முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை மீண்டும் நிறுத்தப்போவதில்லை: எம்.ஏ.சுமந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அடுத்த வடக்கு மாகாண சபைத் தேர்தலில் சி.வி.விக்னேஸ்வரனை முதலமைச்சர் வேட்பாளராக நிறுத்தப்போவதில்லை என்று அந்தக் கட்சியின் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

வரும் செப்டம்பர் மாதத்துடன் வடக்கு மாகாண சபையின் பதவிக்காலம் பூர்த்தியாகின்றது. இந்த நிலையிலேயே, அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

சுமந்திரன் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2013ஆம் ஆண்டு முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரனை அழைத்த போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுக்கு முதலமைச்சர் ஒரு நிபந்தனையை விதித்திருந்தார்.

2 வருடங்கள் மட்டுமே தான் முதலமைச்சராக இருப்பேன் எனவும் அதன் பின்னர் மாவை சேனாதிராஜாவே முதலமைச்சராக இருக்கவேண்டும் எனவும் அந்த நிபந்தனையைக் கூறியிருந்தார். மாவை சேனாதிராஜா முதலமைச்சராக இருக்கவேண்டும் என்று கூறிய ஒருவரை 5 வருடங்கள் முதலமைச்சராக இருக்க வைத்திருக்கிறோம். இனியும் அவரைக் கஸ்டப்படுத்த கூடாது. இது குறித்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் பேசிய போது 2 வருடங்கள் என கூறுவது பொருத்தமற்றது என கூறியிருந்தார்.

ஆகவேதான் அடுத்த மாகாணசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளராக சி.வி.விக்னேஸ்வரன் நிறுத்தப்படமாட்டார் என நான் கூறியது உண்மையே.” என்றுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: