இளைஞர் மாநாட்டைக் கூட்டுகிறார் முதலமைச்சர் விக்னேஸ்வரன்

இளைஞர் மாநாடு ஒன்றை எதிர்வரும் ஜூன் மாதம் நடத்துவதற்கு தமிழ் மக்கள் பேரவை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

போருக்குப் பிந்திய சூழலில், ஆற்றலைக் கட்டியெழுப்பி, இளைஞர்களுக்கு வலுவூட்டும் நோக்கிலும் இளைஞர்களின் பொதுவான பிரச்சினைகளை முன்வைத்தும், இந்த மாநாடு நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு, கிழக்கில் உள்ள இளைஞர் அமைப்புகளை ஒன்றிணைத்து இந்த மாநாட்டை நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் பேரவையின் கடைசி கூட்டத்தில் இந்த இளைஞர் மாநாடு தொடர்பாக முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவித்திருந்தார். இதற்கமைய, வரும் ஜூன் மாதம் இந்த மாநாட்டை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வடக்கு மாகாண சபைத் தேர்தலில், தனிக் கட்சி அல்லது புதிய கூட்டணி ஒன்றை அமைத்துப் போட்டியிடும் வாய்ப்புகள் இருப்பதை முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மைய அறிக்கை ஒன்றில் சுட்டிக்காட்டியிருந்தார்.

இந்தநிலையில், புதிய அரசியல் அணியொன்றை அமைக்கும் நகர்வுகளின் முதற்கட்டமாகவே, இளைஞர் மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த மாநாட்டில் தமது அரசியல் எதிர்காலம் பற்றிய முடிவை முதலமைச்சர் விக்னேஸ்வரன் அறிவிக்கக் கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

-puthinappalakai.net

TAGS: