சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக வடக்கு மாகாணசபையினர் முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவில் இடம்பெற்று வரும்  சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் இன்று கண்டனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் என்ற பெயரில், முல்லைத்தீவு மாவட்டத்தில் வேகமாக முன்னெடுக்கப்பட்டு வரும் திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக வடக்கு மாகாணசபையின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, வடக்கு மாகாணசபை சிறப்பு அமர்வு ஒன்றையும் நடத்தி திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக விவாதம் நடத்தப்பட்டது.

இந்த அமர்வின் போது, வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும், முல்லைத்தீவுக்குச் சென்று திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆராய்வது என்றும், திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

இதன்அடிப்படையில், இன்று காலை வடக்கு மாகாணசபை அவைத்தலைவர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், முல்லைத்தீவுக்குச் சென்று சிங்களக் குடியேற்றங்கள் தொடர்பாக ஆய்வு நடத்தினர்.

கொக்கிளாயில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட விகாரைக்குச் சென்று விகாராதிபதியுடனும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் கலந்துரையாடினர்.

அத்துடன், முல்லைத்தீவு மாவட்டச் செயலகம் முன்பாக இன்று பிற்பகல் போராட்டம் ஒன்றிலும் ஈடுபட்டனர்.

தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவும் இன்று காலை முல்லைத்தீவுக்குச் சென்று, மாகாணசபை உறுப்பினர்களுடனான கலந்துரையாடல்களில் பங்குபற்றினார்.

-puthinappalakai.net

TAGS: