இலங்கை தெற்காசிய பிராந்தியத்தின் தங்க கடத்தில் மத்திய நிலையமாக மாறியுள்ளமை உறுதியாகியுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவின் மும்பை நகருக்கு தங்கத்தை கடத்திச் செல்ல முயற்சித்த இலங்கையை சேர்ந்த கணவனும் மனைவியும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நேற்று கைதுசெய்யப்பட்டதை அடுத்த இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கைதுசெய்யப்பட்ட இந்த சந்தேக நபர்களிடம் இருந்து 91 லட்சத்து 13 ஆயிரத்து 850 பெறுமதியான தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் கூறியுள்ளனர். குறித்த கணவனும் மனைவியும் நேற்று அதிகாலை 5.45 அளவில் புறப்பட்டுச் செல்லவிருந்த ஜெட் எயாரவேஸ் விமானத்தில் மும்பை நோக்கி புறப்படவிருந்ததாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
அதேவேளை இலங்கையில் இருந்து மேற்கொள்ளப்படும் பெருமளவிலான தங்க கடத்தலை கட்டுப்படுத்தவே, இறக்குமதி செய்யப்படும் தங்கத்தின் பெறுமதிக்கு அமைய 15 வீத சுங்க வரியை அறவிட நிதியமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த சுங்க வரி அறிமுகப்படுத்தப்படுவதால், தங்கம் இறக்குமதி செய்யப்படுவதை கட்டுப்படுத்த முடியும் என சுங்க திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும் தங்கம் சட்டவிரோதமான முறையில் வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்லப்படுவதால், நாடு, பெருந்தொகையான பணத்தை மட்டுமல்லது, வெளிநாட்டு அந்நிய செலாவணியையும் இழந்து வருவதாக சுங்க திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் தங்கத்திற்கு இதுவரை அறவிடப்பட்டு வந்த 9 வீத மானிய வரியை பயன்படுத்தி பெருந்தொகையான தங்கம் இறக்குமதி செய்யப்பட்டு வந்துள்ளது. தங்கம் பெருமளவில் இறக்குமதி செய்யப்பட்ட போதிலும் நாட்டில் தங்கத்தின் விலை குறையவில்லை என்பதுடன் ஏற்றுமதியும் அதிகரிக்கவில்லை.
இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக தங்கம் கடத்தப்படுவதே இதற்கு காரணம் எனவும் சுங்க திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல் வழியாகவும் விமானம் மூலம் பெருந்தொகை தங்கம் கடத்தப்படுகிறது. மிகவும் சூட்சுமமான முறையில் இந்த தங்க கடத்தல் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது.
-tamilcnn.lk