“வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் எங்கள் கட்சியுடன் வந்து இணைவதையே நாங்கள் விரும்புகின்றோம். எங்களுக்கு அவரிடம் கேட்பதற்கான உரிமையுமிருக்கிறது.” என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “ஒருவேளை தனது ஆதரவாளர்களுடன் எங்கள் கட்சி உறுப்பினராக இணைந்து கொள்ள அவருக்கு விருப்பமில்லையென்றால், அவருடைய தரத்திற்கு அது ஒருவேளை குறைவாகவிருந்தால் அல்லது தனக்கென ஒரு தளத்தை அவர் உருவாக்க விருப்பம் கொண்டிருந்தால், ஒரு கட்சி உருவாக்குவதில் எங்களுக்கு எவ்வித ஆட்சேபனையுமில்லை. அதனை நாங்கள் வரவேற்கின்றோம்.
ஆனால், கட்சியை உருவாக்கிய பின்னர் ஒரு தனிக்கட்சியாகச் செயற்படுவது தொடர்பில் விக்னேஸ்வரன் ஐயா ஆழமாகச் சிந்திக்க வேண்டும். அவ்வாறு அவர் செயற்படுவதானது நேர்மையான அரசியலுக்குரிய வாக்கு வங்கியைப் பிரிப்பதாகவே அமையும்.
கடந்த 2010 பெப்ரவரி மாதம் 10ஆம் திகதிக்குப் பின்னர் தொடர்ச்சியாக எட்டு வருடங்களாக எங்கள் மக்களுக்குப் பலவித உண்மைகளைச் சொல்லி ஒரு மாற்று அணிக்குரிய அத்திவாரத்தை இட்டுள்ள நிலையில், விக்னேஸ்வரன் ஐயா இதற்குத் தகுந்த ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
விக்னேஸ்வரன் ஐயா கொள்கையளவில் எங்களுக்கு முழுமையாக ஒத்துழைக்கக் கூடிய தலைவராகக் காணப்படும் நிலையில் எங்களுடன் இணைந்து செயற்பட முன்வருமாறு ஆரம்பம் முதல் கேட்டு வருகிறோம். அவர் ஒரு கட்சியைத் தொடங்கிய பின்னர் தனிப் போக்கில் செயற்படுவாரெனில் அது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும், தேசியத்திற்கு மாறான தரப்பினருக்கும் மட்டும் தான் வாய்ப்பை வழங்கும். எனவே, அவர் தனிக் கட்சியை ஆரம்பித்து விட்டு தனியாகச் செயற்பட முடியாது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஒரு கூட்டுக்கு வந்தேயாக வேண்டும்.
விக்னேஸ்வரன் ஐயா தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவராகக் காணப்படும் நிலையில், தமிழ் மக்கள் பேரவையின் தீர்வுத் திட்டத்தை முன்வைத்தே நாங்களனைவரும் ஒன்றிணைய வேண்டும். அவர் ஒரு தனிக்கட்சியை ஆரம்பித்த பின்னர் புளொட் அல்லது ஈ.பி. ஆர். எல்.எவ் அணியுடன் இணைந்து கொள்வாரானால், நாங்கள் அது தொடர்பில் சிந்திக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவோம்.
விக்னேஸ்வரன் ஐயா மீது நானும், எங்கள் கட்சியும் மதிப்பு வைத்துள்ளமைக்கான காரணம் அவரொரு நேர்மையான அரசியலைக் கடைப்பிடித்தமையே ஆகும். அவருக்கென ஒரு கட்சி இல்லாமலிருந்தும் கூட எமது மக்கள் அவரை ஆதரித்தமைக்கான பிரதான காரணமாக இதுவே அமைந்துள்ளது. கொழும்பை மையப்படுத்திய பின்னணி அனைத்தையும் துண்டித்து எமது மக்களின் குரலாக ஒலித்து வருவதுடன் பல்வேறு அழுத்தங்கள் வந்த போதும் அந்த அழுத்தங்களுக்குத் துணைபோகாமல் கொள்கை வழியில் உறுதியாக நிற்கின்றமையே அவருக்கான ஆதரவுத் தளம் பலமாக உள்ளமைக்கான காரணம். ஆகவே, அந்த உறுதியான கொள்கையை முன்கொண்டு செல்வதற்கு யாரைத் தன்னுடன் இணைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் அவர் கவனம் செலுத்த வேண்டும்.
வெறுமனே கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக நாங்கள் ஒரு கூட்டை உருவாக்குவதால் எந்தவிதப் பயனுமில்லை. அவர் எடுக்கின்ற முடிவு எமது இனத்தின் எதிர்காலம் சம்பந்தப்பட்ட முடிவாக அமைந்துள்ள காரணத்தால் காத்திரமான முடிவுகளை எடுக்க வேண்டுமென விக்னேஸ்வரன் ஐயாவை மிகவும் பணிவுடனும் உரிமையுடனும் வேண்டிக் கொள்கின்றோம்.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உண்மையான முகத்தைப் பார்த்து எங்கள் மக்கள் தெளிவடைந்துள்ளதொரு சூழலில் எமது மக்கள் மாற்று அணியைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறான நிலையில் நாங்கள் தெளிவான பாதையை நோக்கி எமது அரசியல் பயணத்தை முன்னெடுக்க வேண்டுமே தவிர குழப்பும் வகையில் அமையக் கூடாது. நான் அறிந்த வகையில் விக்னேஸ்வரன் ஐயா நான் சொன்ன ஆபத்துக்களைத் தவிர்த்து நேரிய பாதையில் செயற்படுவாரென்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.” என்றுள்ளார்.
-4tamilmedia.com