சிரியா மீது ராணுவ நடவடிக்கையா? டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறல்

வாஷிங்டன்,

சிரியாவில் கூட்டா பகுதியில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள கடைசி நகரமான டூமாவில் கடந்த 7-ந் தேதி ரசாயன ஆயுத தாக்குதல் நடைபெற்றது. இதில் சிக்கி குழந்தைகள் உள்பட 60 பேர் கொன்று குவிக்கப்பட்டது உலக அரங்கை உலுக்குவதாக அமைந்தது.இந்த தாக்குதலுக்கு சிரியாவின் அதிபர் பஷார் ஆல் ஆசாத்தும், அவரை ஆதரித்து வருகிற ரஷியாவும்தான் பொறுப்பு என்று அமெரிக்கா குற்றம் சாட்டுகிறது. அது மட்டுமின்றி இந்த தாக்குதலை நடத்தியதற்காக சிரியா மீது ஏவுகணை தாக்குதல் நடத்தப்படும் என டிரம்ப் அறிவித்தார்.

ஆனால் சிரியா விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முடிவு எடுக்க முடியாமல் திணறுவது அம்பலத்துக்கு வந்து உள்ளது.இது தொடர்பாக வாஷிங்டன் வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், “சிரியா விவகாரத்தில் வாய்ப்பு உள்ள அனைத்து நடவடிக்கைகளையும் குறித்து டிரம்ப் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறார். அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்பது பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை” என்று கூறினார்.

மேலும் அவர் கூறும்போது, “சிரியா பிரச்சினையில் பொதுவாக ஜனாதிபதி டிரம்ப் ஒரு முடிவு எடுத்திருக்கிறார். லத்தீன் அமெரிக்கா பயணத்தை அவர் ரத்து செய்துவிட்டார். அதன் நோக்கம், இந்த விவகாரத்தில் கவனத்தை செலுத்துவதுதான். சிரியா மீதான நடவடிக்கையில் பல்வேறு வாய்ப்புகளையும் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்” என குறிப்பிட்டார்.

-dailythanthi.com