சிறிலங்காவுக்கு கண்காணிப்புப் பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றக் குழு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளது.
இந்தச் சந்திப்பு இன்று காலை, நாடாளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவரின் செயலகத்தில் இடம்பெற்றது.
சிறிலங்காவின் தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக இதன்போது, விரிவாக கலந்துரையாடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐரோப்பிய ஒன்றியத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சஜாட் கரீம், ஜான் சஹ்ராடில், போல் ரூபிக், டேவிட் மார்ட்டின், ரிசியானா பெகின், பிரான்ஸ் ஒபெர்மைர் ஆகியோர் இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டனர்.
27 நிபந்தனைகளின் அடிப்படையில், சிறிலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை வழங்கியிருந்தது.
இந்த நிபந்தனைகளை சிறிலங்கா நிறைவேற்றியுள்ளதா என்று கண்காணிப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றிய குழு நேற்று கொழும்பு வந்தது. நாளை வரை இந்தக் குழுவினர் சிறிலங்காவில் தங்கியிருப்பர்.
-puthinappalakai.net