ஏறக்குறைய 5 சதவீத இலங்கையர்கள் 100 கோடி டாலர் வர்த்தக மதிப்புடைய தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டுள்ளனர்.
மலைச்சரிவுகளில் தேயிலை பறிப்பது, தோட்டத் தொழிற்சாலைகளில் பதனிட்டு தேயிலை உற்பத்தி செய்வது ஆகிய தொழில்களை இவர்கள் செய்து வருகின்றனர்.
1867ம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் தேயிலை பயிரிடுதல் மற்றும் கறுப்பு தேயிலை விற்பனை இலங்கையரின் தலைமுறைகள் பலவற்றின் வாழ்க்கைக்கு உதவியுள்ளது.
இலங்கை தேயிலை உற்பத்தி உலகை ஆய்வு செய்வதற்காக இலங்கையிலுள்ள தேயிலை தோட்டங்களில் ஆவணப்பட புகைப்படக் கலைஞர் ஸ்கோமோ தயுனே பயணம் மேற்கொண்டார்.
ஒவ்வொரு தேயிலை தோட்டமும் அதனுடைய தொழிலாளர்களுக்கு வழங்குகின்ற முகாம்கள் பாணியிலான வீடுகளுக்கு மேலே மலைச்சரிவுகளில் தேயிலை செடிகளின் புதர்கள் காணப்படுகின்றன.
இந்த தேயிலை செடிகளின் இலைகள் மிகவும் கடினமாகுவதற்கு முன்னால், ஒவ்வொரு 7 முதல் 14 நாட்களில் ஒரு முறை தேயிலையை கிள்ளி எடுக்க வேண்டும்.
இதன் காரணமாக, எந்த இடத்தில் தேயிலை கிள்ளி எடுக்கப்பட வேண்டுமோ அதனை பொறுத்து, ஒவ்வொரு நாளும், வேலை செய்கின்ற இடம் மாறுபடும்.
முன்னதாக, பயன்படுத்தப்பட்ட மூங்கிலால் முடைந்த பாரம்பரிய கூடைகளைவிட எடை குறைந்த தார்ப் பாய் கூடைகளில் பறிக்கப்படும் தேயிலைகள் சேகரிக்கப்படுகின்றன.
நாள் முழுவதும் பறித்த தேயிலைகள் எடை போடப்படுகின்றன. ஒரு தேயிலை தோட்ட தொழிலாளி ஒரு நாளைக்கு இலங்கை ரூபாயில் 600 சம்பாதிக்கிறார். இது ஏறக்குறைய 2.70 டாலராகும்.
ஆனால், ஒரு தொழிலாளி ஒரு நாளில் 18 கிலோ தேயிலை பறித்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் உள்ளது.
இந்த நிபந்தனைக்கு ஏற்ற எடை அளவுக்கு தேயிலை பறிக்காவிட்டால், இலங்கை ரூ. 300 ஊதியமாக வழங்கப்படும் (இது ஏறக்குறைய 1.30 டாலர்).
மாதந்தோறும் சம்பளம் வழங்குவது, தொழிலாளர்களுக்கு தற்காலிக கடனுதவிகள் வழங்குவது போன்ற வேறுப்பட்ட ஊதிய மாதிரிகளை சில தேயிலை தோட்டங்கள் பயன்படுத்துகின்றன.
இலங்கை தேயிலை தோட்ட தொழிலாளர்களில் பெரும்பாலோர், தேயிலை தோட்டங்களில் வேலை செய்ய பிரித்தானியரால் அழைத்து வரப்பட்ட இந்தியாவை சேர்ந்த தமிழர்கள் ஆவர்.
இலங்கையின் வடக்கிலிருந்து தோன்றிய யாழ்பாண தமிழர்களை விட இந்த தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வேறுப்பட்டவர்கள்.
தேயிலை தோட்டங்களில் இருந்து தொழிலாளர்களின் வீட்டை மண் சாலைகள் இணைக்கின்றன.
சரிவான குன்றுகளின் பக்கவாட்டில் ஒரு மீட்டர் இடைவெளியில் தேயிலை செடிகள் வளர்க்கப்படுகின்றன.
மலையின் உயரம் தேயிலையின் சுவையில் பாதிப்பு ஏற்படுத்துகிறது. உயரம் அதிகரிக்க அதிகரிக்க அவ்விடங்களில் விளைகின்ற தேயிலை, சுவை மிகுந்ததாக இருக்கும்.
உயரம் குறைந்த மலைகளில் பயிரிடப்படுவதைவிட அதிக உயரமுடைய மலையில் பயிரிடப்படும் தேயிலைக்கு அதிக மதிப்பு உள்ளது.
தேயிலை பறிக்கும் மூத்த தொழிலாளர்களின் கரங்கள் கரடுமுரடாக இருக்கின்றன.
இந்த தேயிலை தொழிலை செய்வதால் ஏற்படும் உடல் ரீதியான கஷ்டங்களால், தேயிலை பறிப்பதற்கு வரும் இளம் தொழிலாளர்கள் குறைந்துள்ளனர்.
தேயிலை தோட்டங்களில் உழைப்பதைவிட, ஆடை தொழிற்சாலைகள் அல்லது வெளிநாடுகளில் வீட்டுப் பணியாளராக வேலை செய்வதை பல பெண்கள் தெரிவு செய்கின்றனர்.
உரிமையாளர் தொடங்கி தேயிலை பறிப்போர் வரை 4 வேறுபட்ட அதிகார நிலைகள் சிறிய தேயிலை தோட்டங்களில் இருக்கலாம்.
ஒவ்வொரு நிலையும், அதற்கு கீழள்ள நிலையில் இருப்போரின் வேலைகளை மேற்பார்வை செய்கிறது.
தேயிலை பறிக்கும் தொழிலாளர்களுக்கு 20 ஆயிரம் அறைகள் என்று 1920ம் ஆண்டு பிரித்தானியர் கட்டிய வீடுகள் சிலவற்றில் மக்கள் இன்னும் வாழ்கின்றனர்.
இந்த கட்டடங்கள் இப்போது சற்று மாற்றம் அடைந்துள்ளன.
வண்ணமயமான முகாம் பாணியிலான வீடுகளின் கிராமிய அமைப்பில் குடும்பங்கள் தங்களின் குழந்தைகளை வளர்க்கின்றனர்.
பல கட்டடங்களில் ஒவ்வொரு நாளும் சில மணிநேரமே மின்சாரம் அல்லது நீர் வசதி இருக்கும் அல்லது இந்த வசதிகளே இருக்காது.
சலவை செய்வது அல்லது குளிப்பது போன்ற அன்றாட கடமைகள் ஊற்றுகளிலும், நதிகளிலும் கிடைக்கின்ற நீரால்தான் நடைபெறுகின்றன.
சில பகுதிகளிலுள்ள வீடுகளில் ஒவ்வொரு மூன்று நாளுக்கு ஒரு முறைதான் நீர் வழங்கப்படுவதால், நீரை கொள்கலனில் சேகரித்து வைத்துகொள்ள வேண்டும்.
தேயிலை பறிப்போரும், பிற தோட்ட தொழிலாளர்களும் காலை 7.30 மணிக்கு வேலையை தொடங்குகின்றனர்.
இந்த தேயிலை தோட்டங்களில் வாழும் சமூகங்களில் இருந்து படிக்கின்ற குழந்தைகள் பல கிலோமீட்டர் தூரம் நடந்துதான் பள்ளிக்கு செல்ல வேண்டியுள்ளது.
தேயிலை பறிக்கும் தொழிலில் குறைந்த வருமானமே வருவதால், தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபட்டுள்ள சில குடும்பங்களின் ஒரு சில உறுப்பினர்கள் மத்திய கிழக்கு நாடுகளில் அல்லது இலங்கையிலுள்ள பிற நகரங்களில் வேலை செய்து வீட்டிற்கு பணம் அனுப்பி வருகின்றனர்.
தேயிலை தோட்டங்களில் வேலை செய்கின்ற பெண்கள், சமையல், சுத்தம் செய்தல் மற்றும் குழந்தைகளை கவனித்தல் போன்ற வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியுள்ளது.
தேயிலையிலுள்ள ஈரப்பதத்தை எடுத்துவிடுவதற்காக வெப்பக்காற்றை வீச செய்து “உலர செய்தல்” பதனிடுவதன் முதல்படியாகும். அப்போது அந்த தேயிலை நெகிழ்வாகின்றது.
புதிதாக பறித்த 18 கிலோ தேயிலையை, அதன் தோட்ட தொழிற்சாலைகளில் பதனிட்ட பின்னர், 5 கிலோ சிலோன் தேயிலை கிடைக்கலாம்.
உலர்ந்த தேயிலையை சுழல் எந்திரத்தில் போட்டு சுழல செய்யும்போது, தனிப்பட்ட சுவையை உருவாக்கும் நொதி முறை தொடங்குகிறது.
தேயிலையை பதனிடுவதற்கு பயன்படுத்தப்படும் எந்திரங்கள் பொதுவாக 100 ஆண்டுகள் பழமையானவை.
பதனிடப்பட்ட தேயிலையில் இருக்கின்ற இலைகளின் அளவை கொண்டு பிரிக்கப்படுகின்றன.
இலங்கையின் தலைநகரான கொழும்பில் ஏலத்தில் விற்கப்படுவதற்காக பெரிய பைகளில் அவை அனுப்பப்படுகின்றன.
சிலோன் தேயிலை என்பது ஓர் ஏற்றுமதி பொருளல்ல.
அலுவலக பணியாளாகள். தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் அனைவராலும் பயன்படுத்தப்படுகின்ற இலங்கையின் அன்றாட வாழ்வின் முக்கிய பகுதியாக சிலோன் தேயிலை உள்ளது.