புலிகள் மீதான தடையை நீக்குமாறு கனடா நாடாளுமன்றில் கோரிக்கை!!

விடுதலைப் புலிகளுக்கு எதிராக கனடா விதித்துள்ள தடைகளை நீக்குமாறு கனடிய நாடாளுமன்ற உறுப்பினர் ஒன்ராறியோ கோரிக்கை விடுத்துள்ளார்.

கனடிய நாடாளுமன்றில் இது குறித்துத் தனி நபர் தீர்மானம் ஒன்றைக் கொண்டுவந்து, அதில் மேற்குறித்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

நாடாளுமன்றில் கேள்வி நேரத்தின்போது, தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான கனடிய மத்திய அரசின் தடையை உடனடியாக நீக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள அவர், அனைத்து கட்சிகளின் ஆதரவையும் கோரியுள்ளார்.

புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக கனடா வாழ் புலம்பெயர் தமிழர்கள் நாளாந்தம் எதிர்நோக்கும் பிரச்சினைகளை அனைத்து உறுப்பினர்கள் முன்னிலையிலும் அவர் எடுத்து கூறியுள்ளார்.

இது குறித்த பிரேரணையை நாடாளுமன்றில் சமர்பித்து உரையாற்றிய அவர், “இலங்கை 1948ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த நாள் தொடக்கம் தமிழ் மக்கள் அடக்குமுறையை அனுபவித்து வருகின்றனர். அந்த அடக்குமுறையை எதிர்கொள்ள 1976ஆம் ஆண்டு தமிழ் மக்களை பாதுகாக்கும் இராணுவ அமைப்பாக விடுதலைப் புலிகள் அமைப்பை உருவாக்கினார்கள்.1983இல் உள்நாட்டுப் போர் தொடங்கியது. விடுதலைப் புலிகள் அமைப்பு வலுவான போரிடும் படையாக மாறியது.

இந்தநிலையில், 2006ஆம் ஆண்டு கனடிய அரசு, இலங்கை அரசின் பொய்ப் பரப்புரைகள் மூலமாக ஈர்க்கப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பை பயங்கரவாத பட்டியலில் இணைத்தது. இதன் விளைவு தமிழ் மக்கள் இரண்டாம் தர மக்களாக உலகின் பார்வையில் பார்க்க வைத்தது. விடுதலைப் புலிகளின் தோற்றத்துக்குத் தமிழர்கள் காரணம் அல்ல. அதனை இன்று வரையிலும் பன்னாடுகள் புரிந்துகொள்ளவில்லை. இலங்கை அரசே அதற்கு காரணம் என்பதையும் யாரும் புரிந்துகொள்ளாது, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதிகள் என்று கூறுவது வேதனையாக உள்ளது.

உள்நாட்டுப் போர் 2009 ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. புலிகள் ஆயுதப் போரைக் கைவிட்டனர். புலிகள் மீண்டும் ஒரு போராடும் படையாக அணி திரளப் போவதில்லை. எனவே, விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதப் பட்டியலில் இனி வைத்திருக்கத் தேவையில்லை. எதற்காக விடுதலைப் புலிகளை பயங்கரவாதிகளாக சித்தரிக்க வேண்டும்? விடுதலைப் புலிகள் வேறு இனமோ அல்லது வேறு சமூகமோ கிடையாது. மாறாக அவர்கள் தமிழ் மக்களின் உடன் பிறப்புக்கள்.

இந்தநிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பை தொடர்ந்தும் பயங்கரவாத பட்டியலில் வைத்திருப்பது கனடாவில் தமிழர்கள் தலைக்கு மேல் தொங்கும் கருப்பு மேகம் போன்றது. இந்த தடை தமிழ் மக்களை இரண்டாம் தர குடிமக்களாகவே அவமதிக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அவர்கள், தாயகத்தில் போரில் உயிர் நீத்த தங்களின் உறவினர்களையும், தியாகிகளையும் பகிரங்கமாக நினைவு கூருவது மற்றும் அவர்களின் நினைவு அஞ்சலி செலுத்துவதையும் அரசு தடுக்கின்றது. கனடா வாழ் தமிழர்கள் மீண்டும் மதிப்புடன் வாழவேண்டும் . ஆகவே, பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பை கனடா அரசு நீக்க வேண்டும்” என்றார்.

இதேவேளை, நாடாளுமன்ற கேள்வி நேரத்தின் போது , ஒன்றாரியோ குடிவரவு அமைச்சரிடம் விடுதலைப் புலிகள் மீதான தடை குறித்துப் பல கேள்விகளையும் எழுப்பினார். ஒன்றாரியோ நாடாளுமன்றத்தில் தான் சமர்ப்பித்த அறிக்கையை ஒட்டாவாவில் மைய அரசுக்கு நேரடியாகச் சமர்ப்பித்து இந்தத் தடையை நீக்க வேண்டுகோள் விடுக்க தன்னுடன் இணைந்து கனடிய நாடாளுமன்றத்துக்கு வருமாறு அழைப்பும் விடுத்தார்.

-tamilcnn.lk

TAGS: