10 நிபந்தனைகளின் அடிப்படையிலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களித்ததாக அந்தக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய கட்சியான தமிழர் விடுதலை இயக்கத்தின் (டெலோ) தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்று கூட்டு எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்பட்ட பிரதமர் ரணிலுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பு வாக்களித்தது.
தற்போதைய “நல்லாட்சி” அரசாங்கம் பதவிக்கு வந்து சில வருடங்கள் ஆகிவிட்டபோதிலும், தமிழரின் இனப் பிரச்சினைக்கான தீர்வு குறித்தோ அல்லது போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான புனர்வாழ்வு குறித்தோ போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று கூறும் தமிழர் தரப்பு விமர்சகர்கள், ஆகவே தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க எழுத்து மூல உறுதி மொழிகளை பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.
அதனால், 10 நிபந்தனைகளை விதித்தே இந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை எதிர்த்து, பிரதமருக்கு ஆதரவாக வாக்களித்ததாக நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.
நம்பிக்கையில்லா தீர்மான வாக்கெடுப்பின்போது அதனை எதிர்த்து வாக்களிப்பதற்காக தமிழ் தேசியக் கூட்டமைப்பால் முன்வைக்கப்பட்ட 10 நிபந்தனைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டுள்ளதாக கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் டெலோ அமைப்பு கூறியுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு ஆதரவு வழங்குவதற்குப் பதிலாகவே இந்த 10 விடயங்களையும் ரணில் ஏற்றுக்கொண்டதாகவும், அந்தக் கட்சி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிப்பது என்பதற்கு அப்பால், மீண்டும் ராஜபக்ஷவின் ஆட்சி வந்துவிடக்கூடாது என்ற நினைப்பும், தாம் இவ்வாறு வாக்களித்ததற்கு ஒரு முக்கிய காரணம் என்று செல்வம் அடைக்கலநாதன் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.
நேற்றைய நம்பிக்கையில்லாத் தீர்மான பிரேரணைக்கான விவாதத்தில் கலந்து கொண்ட சில எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் பெருந்தொகைப் பணத்தை லஞ்சம் வாங்கிவிட்டனர், தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு அரசியலமைப்பு மாற்றம் குறித்து உத்தரவாதம் வழங்கப்பட்டுள்ளது என்று விமர்சித்து பேசினார்கள்.
அதற்கு பதிலளிக்காமல், சபையில் பேசிய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தர், பிரதமருக்கு மக்கள் 5 வருடங்களுக்கு ஆணை கொடுத்திருக்கும் நிலையில் அவரை பதவியிறக்க முடியாது என்று பேசியிருந்தார்.
சித்தார்த்தனின் கூற்று
இந்த விசயம் குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினருடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் பேச்சுவார்த்தை நடத்தியபோது, அதில் புளொட் அமைப்பின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தனும் கலந்து கொண்டிருந்தார்.
அனைத்து நிபந்தனைகளையும் ரணில் விக்கிரமசிங்க ஏற்றுக்கொண்டு, அதற்கான ஆவணத்தில் கையெழுத்திட்டதாக சித்தார்த்தன் கூறினார்.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு கொடுத்த ஆதரவு ஒரு நிபந்தனையின் பேரிலான ஆதரவு என்று கூறிய சித்தார்த்தன், தமிழ் மக்கள் இன்று முகம் கொடுக்கும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மிக மிக தாமதமாக இருப்பதாக குறிப்பிடுகிறார்.
ஆகவே அதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும் என்றும், அரசியலமைப்பு மூலமான இனப்பிரச்சனை தீர்வுகளுக்கான நடவடிக்கைகளை விரைவுபடுத்த வேண்டும் என்றும் தமது கூட்டமைப்பினர் பிரதமரை வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.
பிரதமரால் ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறப்படும் நிபந்தனைகள் குறித்து டெலோ அமைப்பு 10 அம்சங்களை ஓர் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அது பின்வருமாறு.
- வடக்கு – கிழக்கு பிரச்சினைக்கு உடனடியாக அரசியல் தீர்வு காணுதல்.
- அடுத்த பொதுத்தேர்தலுக்கு முன்னதாக புதிய அரசியலமைப்பை மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை வாக்குகளுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுதல்.
- பொதுமக்களின் காணிகள் அனைத்திலும் இருந்து இராணுவத்தை வெளியேற்றுவதை உறுதி செய்தல்.
- அரசியல் கைதிகள் அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கல்.
- போர்க்காலத்தில் காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்தல்.
- வடக்கு, கிழக்கு மாகாண மக்களின் உரிமைகளை பாதுகாத்தல்.
- வடக்கு, கிழக்கில் வாழும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை உறுதி செய்தல்.
- வடக்கு, கிழக்கில் தகுதியுள்ள ஆட்கள் இருக்கும் பட்சத்தில் வெளிமாகாணங்களை சேர்ந்தவர்களை அங்கு பணிக்கு அமர்த்துவதை தவிர்த்தல்.
- வடக்கு, கிழக்கின் 8 மாவட்டங்களுக்கு தமிழ் பிரதேச செயலாளர்களை நியமித்தல்.
- வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளின்போது, அந்த மாகாண பிரதிநிதிகளின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன், வடக்கு, கிழக்கு மாகாண சபைகளின் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்தல்.
இந்த அம்சங்களை நிறைவேற்றாதபட்சத்தில் எதிர்காலத்தில் அரசுக்கான தமது ஆதரவு சிரமமானதாக இருக்கும் என்று தாம் வலியுறுத்தியதாக செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
இலங்கையை பொறுத்தவரை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் நம்பிக்கையில்லா பிரேரணையில் இருந்து தப்பியதற்கு சிறுபான்மைக் கட்சிகளின் ஆதரவே முக்கிய காரணமாக பார்க்கப்படுகின்றது.
இதற்கிடையே, ஜனாதிபதியின் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரணில் விக்கிரமசிங்க அரசாங்கத்தில் அங்கம் வகித்துக்கொண்டே அவருக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.
அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றை கொண்டுவரப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் இப்போது கூறிவருகிறார்கள். -BBC_Tamil