இலங்கை: பிரதமர் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வி

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுக்கு எதிராக எதிர்க்கட்சி கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணை 46 வாக்கு வித்தியாசத்தில் தோற்கடிக்கப்பட்டது.

பிரேரணைக்கு ஆதரவாக 76 வாக்குகள் மாத்திரம் கிடைத்தன. எதிராக 122 வாக்குகள் கிடைத்தன. 26 உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளவில்லை. புதன்கிழமை காலையில் ஆரம்பமான நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த விவாதம் வாக்கெடுப்புடன் இரவு முடிவுக்கு வந்தது.

தமிழ் தேசிய கூட்டமைப்பு உட்பட சிறுபான்மைக்கட்சிகள் பிரேரணைக்கு எதிராக வாக்களிக்களித்தன.

மஹிந்த ராஜபக்‌ஷ கட்சியான பொதுஜன பெரமுன, மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த சிலர் மற்றும் ஏனைய சிலரும் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.

சிறுபான்மைக் கட்சிகளின் வாக்கு பலத்தினாலேயே இந்த நம்பிக்கையில்லா தீர்மான பிரேரணையில் இருந்து பிரதமர் தப்பித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

-BBC_Tamil

TAGS: