1எம்டிபி விவகாரத்தில் பராமரிப்பு பிரதமர் நஜிப் ரசாக்கை சிக்கவைக்கும் எதுவும் நாடாளுமன்ற பொதுக்கணக்கு குழுவின் (பிஎசி) அறிக்கையில் இல்லை என்று டிஎபியின் மூத்த தலை”வர் டான் செங் கியாவ் கூறியிருந்ததை பிஎன் பெரிதுபடுத்திக் கொண்டிருக்கிறது.
1எம்டிபி விவகாரத்தில் நஜிப்புக்கு எதிரான பக்கத்தான் ஹரப்பான் தாக்குதலை எதிர்க்கும் வகையில் பிஎன் அதன் அதிகாரப்பூர்வமான முகநூல் பக்கத்தில் இன்று செங் கியாவுடான 1 நிமிடம் 32 வினாடிகள் நீடிக்கும் ஒரு வீடியோ நேர்காணலை பதிவு செய்துள்ளது. அதில் அவர் ஏப்ரல் 2016 இல் அக்குழுவின் உறுப்பினராக இருந்த போது கூறியதை மீண்டும் கூறுகிறார்.
“பிஎசி அறிக்கை இருக்கிறது. அது இன்றுவரையில் வெளியிடப்படவில்லை. ஆனால் நான் அதன் முழு விபரத்தையும் பார்த்திருக்கிறேன்.
“இதற்கான முக்கிய குற்றம் அன்றைய 1எம்டிபி தலைமை செயல்முறை அதிகாரியின் மீது விழுகிறது”, என்று செங் கியாவ் கூறினார். இந்த விவகாரத்தில் அவர் முன்பு கூறியிருந்ததை நிலைநிறுத்திக் கொண்டார்.
இந்த நேர்காணலை யார் நடத்தியது என்பது தெளிவாக்கப்படாத வேளையில், அந்த வீடியோ பதிவு செங் கியாவ்வை முன்னாள் கெப்போங் நாடாளுமன்ற உறுப்பினர் என்று அடையாளப்படுத்துகிறது.
செங் கியாவ்வின் அறிக்கையைப் பயன்படுத்தி. நஜிப் அவருக்கு எதிராகச் சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளிலிருந்து தம்மை தற்காத்துக் கொண்டுள்ளார்.
செங் கியாவ்வின் அறிக்கைக்குப் பின்னர் பிஎன் ஆதரவு ஊடகங்கள், த நியு ஸ்டிரேட்ஸ் டைம்ஸ் மற்றும் பெரித்தா ஹரியான் உட்பட, அவரை நேர்காணல் செய்துள்ளன.
சில நாள்களுக்கு முன்னர், 1982 ஆண்டிலிருந்து தம் வசமிருந்த கெப்போங் நாடாளுமன்ற தொகுதியை எதிர்வரும் தேர்தலில் தற்காக்க விரும்புவதாக அவர் கூறியிருந்தார்
அடுத்த மாதத்தில் தமது 76 ஆவது வயதைக் கொண்டாடவிருக்கும் செங் கியாவ் தாம் இன்னும் கெப்போங்கில் பலமாக இருப்பதாக கூறிக்கொண்டார்.