வடக்கு மாகாண சபை எல்லைக் கிராமங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ளாது மிகப் பெரிய தவறை விட்டுள்ளது. அதனாலேயே அங்கு ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறுகின்றன. இவ்வாறு வடக்கு மாகாண விவசாய அமைச்சர் சிவநேசன் சுட்டிக்காட்டினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்கான வடக்கு மாகாண சபையின் சிறப்பு அமர்வு நேற்று நடைபெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.அவர் தெரிவித்தாவது-:
வடக்கு மாகாணத்தில் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்க ளைத் தடுக்க மாகாண சபை நடவடிக்கை எடுக்காது தவறு விட்டுள்ளது. மாகாண சபை விட்ட பிழையால் எமது பாரம் பரிய, நிலங்கள் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதைத் தடுக்க மாகாண சபை என்ன செய்தது?.
எமது பிரதேசங்களில் இடம்பெற்று வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களை தடுக்க முயற்சிகளை எடுத்தோம் என யாராவது ஒருவராவது மனதில் கைவைத்துச் சொல்லுங்கள்.எந்த நடவடிக்கையையும் செயலில் காட்டாது பேசிக்கொண்டு இருப்பதில் எவ்வித பயனும் இல்லை.
நாம் இங்கு மேற்கொள்கின்ற அபிவிருத்தி திட்டங்களை நகரப் பகுதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலுமே மேற்கொண்டு வருகின்றோம். எல்லைக் கிராமங்களை நாம் கைவிட்டு விட்டோம். அதை அறிந்தவர்கள் அங்கு திட்டமிட்ட குடியேற்றங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் செய்து வருகின்றனர்.
எமது அபிவிருத்தி திட்டங்களை எல்லைப் புறங்களை நோக்கி நகர்த்த வேண்டும். அதன் ஊடாக ஒரு சிறிதளவு இடங்களையாவது எம்மால் காப்பாற்ற முடியும் என நினைக்கின்றேன் – – என்றார்.
-tamilcnn.lk