தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்காக புதிய திட்டம்: ரணில் விக்ரமசிங்க

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியன இணைந்த தேசிய அரசாங்கத்தை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வது தொடர்பில் புதிய திட்டமொன்று முன்வைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

கடந்த புதன்கிழமை இரவு ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சி ஆகியவற்றின் அமைச்சர்கள் குழுவுக்குமிடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. பிரதமருக்கு எதிராக வாக்களித்த 16 சுதந்திரக் கட்சி உறுப்பினர்களும் அரசாங்கத்திலிருந்து விலகுவது பற்றி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்தித்து அறிவித்த பின்னர், அரசாங்கத்திலிருக்கும் இரு கட்சி அமைச்சர்களுக்கிடையில் சந்திப்பு நடைபெற்றது.

“இந்தச் சந்திப்புக்கு முன்னர் சுதந்திரக் கட்சி அமைச்சர்கள் ஜனாதிபதியைச் சந்தித்திருந்தனர். புதிய திட்டத்தை முன்னெடுப்பது குறித்து நாம் கலந்துரையாடியிருந்தோம். இரு கட்சிகளின் அமைச்சர்களாலும் தயாரிக்கப்படும் புதிய திட்டம் எமக்கு விரைவில் கிடைக்கும் என எதிர்பார்க்கின்றோம்” என பிரதமர் தெரிவித்துள்ளார்.

30 மாடிகளைக் கொண்ட நடுத்தர வீட்டுத் தொகுதி கட்டுமான பணிகளை அங்குரார்ப்பணம் செய்யும் நிகழ்வு தலபத்திட்டியவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் 400 வீடுகள் அமைக்கப்படவுள்ளன. இதில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இக்கருத்தை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, கடந்தகால குறைபாடுகளை திருத்திக் கொண்டு புதிய திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலேயே ஐக்கிய தேசியக் கட்சி அமைச்சர்களுக்கும் சுதந்திரக் கட்சி அமைச்சர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

இரு கட்சிகளும் இணைந்து ஆட்சி செய்வதாயின் ஒரு தலைமைத்துவத்தின் கீழ் ஒரு திட்டத்தை முன்னெடுக்க வேண்டும் என்பதை இந்தக் கூட்டத்தில் வலியுறுத்தியிருந்தோம். அது மாத்திரமன்றி செயற்பாடுகளில் வெளிப்படைத் தன்மை அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இரு தரப்பிலிருந்தும் நியமிக்கப்படும் உறுப்பினர்களைக் கொண்ட குழுவினால் தயாரிக்கப்படும் பொதுவான கொள்கைத் திட்டத்தை இறுதிப்படுத்துவதற்கு இணங்கியுள்ளோம். சிங்கள, தமிழ் புத்தாண்டின் பின்னர் புதிய திட்டம் ஜனாதிபதியிடமும், பிரதமரிடமும் கையளிக்கப்படும் எனவும் அமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.

-4tamilmedia.com

TAGS: