சம்பந்தனுக்கு எதிரான சமரை மகிந்த அணி கைவிடுகிறது
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராகப் பொது எதிரணியால் கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பிற்போடுமாறு முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தனது சகாக்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார் என்று அறியமுடிகின்றது.
தேசிய அரசுடன் கைகோர்த்துச் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிராக வடக்கில் பெரும் மக்கள் சக்தியொன்று எழுச்சியடைந்து வருகின்றது.
குறிப்பாக உள்ளூராட்சி சபைத் தேர்தலையடுத்து உள்ளூராட்சி சபைகளின் அதிகாரங்களைக் கைப்பற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்த நடவடிக்கைகள் மற்றும் சமகாலத்தில் அவர்கள் அரசியல் ரீதியில் செயற்படும் விதம் தொடர்பில் வடக்கு மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
எதிர்வரும் காலத்தில் சம்பந்தனுக்கு வடக்கு மக்கள் தகுந்த பாடமொன்றைப் புகட்டக்கூடிய நிலை எழுச்சி பெற்றுள்ளது. தற்போதைய சூழலில் அவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைப் பொது எதிரணியினரான நாம் கொண்டுவருவது பொருத்தமானதாக அமையாது என்று தனது சகாக்களுக்கு மகிந்த ராஜபக்ச எடுத்துரைத்துள்ளார் என்று தெரியவருகின்றது.
இதனையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையைப் பொது எதிரணி கைவிடத் தீர்மானித்துள்ளது எனப் பொது எதிரணியின் தகவல் அறியும் வட்டாரங்களில் இருந்து அறியமுடிகின்றது.
சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக்காவிடின் சபாநாயகருக்கு எதிராகத் எதிர்க் கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதில் அர்த்தமில்லை. அவராகவே பதவி விலகுவதே சிறந்தது.
ஆனால் சம்பந்தனை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து நீக்காவிட்டால் சபாநாயகருக்கு எதிராகச் செயற்படுவதற்கும் கூட்டுஎதிரணி நடவடிக்கை எடுத்து வருகின்றது என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன முன்னர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
-tamilcnn.lk