உடன்பாட்டை மீறிய சிறிலங்கா இராணுவம் – கருத்து வெளியிட மறுப்பு

ஐ.நா மற்றும் சிறிலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவுடன் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறியுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கருத்து வெளியிட சிறிலங்கா இராணுவம் மறுப்புத் தெரிவித்துள்ளது.

சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு மற்றும் ஐ.நாவுடன் செய்து கொண்ட உடன்பாட்டுக்கு அமைய, ஐ.நா அமைதிப்படைக்கு அனுப்பப்படும் சிறிலங்கா படையினரின் மனித உரிமை பதிவுகள் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டும்.

எனினும், சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழுவின் மனித உரிமை பதிவு ஆய்வுகள் முடிய முன்னரே, சிறிலங்கா இராணுவத்தின் 49 பேர் கொண்ட அணி கடந்த பெப்ரவரி மாதம் லெபனானுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

இதையடுத்து, லெபனானுக்கு அனுப்பப்படவிருந்த101 சிறிலங்கா படையினரின் பயணத்தை ஐ.நா அமைதிப்படை நடவடிக்கைப் பணியகம் நிறுத்தி வைத்துள்ளது.

இதுகுறித்து சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, சிறிலங்கா மனித உரிமை ஆணைக்குழு கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தது.

அதில் ஐ.நாவுடனும், தம்முடனும் செய்து கொண்ட உடன்பாட்டை சிறிலங்கா இராணுவம் மீறி விட்டதாக குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக, கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவிடம் கேள்வி எழுப்பியிருந்தது.

எனினும், அவர் இதுகுறித்து கருத்து எதையும் வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

-puthinappalakai.net

TAGS: