந்திருக்கின்றார்கள். எனவே இந்த விடயம் தொடர்பாக திட்டவட்டமான துரித நடவடிக்கை தேவை என்பதை குறிப்பிட்டிருக்கின்றோம்.
வடக்கு-கிழக்கு மாகாணங்களில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரிலும் தொல்பொருள் ஆராய்ச்சி என்ற பெயரிலும் வன வள பாதுகாப்பு என்ற பெயரிலும் பறவைகள் சரணாலயம் என்ற பெயரிலும் தமிழ் மக்கள் பயிர்ச்செய்கை செய்துவரும் காணிகளும் அவர்களது வீட்டுக் காணிகளும் சுவீகரிப்பு என்ற பெயரில் பறிமுதல் செய்யப்படுகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் மகாவலி அபிவிருத்தி என்ற பெயரில் 2500 ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகளை சுவிகரிப்பதுக்கு வடக்கு மாகாண ஆளுநரினால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதை உடனடியாக நிறுத்தவேண்டும் என்பதுடன் இனப்பிரச்சினைக்கான நிரந்தர அரசியல் தீர்வு ஒன்று எட்டப்படும்வரை காணி சுவீகரிப்பு போன்ற சகல நடவடிக்கைகளும் மாகாண சபையின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டுமென்பதை வலியுறுத்தியுள்ளோம். அது தொடர்பான ஒரு அமைச்சரவை பத்திரத்தைத் தாக்கல் செய்யும்படி புனர்வாழ்வு அமைச்சர் சுவாமிநாதன் பணிக்கப்பட்டிருக்கின்றார்.
இவை தவிர, பட்டதாரிகளின் வேலைவாய்ப்புக்கள் தொடர்பாகவும் வடக்கு மாகாணத்தில் பல்வேறு திணைக்களுக்கு சிற்றூழியர்களாக சிங்களவர்களை நியமிப்பது நிறுத்தப்பட வேண்டுமென்றும் ஏற்கனவே அவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டு அந்த இடங்களுக்கு தமிழ் இளைஞர் யுவதிகள் நியமிக்கப்பட வேண்டும் என்று கோரியுள்ளோம். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. மேற்கண்ட விடயங்கள் தொடர்பாகவும் வடக்கு அபிவிருத்தி தொடர்பாகவும் தொடர்ந்து கந்துரையாடுவது எனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது”என்றுள்ளார்.
-4tamilmedia.com