“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வைக் காண்பதற்கே இந்த அரசாங்கத்தை உருவாக்கினோம். ஆகையால், அதனைச் செய்து முடிப்பதற்காக சரி, இந்த அரசாங்கம் இன்னும் சில நாட்களுக்கு உயிர்வாழவேண்டும்” என்று தெரிவித்த அமைச்சர் மனோ கணேசன், “தானாகக் கனியும் பழத்தை தடியால் அடித்து கனிய வைக்க வேண்டுமா” என்றும் கேள்வியெழுப்பினார்.
“அவ்வாறு கனிய வைக்கவேண்டியதில்லை. அவ்வாறு செய்தால் பிரச்சினைகள் தான் அதிகரிக்கின்றது. அதனூடாக அரசாங்கத்துக்குள் பிளவைஏற்படுத்துகின்றோம்” என்றும் அவர் தெரிவித்தார். “நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த அமைச்சர்கள், இந்த அரசாங்கத்தில் தொடர்ந்தும் அங்கம் வகிப்பது தார்மீக ரீதியாக சரியானதாக இருக்க முடியாது. எனினும், அவர்களை விரட்டியடிக்கவும், திட்டித்தீர்க்கவும் முடியாது. அவர்களுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வரவும் முடியாது. அவர்களே சுயமாகவே விலகிச்செல்லும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும்“ என்றார்.
மொழி தொடர்பான பிரச்சனைகளுக்கான புதிய மொழி அமைப்பை, ராஜகிரியவில் உள்ள தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகருமமொழிகள் அமைச்சில் நேற்று (9) திறந்து வைத்தார். அதன்பின்னர், அங்கு நடைபெற்ற வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
“பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ற சினிமாப் படம் முடிந்துவிட்டாலும், அது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில், அந்தப் பிரேரணைக்கு ஆதரவாக வாக்களித்த சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களை, அமைச்சரவையிலிருந்து வெளியேற்றுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை வீரர்களே வலியுறுத்துகின்றனர்” என்றார்.
“இந்த விவகாரத்தில் பின்வரிசை வீரர்களின் கோபம் புரிகிறது. எனினும், யாவரும் சேர்ந்து பயணிக்கும் படகு கற்களில் மோதி மூழ்கிவிட்டால் அனைவருக்கும் பாதிப்பு என்றும், படகை மூழ்கடிக்க வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுகின்றேன்” என்றார்
“இந்தச் சந்தர்ப்பத்தில் அனைவரும் மூளையைப் பயன்படுத்தி செயற்படவேண்டாம். அரசாங்கத்தில் ஏற்பட்டுள்ள பிரிவினைவாதத்தை பெரிதுப்படுத்த வேண்டாம்“ என்றும் அவர் இதன்போது கோரிக்கை விடுத்தார்.
-tamilmirror.lk